சண்டிகர் தலைநகர வட்டாரம்
சண்டிகர் தலைநகர வட்டாரம் (Chandigarh Capital Region) அல்லது பெருநகர சண்டிகர் (Greater Chandigarh) வட இந்தியாவில் சண்டிகர், இந்திய பஞ்சாபின்சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம், அரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா மாவட்டங்களை உள்ளடக்கிய நகரப்பகுதியாகும். இந்த வட்டாரத்தில் சண்டிகர், பஞ்ச்குலா, மொகாலி, சிராக்பூர், குரளி, கரார் நகரங்கள் அமைந்துள்ளன.
இந்த வட்டாரத்தின் வளர்ச்சியை சண்டிகர் நிர்வாகம், பெருநகர மொகாலி மேம்பாட்டு ஆணையம், அரியானா நகரிய மேம்பாட்டு ஆணையம், பஞ்ச்குலா ஆகியன மேற்பார்த்து வருகின்றன.
வெவ்வேறு மாநிலங்களில் இருந்தாலும் தொடர்ச்சியாக வாழும் பகுதிகள் ஒன்றோடொன்று சார்ந்தே இந்த வட்டாரத்தின் பொருளியல் நிலை உருவாகியுள்ளது. இந்த நகரங்களுக்கிடையே மக்கள் போக்குவரத்தும் சரக்குப் போக்குவரத்தும் மிகுதியாக உள்ளது. நாள்தோறும் இவர்கள் பிணைந்துள்ளனர். காட்டாக, சண்டிகரில் பணியாற்றுபவர் சிராக்பூரில் வாழ்வது இயல்பு. உள்ளூர் தொழிலகங்கள் தெராபாசி, லால்ரு, பத்தி போன்ற புறநகர்பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்தப் பிணைப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு சண்டிகர் தலைநகர வட்டாரத்தை அமைக்க கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வட்டார மக்களுக்கு ஒரேபோன்ற, மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும் இந்த வட்டாரத்தில் அடங்கியுள்ள நகரங்களின் நிர்வாகங்களின் பணிகளை ஒன்றிணைப்பதும் இதன் நோக்கமாகும்.[1]
முழுமைத் திட்டங்கள்
[தொகு]இதற்கான 'முழுமைத் திட்டம் 2031' 2013ஆம் ஆண்டு சனவரியில் தயாரிக்கப்பட்டு சண்டிகர் ஒன்றியப் பகுதி நிர்வாகத்தின் ஒப்புமையை 2015இல் பெறப்பட்டுள்ளது.[2]
மொகாலி, புதுச் சண்டிகர், சிராக்பூர், தேராபாசி, கரார், பானூர், ரோபார், இராஜ்புரா, பதேகார் சாகிப் நகரியங்களுக்கு முழுமையான திட்டத்தை பெருநகர மொகாலி நிர்வாகம் திட்டமிடுகின்றது.
பஞ்ச்குலா,பிஞ்சோர்-கல்கா நகரிய வளாகம், பஞ்ச்குலா விரிவாக்கம் 2 ஆகியவற்றிற்கான திட்டமிடுதலை அரியானா நகரிய மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்கின்றது.
அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வண்ணம் சண்டிகர் மெட்ரோ திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம், மொகாலி 2015இல் திறக்க உள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அங்கமேற்கும் நகரியங்களின் மக்கள்தொகை:
தரவரிசை | நகரியம் | பகுதி | மக்கள்தொகை (2011)[3] |
---|---|---|---|
1 | சண்டிகர் | சண்டிகர் | 1,055,450 |
2 | பஞ்ச்குலா | அரியானா | 210,175 |
3 | மொகாலி | பஞ்சாப் | 176,152 |
4 | சிராக்பூர் | பஞ்சாப் | 95,553 |
5 | கரார் | பஞ்சாப் | 60,000 |
6 | குரளி | பஞ்சாப் | 31,060 |
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Decks cleared for Chandigarh Capital Region". The Times of India. Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Chandigarh Capital Region included in Master Plan '31". The Times of India. Archived from the original on 2013-04-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "India: Major Agglomerations". .citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.