சங்ககால விழாக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககால விழாக்கள் தமிழ்நாட்டில் சங்ககாலத்தில் நடைபெற்றவை. அவை சங்ககாலத்தில் பெரிதும் போற்றப்பட்ட விழாக்கள். இவை சங்கநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மூவேந்தரின் தலைநகரங்களிலும், ஏந்தாக அமைந்த குறிப்பிடத்தக்க இடங்களிலும் அவை நடைபெற்றன. மக்கள் மகிழ்ந்தாடும் விழா, ஆற்றுநீர்-விழா, கடலாடு-விழா, கலம்(நாவாய்) ஓட்டும்-விழா என அவை பலதரப்பட்டிருந்தன.

இந்திர விழா[தொகு]

புகாரில், காவிரியாறு கடலொடு கலக்குமிடத்தில் நடைபெற்ற இந்த விழாவைச் சிலப்பதிகாரம் கானல்வரி என்னும் காதைப்பகுதியில் காணலாம்.

உள்ளிவிழா[தொகு]

வஞ்சியில் உள்ளிவிழா சிறப்பாக நடைபெறும். [1] மணி அரை யாத்து ஆடும் உள்ளிவிழா - இன்றும் மாரியம்மன் கோயில் விழாக்களில் நடைபெறுகிறது

ஓண நன்னாள்[தொகு]

மதுரையில் திருமாலுக்கு உகந்த திருவோண நாளில் விழா நடைபெற்றது. [2]

இன்னிசை முழக்குடன் வேலன் முருகேறி ஆடவும், மகளிரும் மைந்தரும் முருகனைப் பேணித் தழூஉப் பிணைந்து குரவை ஆடவும், ஆட்டும் பாட்டுமாக பேரிசை நன்னன்(முருகன்) பெரும்பெயர் விழாவாகத் தெருவெங்கும் விழா நடந்தது. [3]

பங்குனி விழா[தொகு]

உறந்தை என்னும் உறையூரில், பங்குனி உத்தர நாளில் காவிரியாற்று மணலில் இந்த விழா நடைபெறும். சோழ அரசர்களும் இதில் கலந்துகொள்வர்.[4]

இதனைப் பங்குனி முயக்கம் எனவும் கூறுவர். [5]

புதுப்புனல் விழா[தொகு]

கூடல் என்னும் மதுரையில், வையை வெள்ளத்தில் நடைபெற்ற புதுப்புனல் விழா பற்றிப் பரிபாடலில், வையை என்னும் தலைப்பின் கீழும், மதுரை என்னும் தலைப்பின் கீழும் வரும் பாடல்களில் விரிவாகப் பேசப்படுகிறது. பரிமுக அம்பி, கரிமுக அம்பி போன்றவற்றில் ஏறி உலா வந்தது பற்றியும், அவை முன்புறமாகவும், பின்புறமாகவும் சென்றது பற்றியும் அவற்றில் சொல்லப்பட்டுள்ளன.

புனல்விழா[தொகு]

கழாரில், காவிரியாற்று ஊற்றுநீரில், கரிகாலன் முன்னிலையில், கரிகாலன் மகள் ஆதிமந்தி ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஆட்டனத்தியும், காவிரி என்பவளும் நீச்சல் நடனம் ஆடினர்.

முந்நீர் விழா[தொகு]

பஃறுளியாறு கடலோடு கலக்கும் குமரிமுனையில் இந்த விழா நடைபெற்றது. பாண்டியன் பல்சாலை முதுகுடுமியின் ‘தங்கோ’ முந்நீர் விழவின் நெடியோன். இவன் பஃறுளி ஆற்று மணல்வெளியில் இருந்துகொண்டு யாழிசைப் பாணர்களுக்கு அவ்வாற்றில் வரும் செந்நீர் வெள்ளம் போலப் பொன்னணிகளை வழங்கினான். இவன் முந்நீர் விழா நடத்தியவன். முந்நீர் விழா என்பது நாவாய்த் திருவிழா.[6]

சோழன் கரிகாலனின் முன்னோர் ‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி’ வாணிகம் செய்தவர். [7] சேர அரசன் குட்டுவன் பிற கலங்கள் கடலில் செல்லாவண்ணம் தன் கலங்களை (நாவாய்களை) ஓட்டியவன். இவற்றை ஒப்பிட்டு எண்ணும்போது முந்நீர்விழா என்பது மரக்கல-விழா என்பது தெளிவாகும்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. குடையொடு கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு, உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே - நற்றிணை – சான்றோர் 8 கொங்கர் மணி அரை யாத்து மறுகில் ஆடும் உள்ளிவிழாப் போல அலர் தூற்றுகின்றனர். \அகம் 368
  2. கணங்கொள் அவுணர் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள் போர்மறவர்கள் விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். - மதுரைக்காஞ்சி 591
  3. மதுரைக்காஞ்சி 611-619
  4. குடையொடு கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு, உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே - நற்றிணை – சான்றோர் 8
  5. சோழர் இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண் வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண்மணல் முருகு சாறு தண்பொழில் பங்குனி முயக்கம் - அகநானூறு 137
  6. புறநானூறு 9.
  7. புறநானூறு 35
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககால_விழாக்கள்&oldid=2927521" இருந்து மீள்விக்கப்பட்டது