சங்ககாலச்சேரர் காசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்ககாலச்சேரர் காசுகள் என்பவை சங்ககாலச் சேரர்களால் வெளியிடப்பட்ட காசுகளாகும். குட்டுவன் கோதை, மாக்கோதை, கொல்லிப்புறை, கொல்லிரும்புறை என்ற சங்ககாலத்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

மாக்கோதை காசு[தொகு]

மாக்கோதை காசு
 • உலோகம் :வெள்ளி
 • எடை :1.1 - 2.1 வரை கிடைத்துள்ளன
 • வடிவம் : வட்டம்
 • அளவு :1.5 - 1.9
 • காலம் :சங்ககாலம்

நாணயவியலாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி இக்காசுகளில் 11 வகையான காசுளைத் தமது நூலில் வெளியிட்டுள்ளார். காசுகளின் எடையும் அளவும் எல்லாக் காசுகளுக்கும் ஒன்று போல் இல்லை. எனவே இக்காசுகளின் எடை சராசரியாக 1 கிராம் முதல் 2 கிராம் வரை எனக் கொள்ளப்படுகின்றன. இந்நாணயத்தைப் பற்றி விளக்கும் இரா.கிருஷ்ணமூர்த்தி நாணயங்களில் வரையப்பெற்றிருக்கும் உருவங்களைக் கொண்டு இதில் இறுதியாகக் கொடுக்கப்பெற்றிருக்கும் உருவம் வயதான தோற்றமுடையதாக இருப்பதானால் இந்நாணயம் ஒரே வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்களால் வெளியிடப்பெற்றுள்ளது. இந்த அரசர்கள் ஒவ்வொருவரும் 25 வருடங்கள் ஆட்சி செய்து வந்தனர் என்று கணிக்கின்றனர். தமிழ்நாடு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மா.பவானி நாணயங்களின் உருவ ஒற்றுமையைக்கொண்டு மாக்கோதையே தனது நடுத்தர வயதிலிருந்து முதிய வயதுவரை இந்நாணயங்களை வெளியிட்டிருக்கலாம் எனக் கருதுகிறார்.[1] மேலும், இந்நாணயத்தின் தலை உருவம் வழுக்கையாகவே காணப்பெறுகின்றது. இதில் மூக்கிற்குப் பின் குடுமி இருப்பதாக ஐ.கே. சர்மா குறிப்பிடுகின்றார்.

காலம்[தொகு]

காசுகள் எவற்றிலும் காலம் குறிக்கப்பெறுவதில்லை. கருவூரில் கிடைத்த இக்காசிற்குக் கிருஷ்ணமூர்த்தி பொ.ஆ.மு. 100 - பொ.ஆ.100 எனக் காலம் கணிக்கிறார். இவர் தலைபொறிக்கப் பெற்ற காசுகள் கிரேக்கர்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டது எனக் கருதுகிறார். கிரேக்கர்கள் தமிழகத்தோடு செய்த வணிகத்தை அடியொட்டி அக்காலத்தைக் கணிக்கிறார். உள்நாட்டு அரசுகளில் குறிப்பாக இந்தியாவிற்குள் முதன் முதலில் தலைப் பொறிப்பு வெள்ளிக் காசுகளை வெளியிட்ட பெருமை சேர அரசர்களை அதுவும் மாக்கோதையையே சாரும் என்கிறார். மாக்கோதை காசிற்கு ஐராவதம் மகாதேவன் பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டென்று காலம் கணிக்கிறார்.

குட்டுவன் கோதை காசு[தொகு]

குட்டுவன் கோதை காசு
 • உலோகம் :வெள்ளி
 • எடை : 2.3 கிராம் கிடைத்துள்ளன
 • வடிவம் : வட்டம்
 • அளவு :1.9
 • காலம் :சங்ககாலம்

குட்டுவன் கோதை பற்றிய நேரடிப்பாடல் ஒன்று இலக்கியத்தில் இடம்பெறுகின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற புலவர் இப்பாடலைப் பாடியுள்ளார். நாணயவியலார்கள் இந்த அரசனே குட்டுவன் கோதை என்ற பெயர் பொறித்த நாணயத்தை வெளியிட்டுள்ளார் எனக் கூறுகின்றனர். குட்டுவன் என்பதும் தனிப் பெயரல்ல. இரண்டும் பொதுப் பெயர்களே. இமயத்தில் கொடிபொறித்த குட்டுவனை இலக்கியம் குறிப்பிடுகின்றது. குட்ட நாட்டை ஆண்டவர்கள் குட்டுவர் எனப் பெயர் பெற்றனர். கோட்டயத்திலிருந்து கொல்லம் வரை உள்ள பகுதியே குட்ட நாடு என்று இராசுகாளிதாசும் குட்டம் அல்லது ஏரிகள் நிறைந்த பகுதி தற்போது கோட்டயம் கொய்லான் என்ற பகுதிகள் உள்ளடக்கியது என கனகசபைப்பிள்ளையும் குறிப்பிடுகின்றனர். குடகுப்பகுதியை ஆண்டவர்கள் குட்டுவர்கள் என சி.இ.இராமச்சந்திரனும் குறிப்பிடுகின்றார். கோதை என்பதும் இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. அகநானூற்றில் கோதை மார்பன் என்ற அரசன் குறிக்கப்பெறுகின்றான். இவனையே பிற இலக்கியங்கள் கோதை எனக் குறிப்பிடுகின்றன. இவரைப்பற்றி நக்கீரர், பொய்கையார், ஆலத்தூர் கிழார் , மாறோக்கத்து நப்பச்சலையார், கோவூர்க்கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மேலும் குட்டுவன் கோதை நாணயமானது சேர அரசர்களிலேயே மிகவும் சிறப்புற ஆட்சி நடத்திய சேரன் செங்குட்டுவனால் வெளியிடப்பெற்றிருக்கலாம் என மா. பவானி கருதுகிறார்.[2]

பொறையர் காசுகள்[தொகு]

 • உலோகம்: செப்பு உலோகத்தாலானவையாகும்.
 • மொழி: தமிழ்
 • எழுத்து: சங்க காலத்தமிழ் எழுத்து (தமிழி)
 • அளவு: இக்காசு 2.2 செ.மீ. விட்டமும் 6.7 கிராம் எடையும் உடையது

புகழூர் கல்வெட்டில் மட்டுமே செல்லிரும்பொறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சொல் கொல்லிரும்புறையை குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே இந்நாணயத்தினை இவர் வெளியிட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லி மலை கூற்றத்தில், பல வேற்படைகளோடு வந்த அதியமானோடு இருபெரு வேந்தரையும் சேர்த்து வென்றுள்ளான். பகைவரின் முரசு குடை அணிகலன் ஆகியவைகளைக் கைப்பற்றியுள்ளான். போர்க்கள வேள்வி செய்துள்ளான். தகடூரை அழித்து அதன் மதிலைக் கைப்பற்றியுள்ளான். எனவே தகடூர் எறிந்த என்ற அடைமொழி கொண்டுள்ளான். ஒருகால் கொல்லிமலையை வென்றதனால் அதன் வெற்றிச் சிறப்பை வெளிப்படுத்தும் பொருட்டு இவர் கொல்லிரும்பொறை என்று பெயர் பொறித்த நாணயத்தை வெளியிட்டிருக்கலாம். சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை உம்பற் காட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்த கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கொங்குநாட்டுக் கருவூருக்கு வந்து அரியணையேறி அரசு புரியலானான். ஒரு வேளை இவனே கருவூர் வந்து ஆளத்துவங்கிய முதல் சேர அரசனாக இருக்கலாம் என மயிலை சீனி. வேங்கடசாமி கருதுகின்றார். மேலும் இவர் புகழூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் பெயர் இவனையே குறிப்பதாக்க் கருதுகிறார். இம்மன்னர்கள் மட்டுமின்றி மாந்தரன் பொறையன் கடுங்கோ சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இவர்களும் பொறை என்ற பின்னொட்டைக் கொண்டுள்ளனர். இவர்களுள் இறுதியாக்க் குறிப்பிடப்பெற்றிருக்கும் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் கொல்லிமலையை வெற்றி பெற்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

காலம்[தொகு]

எழுத்தமைதிக்கொண்டு நோக்குகையில் காசிலுள்ள கொல்லிப்புறை, கொல்லிரும்புறை என்ற எழுத்துகளும் புகளூர் தமிழ் பிராமி கல்வெட்டில் உள்ள செல்லிரும்புறை எழுத்துகளும் காலத்தால் ஒத்ததாகவே தெரிகிறது. இதற்கு காலம் கி.பி 2ஆம் நூற்றாண்டென ஐராவதம் மகாதேவன் கணிக்கிறார். கல்வெட்டுகளில் இடம் பெறும் சேர அரசர்களைப் பதிற்றுப்பத்துப் பாடல்களில் இடம்பெறும் எட்டு ஒன்பது பத்தாம் பத்துக்குரிய தலைவர்களாக ஆர். பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். புகழூர்க்கல்வெட்டில் வரும் கோ ஆதன் செல்லிரும்பொறை என்பவரைச் செல்வக்கடுங்கோன் வாழியாதனாகவும் அதற்கு பின் குறிப்பிடும் பெருங்கடுங்கோனைச் செல்வக்கடுங்கோனின் மகன் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்றும் பெருங்கடுங்கோவின் மகன் மருதம் பாடிய இளங்கடுங்கோ என்பவராக அடையாளம் காட்டியுள்ளார். சங்க இலக்கியங்களைத் திறம்பட ஆய்வு செய்துள்ள வ. குருநாதன் மாந்தரம் பொறையன் கடுங்கோ என்றும் கொச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரச்சேரல் இரும்பொறை என்ற மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒட்டிய காலத்தவன். இவன் தனது மாந்தருஞ்சேரல் இரும்பொறை என்ற பெயரால் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடும் மாந்தரம் பொறையன் கடுங்கோன் என்னும் பெயரால் கடுங்கோவெனும் செல்வக்கடுங்கோ வாழியாதனோடும் ஒற்றுமைப் படுத்தப்படுவதைத் தெளிவுற விளக்குகிறார். அத்துடன் இவன் செல்வக்கடுங்கோவிற்கு தம்பி அல்லது தாயத்தினன் என்றும் கூறி அதை உறுதிப்படுத்தும் இலக்கியச்சான்றுகளை வைக்கின்றார். அத்துடன் கல்வெட்டுக்களில் குறிப்பிடும் மூன்று மரபினை ஒட்டி மாந்தருஞ்சேரல் இரும்பொறையின் வழித்தோன்றலே (மகனே) பாலை பாடிய பெருங்கடுங்கோ என்றும் அவனது மகனே மருதம் பாடிய இளங்கடுங்கோ என்றும் தெளிவுற விளக்குகிறார். மாந்தருஞ்சேரல் இரும்புறை மன்னனும் கொல்லிமலையை வெற்றிக்கொண்டுள்ளார்.[3]

மூலம்[தொகு]

 1. மா. பவானி. "சேர மன்னன் மாக்கோதைக் காசு". தமிழ் இணையக்கல்விக்கழகம் CC-BY-SA 4.0. பார்த்த நாள் 7 செப்டம்பர் 2019.
 2. மா. பவானி. "சேர மன்னன் குட்டுவன்கோதைக் காசு". தமிழ் இணையக்கல்விக்கழகம் CC-BY-SA 4.0. பார்த்த நாள் 7 செப்டம்பர் 2019.
 3. மா. பவானி. "சங்க காலச் சேரர் கொல்லிப்புறை, கொல்லிரும்புறைக் காசுகள்". தமிழ் இணையக்கல்விக்கழகம் CC-BY-SA 4.0. பார்த்த நாள் 7 செப்டம்பர் 2019.

மேற்கோள்கள்[தொகு]

 1. மா. பவானி. "சேர மன்னன் மாக்கோதைக் காசு". தமிழ் இணையக்கல்விக்கழகம் CC-BY-SA 4.0. பார்த்த நாள் 7 செப்டம்பர் 2019.
 2. மா. பவானி. "சேர மன்னன் குட்டுவன்கோதைக் காசு". tamilvu.org. பார்த்த நாள் 7 செப்டம்பர் 2019.
 3. மா. பவானி. "சங்க காலச் சேரர் கொல்லிப்புறை, கொல்லிரும்புறைக் காசுகள்". tamilvu.org. பார்த்த நாள் 7 செப்டம்பர் 2019.