சங்கமித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கமித்ரா என்பவர் பகுத்தறிவு அறிஞர் ஆவார். தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பியவர். எழுத்தாளர், நூலாசிரியர், இதழியலாளர் எனத் தகுதிகளைக் கொண்டவர்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

சங்கமித்ராவின் இயற்பெயர் பா.இராமமூர்த்தி ஆகும். நாகை மாவட்டம் சன்னாவூரில் பிறந்தார். முதுவணிகவியல் பட்டமும் வங்கிவியல் பட்டமும் சட்டத் துறையில் பட்டமும் பெற்றார். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் திறம் கொண்டவர்.

வங்கிப்பணி[தொகு]

முதலில் வாழ் நாள் காப்பீட்டுக் கழகத்திலும் பின்னர் இந்திய மாநில வைப்பகத்திலும், அதிகாரியாகப் பணி செய்தார். 26 ஆண்டுகள் வங்கிப் பணி ஆற்றிவிட்டு விருப்ப ஒய்வு பெற்றார்.

எழுத்துப் பணி[தொகு]

வைப்பகத்தில் வேலை செய்தபோதிலும் 'சங்கமித்ரா' என்னும் புனைப் பெயரில் ஏராளமான கட்டுரைகளை விடுதலை நாளேட்டில் எழுதினார். உண்மை என்னும் மாத இதழில் சில காலம் ஆசிரியர் பொறுப்பை ஏற்று எழுதி வந்தார். 1970 முதல் 1984 வரை விடுதலை ஏட்டில் எழுதி வந்தார். வேத இதிகாச புராண ஆகம நெறியைத் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கவும் ஒழிக்கவும் வேண்டும் என்று கருதினார். திராவிடர் கழக ஏடான விடுதலை, சங்கமித்திராவுக்குத் தளம் அமைத்துக் கொடுத்தது. மாநில வைப்பகத்தில் நிகழ்ந்த பார்ப்பன வல்லாண்மையைத் தொடர்ந்து வெளிப் படுத்தினார். 'காஞ்சிப் பெரியவாளின் கல்கி முகாரி' என்னும் தலைப்பில் விடுதலையில் தொடர்ந்து எழுதினார். பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணியம், தலித்தியம், தொழில், வணிகம் தன் முன்னேற்றம் ஆகிய துறைகளைப் பற்றி பலவற்றை எழுதினார். சிந்தனையாளன், கண்ணியம், தேமதுரத் தமிழோசை, புதிய கோடங்கி ஆகிய இதழ்களிலும் தொடர்கட்டுரைகளை எழுதினார். சித்தார்த்தன் என்னும் புனைப்பெயரில் சிந்தனையாளன் இதழில் எழுதினார்.

இதழ்கள்[தொகு]

சங்கமித்ரா ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள் 'தன் முன்னேற்றம்' 'ஒடுக்கப்பட்டோர் குரல்' 'சங்க மித்ரா விடையளிக்கிறார்' ஆகியனவாம். மூன்று குறிக்கோள்களை முன் வைத்தார். அவை முனைப்பு, உழைப்பு, முன்னேற்றம் ஆகும். இதழியலில் அறிவும் அனுபவமும் கொண்டு விளங்கினார்.

நூல்கள்[தொகு]

 • உண்மையின் ஊர்வலங்கள்
 • ரொம்ப சுலபம் -புத்திசாலிக் குழந்தைகளை உருவாக்குவது
 • உழைக்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள்
 • ஊரெங்கும் மனிதர்கள்
 • மிகவும் எளிது வேலை கிடைப்பது
 • இன்றே இப்போதே தொடங்குங்கள் வணிகம்
 • மனக்கவலைக்கு மருந்து
 • என் அண்ணன் மகள் திலகா எழுதிய கடிதங்களின் தொகுப்பு
கடிதங்கள்
 • நண்டு விற்ற காசு நாறாது
 • மிதிபட்ட ரோசாக்கள்
 • செண்பகவல்லி
 • ஒரு எருதும் சில ஓநாய்களும்
 • நானும் என் தமிழும்

இயக்கப்பணி[தொகு]

பெரியார், அம்பேத்கார் கொள்கைகளை வட இந்தியா எங்கும் பரப்புதலில் ஈடுபட்டு வந்த மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கழகத்தின் தலைவர் வே. ஆனைமுத்துவுடன் இணைந்து பணியாற்றினார். பல ஆண்டுகள் ஆனைமுத்துவுடன் கொள்கைச் சுற்றுப் பயணத்தில் உடன் சென்றார். பெரியார் தமிழ்ப் பேரவை என்னும் பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி அதன் வாயிலாகப் பல பேருக்குச் சாதனையாளர் விருதுகள் வழங்கினார். சிற்றிதழ்களை சீரிதழ்கள் என்று வழங்குவதே சிறப்பாக இருக்கும் என்று கருதினார். 2012 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ஏழாம் பக்கலில் காலமானார்.

மேற்கோள் நூல்[தொகு]

 • நானும் தமிழும்- ஆசிரியர் சங்கமித்ரா, பதிப்பாசிரியர்: திருச்சி வே.ஆனைமுத்து, பெரியார் நூல் வெளியீட்டகம், சென்னை-45.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமித்ரா&oldid=2715080" இருந்து மீள்விக்கப்பட்டது