சங்ககாலத் தீர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கள்ளூர் மக்கள் மன்றத் தீர்ப்பை உவமையாகக் கையாண்டுள்ளார். (அகநானூறு 256)

கள்ளூர் மக்கள் மன்றத் தீர்ப்பு[தொகு]

அழகி ஒருத்தியின் நல்லுடலை ஒருவன் அவளது விருப்பம் இல்லாமல் நுகர்ந்துவிட்டான். கள்ளூர் மக்கள் மன்றத்தில் அவன் முறையிட்டாள். மக்கள் மன்றம் கேட்டபோது அவளை எனக்குத் தெரியாது என்று அந்த அறனிலாளன் பொய் கூறினான். சூள் உரைத்துச் சத்தியமும் செய்தான். மன்றம் சாட்சிகளை வினவி உண்மையைத் தெரிந்துகொண்டது. மன்றம் அவனது சுற்றத்தாரைக் கேட்டது. சுற்றத்தாரில் சிலர் அவன் குற்றவாளி என ஒப்புக்கொண்டனர். சிலர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாத சுற்றத்தாரையும் குற்றவாளி என மன்றம் தீர்மானித்து அவர்களையும் அவனையும் மன்றத்தில் நிறுத்தி அவர்கள் தலையில் சுண்ணாம்புக் கற்களை வைத்துத் தண்ணீர் ஊற்றி நீறாக்கியது. (சுண்ணாம்புக் கல் வேகும்போது உச்சாந் தலையும் வெந்து புண்ணாகும்). இது சங்ககாலத் தீர்ப்புகளில் ஒன்று.

சங்கப்பாடல் (பகுதி)[தொகு]

'தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பு அமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறு தலைப்பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே'

தலைவன் பரத்தையோடு சேர்ந்து நீராடினான். பரத்தையும் அவளது சுற்றத்தாரும் தலைவிக்குத் தெரியாவண்ணம் மறைத்துவிட்டனர். என்றாலும் ஊருக்குத் தெரிந்துவிட்டது. ஊர் கோவை பேசியது. கள்ளூர் அவைக்களம் சிரித்து ஆரவாரித்தது போலத் தலைவனைப் பற்றிப் பேசிச் சிரித்ததாம்.

காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககாலத்_தீர்ப்பு&oldid=1522521" இலிருந்து மீள்விக்கப்பட்டது