சங்ககாலச் சிற்பங்கள், திருப்பரங்குன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலில் சங்க காலச்சிற்பங்கள் காணப்படுவதைப் பரிபாடல் பாடலொன்று குறிப்பிடுகிறது[1]. இவை கல்லில் வடிக்கப்பட்ட புடைப்போவியங்கள். இரண்டு கதைகளை விளக்கும் இந்தச் சிற்பங்கள் இருந்தது பற்றிய குறிப்புகள் அப்பாடலில் வருகின்றன.

பாடல் தரும் செய்தி[தொகு]

காமன், இரதி ஆகியோர் சிற்பங்கள் தனித்தனியாகவும், தழுவிநிற்கும் காட்சியாகவும் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தன. (உடலியல் இன்பத்திற்கான ஆண் வடிவம் காமன் என்றும் பெண் வடிவம் இரதி என்றும் அழைக்கப்படுவது வடநூல் கதை வழக்கு. தமிழில் இவை குறிஞ்சித்திணையின் உரிப்பொருள்.) விழாக் காலத்தில் அங்குச் சென்றவர்களில் சிலர் அச்சிற்பங்களைப் பார்த்து இவை என்ன என்று வினவ, தெரிந்தவர்கள் அவற்றை விளக்கிச் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது.

பதிலளித்தோர், கவுதம முனிவனின் மனைவி அகலிகை. கவுதமன் உருவம் கொண்டு வந்த இந்திரன் அகலிகையை ஏமாற்றி அவளோடு புணர்ந்தான். வெளியில் சென்ற கவுதமன் திரும்பியபோது உண்மை வெளியாயிற்று. இந்திரன் பூசை(பூனை) உருவம் கொண்டு நழுவினான். கவுதம முனிவன் சினம் கொண்டு இருவரையும் சபிக்க அகலிகை கல்லானாள். எனும் கதையை விளக்கும் சிற்பங்கள் இவை என உரைத்ததைப் பாடல் சுட்டுகிறது. [2]

பாடல் குறிக்கும் கதைப் புராணக் கதை. இதில் ஏமாற்றுப் புணர்ச்சி உள்ளதால் தமிழில் வரும் மருதத்திணையின் உரிப்பொருளோடு ஒப்பிட முடியாது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. சங்கம் மருவிய காலமான கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
  2. ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
    'இரதி காமன், இவள் இவன்' எனாஅ,
    விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
    'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்
    சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
    ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்:
    இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
    துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
    நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்
    சோபன நிலையது துணி பரங்குன்றத்து
    மாஅல் மருகன் மாட மருங்கு. (பரிபாடல் 19 அடி 49-59)