உள்ளடக்கத்துக்குச் செல்

சதபத பிராமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதபத பிராமணம் என்பது வேதக் கிரியைகள், சுக்ல யசுர் வேதத்தோடு தொடர்புடைய வரலாறுகள் தொன்மங்கள் ஆகியவற்றை விளக்கும் ஒரு உரைநடை நூல் ஆகும்.[1] இதன் பெயர் "நூறு பகுதிகளைக் கொண்ட பிராமணம்" என்னும் பொருள் கொண்டது. இந்நூல், பலிபீடங்களை உருவாக்குதல், சடங்குப் பொருட்கள், சடங்குகளுக்கான மந்திரங்கள், சோம பானம் என்பவற்றோடு சடங்குகளின் ஒவ்வொரு அம்சம் தொடர்பிலுமான குறியீடுகள் குறித்தும் விரிவாக விளக்குகின்றது.

காலம்[தொகு]

மொழியியல் அடிப்படையில் சதபத பிராமணம் வேதகால சமசுக்கிருதத்தின் பிராமணக் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தது. இது இந்தியாவின் இரும்புக் காலத்தில் பொ.கா.மு. (பொதுக் காலத்துக்கு முன்) 8வது முதல் 6வது நூற்றாண்டு வரையான காலப்பகுதியாகும்.[2] ஜான் என். பிரேமெர் இதன் காலம் ஏறத்தாழ பொ.கா.மு. 700 என்கிறார்.[3] இப்பிராமணத்தின் வாஜசனேயி மாத்தியந்தின உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜூலியஸ் எக்கெலிங் என்பார் இதன் சில பகுதிகள் மிகப் பழையவை எனினும், பிந்திய பகுதிகள் பொ.கா.மு. 300 காலப்பகுதிக்குரியவை எனக் கூறுகின்றார்.[4]

உள்ளடக்கம்[தொகு]

இப்பிராமணம் இரண்டு வேறுபட்ட வடிவங்களில் கிடைத்துள்ளது. ஒன்று "வாஜசனேயி மாத்தியந்தின" வடிவம் மற்றது "காண்வ" வடிவம். "வாஜசனேயி மாத்தியந்தின" 100 அத்தியாயங்களையும், 14 காண்டங்களில் 7,624 காண்டிகங்களையும் கொண்டது. "காண்வ" வடிவத்தில் 104 அத்தியாயங்களும், 17 காண்டங்களில் 6,806 காண்டிகங்களும் உள்ளன.

மாத்தியந்தின வடிவத்தின் 14 காண்டங்களையும் இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் ஒன்பது காண்டங்களும் இப்பிராமணத்துக்கு இணையான யசுர் வேதத்தின் சங்கிதையின் முதல் 18 காண்டங்களும் உரை விளக்கங்கள் ஆகும். ஏனைய ஐந்து காண்டங்களில் 14வது காண்டத்தின் பெரும்பகுதியாகக் காணப்படும் பிருகதாரண்யக உபநிடதத்தைத் தவிர மேலதிக விவரங்களும், சடங்கு சார்ந்த புதிய விடயங்களும் அடங்குகின்றன.

இந்த நூலில் உள்ள ஆர்வத்துக்குரிய பகுதிகளில், மனுவின் பெருவெள்ளம், படைப்பு என்பன தொடர்பான தொன்மங்களையும் உள்ளடக்கிய தொன்மப் பகுதிகள் முக்கியமானவை.[5][6] படைப்பு தொடர்பான தொன்மம் பிற படைப்புத் தொன்மங்களுடன் பல ஒப்புமைகளைக் கொண்டுள்ளது. நீர் மூலப் பயன்பாடு (விவிலியத்தை ஒத்தது), ஒளியும் இருளும் தொடர்பான விளக்கம், நல்வினை தீவினைப் பிரிவுகள், காலம் குறித்த விளக்கம் என்பன மேற்கூறிய ஒப்புமைகளுட் சில.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jones, Constance (2007). Encyclopedia of Hinduism. New York: Infobase Publishing. p. 404. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0816073368.
  2. Keith, Aitareya Āraṇyaka, p. 38 (Introduction): "by common consent, the Satapatha is one of the youngest of the great Brāhmaṇas"; footnotes: "Cf. Macdonell, Sanskrit Literature, pp. 203, 217. The Jaiminiya may be younger, cf. its use of ādi, Whitney, P.A.O.S, May 1883, p.xii."
  3. Jan N. Bremmer (2007). The Strange World of Human Sacrifice. Peeters Publishers. pp. 158–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-429-1843-6. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.
  4. The Satapatha Brahmana. Sacred Books of the East, Vols. 12, 26, 24, 37, 47, translated by Julius Eggeling [published between 1882 and 1900]
  5. Klaus K. Klostermaier (2007). A Survey of Hinduism. SUNY Press. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-7082-2.
  6. Sunil Sehgal (1999). Encyclopaedia of Hinduism: T-Z, Volume 5. Sarup & Sons. p. 401. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7625-064-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதபத_பிராமணம்&oldid=3531007" இலிருந்து மீள்விக்கப்பட்டது