சண்டிகேசுவரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சண்டிகேசுவரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவின் பொழுது சிவாலயங்களிலிருந்து இவருடைய உற்வசர் சிலையும் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவில் இறுதியாக இவர் வலம் வருகிறார்.

சண்டிகேசுவரர்கள்[தொகு]

சிவபெருமான் அளிக்கும் சண்டிகேசுவரர் பதவி யுகத்திற்கு யுகம் வேறு வேறு நபர்களுக்கு அளிக்கப்படுகிறது. சிவாகம புராணங்களில் ஒவ்வொரு யுகத்திற்கும் சண்டிகேசுவரர்கள் உள்ளார்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவாகம புராணங்களின் படி கீழுள்ள பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாவிற்கு சண்டிகேசுவர பதவி[தொகு]

படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் சண்டிகேசுவர பதவியில் இருந்துள்ளார். இவரை சதுர்முக சண்டீசர் என்று அழைப்பர். இவர் நான்கு முகத்தோடு இருக்கிறார். [1]

யமனுக்கு சண்டிகேசுவரர் பதவி[தொகு]

தர்மத்தின் கடவுளாக உள்ள யம தேவன், சண்டிகேசுவரர் பதவியில் இருந்தவர். தமிழகத்தில் சில சிவாலயங்களில் சண்டிகேசுவரராக யம தேவன் உள்ளார். திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாரூர் போன்ற சிவாலயங்களில் யமன் சண்டிகேசுவரராக உள்ளார். இவரை யம சண்டிகேசுவரர் என்று அழைக்கின்றனர்.

நாயன்மாருக்கு சண்டேசுவர பதவி[தொகு]

விசாரசருமருக்கு சண்டிகேசர் பட்டம் தருகின்ற சிவபெருமான்

ஏழாம் நூற்றாண்டில் விசாரசருமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஒரு முறை இடையச் சிறுவன் ஒருவன் தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, வெகுண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூசைக்கு பயன்படுத்தினார். இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள்.

விசாரசருமர் மண்ணில் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிசேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூசையை தடுக்கச் சென்றார். விசாரசருமர் சிவபெருமானிடத்தில் தன்னை மறந்திருந்தமையால், தந்தையின் வருகையை அறியாதிருந்தார். அதனால் விசாரசருமரின் தன்னுடைய கோபத்தால், சிவாபிசேகத்திற்கு வைத்திருந்த பாலினை தட்டிவிட்டார். சிவனை நிந்தை செய்த தந்தையை தண்டிக்கும் பொருட்டு அருகிலிருந்து குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது விசாரசருமரின் பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது.

விசாரசருமர் தனது பூசையை தொடர்ந்தார். இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன் தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டேசுவர பதவியை அளித்தார். அதன் பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய காலம் கிபி-400-1000 என்று கருதப்படுகிறது.

சந்நிதி[தொகு]

சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்' என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

உருவ தோற்றம்[தொகு]

பெரும்பாலும் சண்டிகேசுவரர், தன்னுடைய ஆயுதமாக மழுவுடன் காணப்படுகிறார். மழு என்பது சிவபெருமானுடைய ஆயுதமாகும். சிவாலயங்களின் கோமுகி அருகே அமர்ந்த நிலையில் உள்ளார். உற்சவராக இருக்கும் சண்டிகேசுவரர் நின்ற நிலையில் உள்ளார்.

ஆலயங்கள்[தொகு]

  • இரட்டை சண்டிகேசுவர் - திருநாரையூர் சௌந்தரேசுவரர் கோவிலில் இரட்டை சண்டிகேசுவரர் சந்நிதி உள்ளது. இங்குள்ள மூலவருக்கு ஒன்றாகவும், பிரகாரத்தில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒன்றாகவும் அமைந்துள்ளது. [2]
  • குகசண்டிகேசுவரர் - மயானம் பிரம்மபுரீசுவர் கோயிலில் இரு சண்டிகேசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சிங்கார வேலர், பிரம்மபுரீசுவரர் இருவருக்கும் சேர்த்து குகசண்டிகேசுவரர்கள் அமைந்துள்ளார்கள். [3]

நம்பிக்கைகள்[தொகு]

  • சண்டிகேசுவரர் சன்னதியில் அவர் தியானத்தில் இருப்பதால் அவரை வலம் வருதல் கூடாது.
  • அவர் ஆலய கணக்கராக இருப்பதால், தாங்கள் சிவ பொருள் எதையும் எடுத்துச் செல்வதில்லை என தெரிவிக்க கைதட்டி வழிபாடு செய்தல்.
  • ஆடையை இவருக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் பிறகு நூலெடுத்துப் போடுவதாக மருவியுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4732&ncat=20&Print=1
  2. திருநாரையூர்
  3. குமுதம் பக்தி ஸ்பெசல் ஜூலை 16-31-2013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிகேசுவரர்&oldid=3756453" இலிருந்து மீள்விக்கப்பட்டது