சங்க கால வேளாண் மகளிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்க காலத்தில் மருத நிலத்து வேளாண் மகளிர் உழத்தியர் என்ற பொதுச்சொல்லால் அழைக்கப்பட்டனர். வேளாண்மைத் தொழில் செய்யும் மாந்தர் உழவர் எனப்பட்டமை போல் வேளாண் தொழிலுக்குத் துணைபுரிந்த உழவரின் மனைவியர் உழத்தியர் எனப்பட்டனர். மருதநில மக்களின் செயல்பாடுகள் சங்க இலக்கியங்களில் பரவலாகச் சொல்லப்பட்டுள்ளன. உழவர்கள் மாடுகள் பூட்டிய ஏர்களைக் கொண்டு நிலத்தை உழுவர். மகளிர் நெல் நாற்றுக்களை நடும்முன் தம் கால்களால் சேற்றை மிதிப்பர். பின் நெல் நாற்றுக்களை நடுவர்.

  பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின்
  கார்ஏறு பொருத கண்அகன் செறுவின்
  உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்
  முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவல் (புறம். 209-212)

களைகளைப் பறிப்பர். அறுவடை செய்து தலையில் சுமந்து வந்து களத்தில் சேர்ப்பர். நெல்லடித்த பின்பு முறத்தைக் கொண்டு காற்றிலே நெல்லைத் தூற்றி எடுப்பர்.

  புனல் ஆடு மகளிர் கதுமென் குடைய
  கூனி குயத்தின் வாய்நெல் அரிந்து
  .......................
  .......................
  சாலிநெல்லின் சிறைகொள்வே     (பெரும்பாண். 241-247)

தானியங்களைக் குதிர்களில் சேமித்து, தானும் உண்டு பிறருக்கும் கொடுத்து வாழ்வார்கள்.