சக்கீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷக்கீரா
Shakira
எக்குவடோரில் இசைச் சுற்றுலாவின் போது ஷக்கீரா.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஷக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல்
பிற பெயர்கள்ஷக்கீ, ஷக்
பிறப்புபெப்ரவரி 2, 1977 (1977-02-02) (அகவை 47) பாரன்கில்லா, கொலம்பியா
இசை வடிவங்கள்இஇலத்தீன் பாப் இசை, எசுப்பானிய ராக் இசை,
தொழில்(கள்)பாடகர்-பாடலாசிரியர், தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)பாடல், கிட்டார், ஹார்மோனிக்கா, drums[1]
இசைத்துறையில்1990 – இன்று வரை
வெளியீட்டு நிறுவனங்கள்சோனி பிஎம்ஜி, எப்பிக்
இணைந்த செயற்பாடுகள்அலெஹான்ட்ரோ சான்ஸ், பியான்சே, குஸ்தாவோ செராட்டி, வைக்லெஃப் ஜான், கார்லோஸ் சான்டானா, மிகெல் போசே
இணையதளம்www.shakira.com

சக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல் (Shakira Isabel Mebarak Ripoll) என்கிற சக்கீரா அல்லது ஷக்கீரா (Shakira) (பிறப்பு: பெப்ரவரி 2, 1977) ஒரு கொலம்பியப் பாடகர், லெபனீசு மற்றும் ஐரோப்பிய மரபுசார்ந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடல் தயாரிப்பாளர், ஆடல்விரும்பி, கொடையாளர். 1990களின் இடையிலிருந்து பாப் இசை மூலமாக இஇலத்தீன் அமெரிக்காவில் அறிமுகம் ஆனவர். எசுப்பானிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஷக்கீரா, சரளமாக ஆங்கிலம், போர்த்துக்கீசிய மொழி, இத்தாலிய, அரபு மொழியும் தெரிந்தவர். லாண்டரி சர்வீஸ் (Laundry Service) என்கிற ஆங்கில இசைத்தொகுப்பின் மூலம் ஆங்கிலம் பேசும் இசைவிரும்பிகளின் இதயத்தில் நுழைந்தார். இந்த இசைத்தொகுப்பு 13 மில்லியன் படிகள் விற்றுத் தீர்ந்தன. இவர், கொலம்பிய கலைஞர்களிலேயே கூடுதல் பணம் ஈட்டும் அளவுக்கு உயர்ந்தார். இவரின் இசைத் தொகுப்புகள் 50 மில்லியன் வரை உலகம் முழுக்க விற்று தீர்ந்தன. இவர், இரண்டு கிராமி விருதுகள், எட்டு இஇலத்தீன் கிராமி விருதுகள், பதினைந்து பில்போர்ட் இசை விருதுகள், மூன்று எம்.டி.வி. இசை விருதுகள், 'மக்கள் விருப்பம்' விருது (People's Choice Award) என்று பல்வேறு விருதுகளை உலகம் முழுக்க பெற்றிருக்கிறார். கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் பில்போர்ட் ஹாட் 100 ல் முதல் இடம்பெற்ற முதல் தென் அமெரிக்க கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைப்போன்றே ஆஸ்திரேலிய ARIA பட்டியலிலும், யுனைடெட் வர்ல்ட் பட்டியல் மற்றும் UK Singles பட்டியலிலும் இடம்பெற்றவர்.

யுனைட்டெட் வர்ல்ட் பட்டியலின் அண்மைய கணக்கின்படி கடந்த பத்தாண்டுகளில் நாலாவது வெற்றிகரமான கலைஞர் என்று ஷக்கீராவை பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். இவரின் தனிபாடல்கள் இரண்டும் ஒரே சமயத்தில் முதல் பத்துக்குள்ளான இடத்தைப் பெற்றிருக்கின்றன. மேலும் இச்சாதனை வேறு எவருக்குமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷக்கீராவுக்கு ஹாலிவுட் நட்சத்திரத் தகுதி விருது ஒன்று வழங்கப்பட இருக்கிறது. இது, முதல் கொலம்பியனாக அவர் பெறும் விருதாக இருக்கும்.

இளமை[தொகு]

ஷக்கீரா , பிப்ரவரி 2, 1977 ல் கொலம்பியாவில் உள்ள பாறங்கீயாவில் (Barranquilla) பிறந்தார். இவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளையாக பிறந்த இவர் எசுப்பானிய, இத்தாலிய மூதாதையர் வழி வந்த கொலம்பியர் ஆவார். ஷக்கீரா என்பதற்கு அரபு மொழியில் "நன்றியுடன்" என்று பொருள். ஷக்கீர் என்ற ஆண்பெயருக்கு எதிர்பாலினமான பெயர். இவரது இரண்டாவது பெயரான இசபெல் அவரது தந்தை வழி பாட்டியைக் குறிக்கும். இதற்கு, "என் கடவுளின் இல்லம்" , "என் கடவுளின் ஆணை" என்று பொருள். இவரது குடும்பப் பெயரான ரிபொல், கடலான் (Catalan) இனப்பெயர். ஷக்கீரா தன் இளமையை பாரன்கில்லாவில் கழித்தார். இந்நகரம் வடக்கு கொலம்பியாவில் அமைந்திருக்கிறது.

ஷக்கீரா " லா ரொசா டே கிரிஸ்டல் " (La Rosa De Cristal - பளிங்கு ரோஜா) என்ற கவிதையை அவரது நான்காவது வயதில் எழுதினார். அவர் வளர வளர, அவரது அப்பா தட்டச்சுப் பொறியில் எழுதிய கதைகளை ஆர்வமுடன் கவனித்தார். அவற்றில் ஒன்றை தனது கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக கேட்டுக்கொண்டார். அவரது எழுத்துப் பணியை மேலும் தொடர்ந்து எழுதினார். இந்த கவிதைகள் பின்னாளில் பாடல்களாக உருவெடுக்க காரணமாக இருந்தன. ஷக்கீராவின் எட்டாம் வயதில் அவரது உடன் பிறந்தவர் ஒரு விபத்தில் சிக்கி கொல்லப்பட்டார். அதனால் ஷக்கீராவின் தந்தை தனது கவலையை மறப்பதற்காக கருப்புக் கண்ணாடி அணிந்தார். இந்த நிகழ்வினால் ஷக்கீரா தனது முதல் பாடலான Tus gafas oscuras" ("Your dark glasses - உனது இருண்ட கண்ணாடிகள்") எழுதினார்.

ஷக்கீரா நான்கு வயதாக இருக்கும்பொழுது அவரை ஒரு மத்திய கிழக்கத்திய உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஷக்கீரா, டோம்பெக் எனப்படும் அரபி இசை மத்தளம் ஒன்றால் கவரப்பட்டார். இது பெல்லி நடனத்திற்கு ஒத்திசைவான இசைக்கருவியாகும். இந்த இசைக்கருவியை அறியும் முன் ஷக்கீரா, பேர்ஃபுட் எனப்படும் நடனத்தை மேசையில் அரங்கேற்றினார். அங்குள்ளவர்கள் கைதட்டி வரவேற்றார்கள். அதன் பின்னரே ஷக்கீரா தான் ஒரு நல்ல கலைஞராக வளரவேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் கொண்டார். அவரது கத்தோலிக்கப் பள்ளியில் உடன்படிக்கும் பள்ளி மாணவ, ஆசிரியர்கள் உடன் இணைந்து பாடல்கள் பாடினார். ஆனால் அவரது பாடுகுரல் நடுக்கத்தால் அவருக்கு இரண்டாம்நிலை தகுதி மறுக்கப்பட்டது. அவரது இசையாசிரியர், "ஷக்கீரா ஒரு ஆட்டைப் போல பாடுகிறாள்" என்று சொன்னார். பள்ளியில் தான் ஒரு பெல்லி நடனமாடும் மங்கை என்பதாகவே அறியப்பட்டேன் என்கிறார் ஷக்கீரா.

பத்து முதல் பதின்மூன்று வரையிலான வயதில் ஷக்கீரா பாரன்கில்லாவின் பல பகுதிகளுக்கு அழைக்கப்பட்டார். அதன்காரணமாக அந்தப் பகுதியில் ஷக்கீரா பிரபலமடைந்தார். இந்த நேரத்தில் ஒரு திரையரங்கு தயாரிப்பாளரான மோனிகா அரைசாவைச் சந்தித்தார். இவர் ஷக்கீராவின் வாழ்வை நல்ல நிலைக்குக் கொண்டு செல்ல உதவினார். மோனிகா, கொலம்பிய சோனி நிறுவன அதிகாரி சிரோ வர்கஸ் சந்தித்து ஷக்கீராவின் திறமைகளை எடுத்துரைத்தார். அவரது திறமையைக் காண ஒரு உணவகத்தையும் ஏற்பாடு செய்து வைத்தார். சோனி நிறுவன அதிகாரி சிரோ வர்கஸ் இதைக் கண்டு சோனி நிறுவன அலுவலகத்திற்கு ஒளிநாடாவைக் கொண்டு சென்று ஷக்கீராவின் திறமைகளைக் காண்பித்தார். ஆனால் மேலாளரோ அவ்வளவு மகிழ்ச்சியுறவில்லை. என்றாலும் சிரோ வர்கஸ் அவரை தொடர்ந்து வற்புறுத்தி, ஷக்கீராவின் திறமைகளை எடுத்துரைத்து ஒரு அரங்கேற்றமும் ஏற்பாடு செய்தார். அதன்படி ஷக்கீரா மூன்று பாடல்களை சோனி அதிகாரிகள் முன் அரங்கேற்ற, அவரது முதல் இசைத்தொகுப்பு தயாரானது.

இசை வாழ்க்கை[தொகு]

1991 - 1994 : மகியா & பெலிக்ரோ[தொகு]

ஷக்கீராவின் முதல் இசைத் தொகுப்பான மகியா சோனி நிறுவனத்தால் 1991 இல் வெளியிடப்பட்டது. அப்போது ஷக்கீராவுக்கு 13 வயது மட்டுமே. கொலம்பியன் வானொலிகளில் ஒலிபரப்பப் பட்டு இளம் ஷக்கீராவுக்கு உந்துதல் அளிக்கப்பட்டது. ஆனால் விற்பனை நோக்கில் இந்த இசைத்தொகுப்பைச் செய்யவில்லை. ஆயிரம் படிகளுக்கும் குறைவான அளவே விற்றது. இதன் காரணமாக அடுத்த இசைத்தொகுப்பில் அதிக வெற்றிப் பாடல்களைக் கொடுக்கும் கட்டாயம் ஷக்கீராவுக்கு ஏற்பட்டது.

பெலிக்ரோ இசைத்தொகுப்பு 1993 ல் வெளியானது. இது முந்திய இசைத்தொகுப்பான மகியாவைக்காட்டிலும் ஓரளவு பரவாயில்லை. என்றாலும் இதுவும் விற்பனை நோக்கில் தோல்வியைத் தழுவியது. என்றாலும் ஷக்கீரா, 1993 ல் சிலியில் உள்ள "வினா டெல் மர்" அனைத்து உலக பாடல்கள் திருவிழாவுக்கு அழைக்கப்பட்டார். இத்திருவிழாவில் லத்தின் அமெரிக்க இசைக்கலைஞர்கள் தமது திறமையை நிரூபித்தனர். வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க பல நடுவர்கள் வந்திருந்தனர். ஷக்கீரா "நீ" (Eras) என்கிற பாடலை அரங்கேற்றி, மூன்றாம் பரிசைத் தட்டிச் சென்றார். அங்கு ஷக்கீராவுக்கு வாக்களித்த நடுவர்களுள் 20 வயது ரிக்கி மார்ட்டினும் அடங்குவார்.

பிறகு ஷக்கீரா பள்ளிப் படிப்பிற்காக இசைவாழ்வில் சற்று இடைவெளியும் விட்டார். 2008 இல் ஷக்கீரா கொலம்பியன் தொலைக்காட்சித்தொடர் ஒன்றில் நடித்திருந்தார்.

1995 - 2000: Pies descalzos and ¿Dónde están los ladrones?[தொகு]

ஷக்கீரா தோண்ட்த் எஸ்டஸ் கொரொஜன் என்கிற பாடலை நியூஸ்ட்ரோ ராக் என்கிற இசைத் தொகுப்புக்காக 1995 ல் பாடினார். அந்த இசைத் தொகுப்பில் அப்பாடல் மட்டுமே அறியப்பெற்றதாக இருந்தது. இதனால் சோனி நிறுவனம் மூன்றாம் முறையாக மீண்டுமொரு வாய்ப்பை ஷக்கீராவுக்கு அளித்தது. ஷக்கீரா 1995 ல், லூயிஸ் ஓச்சா என்பவருடன் இணைந்து செயல்பட்டார். அவரது மூன்றாம் இசைத்தொகுப்பு தயாரானது. பியஸ் டெஸ்கால்ஜஸ் என்றழைக்கப்பட்ட மூன்றாவது இசைத்தொகுப்பு இஇலத்தீன் அமெரிக்காவில் பரவலானது. ஏறத்தாழ ஐந்து மில்லியன் படிகள் விற்று சாதனை படைத்தது. ரிமிக்ஸஸ் என்று அழைக்கப்பட்ட அவரது போர்த்துக்கீஸிய பாடல்களும் புகழ் பெற்றன. பிரேசில் சந்தையில் மட்டுமே ஒரு மில்லியன் படிகள் விற்றுத் தீர்ந்தன.

ஷக்கீராவின் நான்காம் இசைத்தொகுப்பு, தோண்ட் எஸ்தன் லாஸ் லாட்ரொனெஸ் ? 1998 ல் வெளியானது. இது ஸ்பானிஷ் பேசாத, துருக்கி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாட்டு இசை ரசிகர்கள் பலரை ஷக்கீராவுக்கு அறிமுகம் செய்தது. மொத்தம் பதினொரு பாடல்களில் எட்டு, தனிப்பாடல்கள். அவற்றுள் உலகப்புகழ்பெற்ற ஒஜோஸ் அஸி யும் அடங்கும். இதில் இரு பாடல்கள் ஷக்கீராவுக்கு இலத்தின் கிராமி விருதை அள்ளித்தந்தது.

மார்ச் 2000 ல் இஇலத்தீன் அமெரிக்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இசைச்சுற்றுலா மேற்கொண்டார். ஆகஸ்ட் 2000 ல் அவர் MTV வீடியோ இசை விருது இவருக்கு வழங்கப்பட்டது.

2001-2004 - லாண்ட்ரி சர்வீஸ்[தொகு]

தோண்ட் எஸ்தன் லாஸ் லாட்ரொனெஸ் ? இன் வெற்றியைத் தொடர்ந்து 2001 ல் ஆங்கிலத்தில் இசைத்தொகுப்பு வெளியிடும் வேலைகளைத் தொடங்கினார். க்ளோரியா எஸ்தஃபன் என்பவரைத் துணைக்கொண்டு முந்தைய இசைத்தொகுப்பான தோண்ட் எஸ்தன் லாஸ் லாட்ரொனெஸ் ? ன் பாடல்களை ஆங்கில எழுத்துக்களாக்கினார். பின்னர் ஷக்கீரா அவரது பழைய பாடல்களை ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்ய முடிவு செய்தார். ஏறத்தாழ ஓராண்டு கால உழைப்பில் புதிய வகையிலான இசைத் தொகுப்பு உருவாகிக்கொண்டிருந்தது. இதனிடையே பெப்சி விளம்பர பாடல்கள் நான்கை பாடிமுடித்தார். நவம்பர் 24, 2001 ல் லாண்ட்ரி சர்வீஸ் எனப்படும் ஆங்கில இசைத்தொகுப்பு வெளியானது. ஆங்கிலச் சந்தையில் இந்த இசைத்தொகுப்பு பெருமளவில் நுழைந்தது. இதில் நான்கு எசுப்பானிய பாடல்களும் இடம்பெற்றிருந்தன. ஷக்கீராவின் ஆங்கிலம் சற்று நலிவடைந்தது என்றாலும் இந்த இசைத்தொகுப்பு நன்கு விற்று தீர்ந்தது. அதோடு ட்ரிபில் ப்ளாட்டினம் என்று சான்றளிக்கப்பட்டது. ட்ரிபில் ப்ளாட்டினம் என்பது 3 மில்லியன் படிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்தால் வழங்கப்படுவது. ஷக்கீராவுக்கு நன்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்த இந்த இசைத்தொகுப்பு, உலகம் முழுக்க 13 மில்லியன் படிகள் விற்று தீர்ந்தது.

2002 ல் ஷக்கீரா எசுப்பானிய இசைத்தொகுப்பான கிராண்டெஸ் எக்சிடஸ் வெளியிட்டார். செப்டம்பர் 2002 ல் International Viewer's Choice விருது வென்றார். அதே ஆண்டில் அக்டோபரில் MTV நிகழ்பட விருதுகளில் இஇலத்தீன் அமெரிக்க சிறந்த பெண் பாடகி, சிறந்த பாப் பாடகி, சிறந்த வடக்குக் கலைஞர், சிறந்த நிகழ்படம் (சுர்தே), ஆண்டின் சிறந்த கலைஞர் என்று ஐந்து விருதுகளை வென்றார்.

2005-2007: ஃபிக்சேசன் தொகுப்புகள்[தொகு]

ஷக்கீரா அதன்பிறகு இரு ஆண்டுகள் காத்திருந்தார். பின்னர் 2005 தொடக்கத்தில் ஓரல் ஃபிக்சேசன் (Oral Fixation) என்கிற முயற்சியை அறிவித்தார். அம்முயற்சியின் முதல் இசைத்தொகுப்பான ஃபிக்சேசன் ஒரல் சூன் 3 ல் அயர்லாந்தில் வெளியானது. சூன் 6, 2005 ல் ஐரோப்பாவிலும் சூன் 7 2005 ல் வடக்கு அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் வெளியிடப்பட்டது. அவ்வால்பத்தின் முன்னணி பாடல் அல்ஜாண்ட்ரோ ஸான்ஸுடனான "லா டோர்டுரா" தனிப்பாடல் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றது. பில்போர்ட் லத்தீனில் 25 வாரங்கள் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எசுப்பானிய பாடல்களில் பெரும் வெற்றி பெற்ற பாடலும் இதுவே. உலக அளவில் இரண்டாம் இடத்திலும் இருந்தது.

ஃபிக்சேசன் ஒரல், மக்களால் பெரிதும் கவர்ந்தது. பில்போர்ட் 200 பட்டியலில் நான்காம் இடத்தில் சூன் 15 வாக்கில் இருந்தது. இந்த இசைத்தொகுப்பு 157,000 படிகள் முதல் வாரத்திலேயே அமெரிக்காவில் விற்று தீர்ந்தது. இதுவே எசுப்பானிய மொழி இசைத்தொகுப்புகளில் அதிகம் விற்ற இசைத்தொகுப்பாகும். இலத்தீன் அமெரிக்காவில் வெளியிட்ட அன்றே ஒருமில்லியன் விற்றது. கொலம்பியாவில் மூன்று மில்லியன்கள் விற்றது. பிறகு இரண்டாவது தனிப்பாடலான "No" (நோ) சூலை 2005 ல் வெளியானது. இது அர்ஜெண்டினா, எசுப்பானியா கொலம்பியாவில் முதலிடத்தில் இருந்தது. பிறகு 14 வாரங்கள் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் லா டோர்டுரா போல மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் வெற்றி பெறவில்லை.

2006 பிப்ரவரி 8 ல் ஷக்கீரா இரண்டாவது முறையாக கிராமி விருதினைப் பெற்றார். இது சிறந்த இலத்தீன் ராக் இசைத்தொகுப்புக்காக வழங்கப்பட்டது.

2006 ல் லா பரேட் எனப்படும் நான்காவது தனிப்பாடலை ஃபிக்சேசன் ஒரலில் இருந்து வெளியிட்டார். இது அவரது நாடான கொலம்பியாவில் முதலிடம் பெற்றுத்தந்தது. அர்ஜெண்டினா, எசுப்பானியாவிலும் அதே நிலை. "லாஸ் டே லா இன்டுஷன் " என்ற தனிப்பாடல் எசுப்பானியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இது மிகப்பெரும் அளவில் வெற்றிபெற்றது. 8 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

ஓரல் ஃபிக்சேசன் எனும் இசைத்தொகுப்பு வெளியிடும் முன்னர், ஷக்கீரா MTV ஐரோப்பிய இசை விருதுகளுக்கான் நிகழ்ச்சியில் " டோண்ட் பாதர்" என்ற பாடலை அரங்கேற்றினார். இது அவருக்கு சிறந்த பாடகி விருதைப் பெற்றுத்தந்தது.

ஓரல் ஃபிக்சேசன், நவம்பர் 29, 2005 ல் வடக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. இந்த இசைத்தொகுப்பின் இரண்டு பாடல்கள், " ஹவ் டு யு டூ " மற்றும் "டீமொர்" இரண்டும் வாக்குவாதத்திற்குரியதானது. இந்த இசைத்தொகுப்பின் மேலுறையும் பிரச்சனைக்குரியதானது. சில நாடுகளில் இது மாற்றம் செய்யப்பட்டது. "டோண்ட் பாதர் " முதல் 40 இடத்துக்குள் அமெரிக்காவில் இடம் பெறவில்லை. அதன் பிந்தைய வெளியீடான " ஹிப்ஸ் டோன் லை" U.S பில்போர்ட் ஹாட் 100 ல் முதலிடத்தை வகித்தது. மார்ச் 28, 2006 ல் இப்பாடல் மீண்டும் வெளியிடப்பட்டது. இதனால் MTV விருதுகள் பலவற்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். சிறந்த நடனத்திற்கான விருது மட்டும் அவர் பெற்றார்.

சூன் 2006 ல், ஷக்கீரா பெரும் இசைச்சுற்றுலா ஒன்றுக்கு கிளம்பினார். இச்சுற்றுலா, இவரது இசைத்தொகுப்புகளை மேலும் நிலைப்படுத்தும் நோக்கில் அமைந்தது. இச்சுற்றுலாவில் சூன் 14, 2006 முதல் சூலை 9, 2007 வரை 125 அரங்குகள் நடைபெற்றது. ஐந்து கண்டங்களிலும் அரங்கேற்றினார். இலவசமாக மெக்சிக்கோவில் மே 27, 2007 ல் 210,000 ரசிகர்கள் முன்னிலையில் பாடினார். இது மெக்சிக்கன் வரலாற்றிலேயே கூடுதல் பேரால் பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஓரல் ஃபிக்சேசன் சுற்றுலா DVD , நவம்பர் 12 ல் வெளியானது. இது ப்ளூ ரே தட்டிலும் கிடைக்கிறது.

2008 - அடுத்த இசைத்தொகுப்பு[தொகு]

பிப்ரவரி 2008 ல் தனது அடுத்த இசைத்தொகுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக ஒரு வலைத் தளத்தில் தனது ரசிகரிடம் கூறியிருந்தார். ஆனால் முறையான தேதி விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆயினும் ஒரு விழாவில் ஷக்கீராவின் தந்தை வில்லியம் மெபாரக், ஷக்கீரா அடுத்த இசைத்தொகுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டார் என்று கூறினார். இது அவரது சொந்த ஒலியரங்கில் நடந்தது.

பிப்ரவரி தொடக்கத்திலிருந்து ஷக்கீரா அடுத்த இசைத்தொகுப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்; அவரது அடுத்த இசைத்தொகுப்பு உருகுவேயில் இருக்கும் என்று உருகுவேயன் பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டது.

ஏப்ரல் 3 ல் ஷக்கீரா மியமி தேசிய விமானநிலையத்திற்கு விரைந்தார். அங்கே நிருபர்களிடம் பேட்டியளிக்கையில், இன்னும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், சீனாவுக்கு செல்லவிருப்பதாகவும் கூறினார். அவரது அடுத்த இசைத்தொகுப்பு எதைப்பற்றியது என்பது குறித்து இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை.

ஏப்ரல் 27 2008 ல் ஷக்கீரா தனது சொந்த ஊரான பாரன்கில்லாவுக்குச் சென்றார். அங்கும் நிருபருக்குப் பேட்டியளிக்கையில், தனக்கு வேலைகள் நிறைந்து இருப்பதாகவும் ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இசைத்தொகுப்புக்கு உழைத்ததாகவும் கூறினார். அதே சமயம் அடுத்த ஆண்டு (2009) தனது இசைத்தொகுப்பு வெளியிடும்படி இருக்கும் என்றார். எலன்கோ பத்திரிக்கைக்குப் பேட்டியளிக்கையில் ஷக்கீரா தான் 30 பாடல்கள் எழுதி வைத்திருப்பதாகவும் இன்னும் எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மற்றவர்களுடன்[தொகு]

2006 இறுதியில் அல்ஜாண்ட்ரோ ஸான்ஸுடன் " டெ லொ அக்ரேட்ஸ்கோ , பெரொ நோ " என்கிற பாடலை அல்ஜாண்ட்ரோவில் இசைத்தொகுப்புக்காக பாடினார். இது இலத்தீன் அமெரிக்காவில் முதல் பத்து இடத்தைப் பிடித்தது. பில்போர்ட் இலத்தீன் பாடல்களிலும் முதல் இடங்களை வகித்தது.

மிக்உவல் போஸ் என்பவருடன் இணைந்து "சி து னொ வெல்வேஸ்" என்கிற பாடலை "பபிடோ" என்ற போஸின் இசைத்தொகுப்புக்காக பாடினார்.

2007 ஆரம்பத்தில் பிரபல R&B பாடகியான பியான்ஸ் நோல்சுடன் இணைந்து "ப்யூட்டிஃபுல் லயர்" என்ற பாடலைப் பாடினார். இது பியான்சின் இசைத்தொகுப்பான "பி'டே" யின் இரண்டாவது தனிப்பாடலாகும். ஏப்ரல் 7, 2007ம் வாரத்தில் இப்பாடல் 91 இடங்களை முந்தி மூன்றாம் இடத்திற்கு வந்தது. இது பில்போர்ட் 100 பட்டியலில் பெரிய சாதனை. இவ்வளவு பெரிய தாவல் இதற்கு முன்பு நிகழ்ந்தது இல்லை. UK தனிப்பாடல்கள் வரிசையில் இது முதலிடம் பிடித்தது. சிறந்த பாப் கலப்பு பாடல்களுக்கான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. பியான்சின் வெற்றிகரமான பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக, எசுப்பானிய மொழி பேசும் நாடுகளில் பிரபலமடைந்தது.

சந்தனாவின் சிறந்த பாடல்கள் இறுவட்டில் லில் வேயின் உடன் இணைந்து ஷக்கீரா பாடவிருந்தார். ஆனால் இவ்விணை நீக்கப்பட்டு, ஜெனிஃபர் லோபஸ், பேபி பேஷ் வந்தனர்.

மடோன்னா, டன்ஸ்டால், ஃபைத் ஹில், டிடோ, செலின் டியான், மெலிசா எத்ரிட்ஜ், ஜோஸ் ஸ்டோன், ஃபெர்ஜி, அனஸ்டாசியா, மற்றும் பிங்க் போன்ற பெரும் பாடகிகள் 23 பேர் பங்குபெற்ற பெரிய இசைத்தொகுப்பான "மாஸ் டிஸ்ட்ரக்ஷன்" ல் ஆனி லெனாக்சுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடினார்.

Love in the Time of Cholera soundtrack[தொகு]

லவ் இன் த டைம் ஆஃப் சொலேரா என்கிற கொலம்பிய நாவல் ஒன்றைப் படமாக்கும்பொழுது அதற்கென இரு பாடல்களை ஷக்கீரா எழுதிக் கொடுத்தார். அவை "பியன்ஸோ என் டி" என்றழைக்கப்பட்டன. அவரது பழைய இசைத்தொகுப்பான பியஸ் டெஸ்கால்சஸ் இசைத் தொகுப்பில் இருந்து வந்த பாடல்கள் அவை. இவற்றிலல் "டெஸ்பெடிடா" என்கிற பாடல் கோல்டன் க்ளோபுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இப்பாடல் அகடமி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக வதந்தி கிளம்பியது. ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.

நடிப்பு[தொகு]

எல் ஒயாஸிஸ் என்கிற கொம்பியன் திரைப்புதினம் ஒன்றில் ஷக்கீரா நடித்திருக்கிறார். ஆண்டு 1994.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

2000 ல் அண்டானியோ டெ லா ருஆ எனும் அர்ஜெண்டினா அதிபர் மகனுடன் ஊர் சுற்றினார். இலத்தீன் அமெரிக்க பத்திரிக்கைகளில் இவர்களைப் பற்றிய தலைப்புச் செய்திகள் சூடாக வெளிவந்தது. மார்ச் 2001 ல் அவர் தனது காதலை ஷக்கீராவுக்குத் தெரிவித்தார். ஏற்பாடுகள் வெகு விரைவில் நடந்தது. ஆனால் சில நாட்களிலேயே மெக்சிக்கோவில் இந்த ஏற்பாடுகளுக்கான தனது மறுப்பைத் தெரிவித்தார்.

சூன் 2007ல் இலத்தீன் ஊடகங்கள் ஷக்கீரா, ஐரிஷ் நடிகர் கொலின் ஃபாரலுடன் லாஸ் ஏஞ்சல்சில் டிஸ்கோ சென்றதாக தெரிவித்தன. ஷக்கீராவின் உதவியாளர்கள் இச்செய்தியை உடனடியாக மறுத்தனர். அன்டானியோவும் ஷக்கீராவும் நியூ யார்க்கில் சந்தித்துக் கொண்டனர். இருவரும் வதந்திகளை மறுத்தனர்.

ஷக்கீராவுக்கு உலகவரலாறு மிகப்பிடித்தமான ஒன்று. அவர் உலக வரலாற்றைப்பற்றியும் மொழிகளைப் பற்றியும் அவர் செல்லும் நாடுகளில் விசாரித்துத் தெரிந்துகொள்வதில் ஆர்வமுடையவர். 2007 ல் மேற்கத்திய நாகரிகம் பற்றிய வரலாறை அறியும் வகுப்பொன்றை எடுத்துக் கொண்டார்.

ஷக்கீரா 2005-2006 மிஸ் கொலம்பியாவாக இருந்தார்.

நடனம்[தொகு]

ப்யூட்டிஃபுல் லயர் பாடலின் நிகழ்படத்தில் பியான்சே நோல்ஸ்(பின்னால்) உடன் பெல்லி நடனம் ஆடும் ஷக்கீரா.

ஷக்கீராவின் துடிப்பு மிக்க நடனம் அவரது இசைப்படங்களின் மூலம் தெரியவந்தார். அவரது நடன அசைவுகள் அரபி பெல்லி நடன வகையைச் சார்ந்து இருந்தது. அவரது பாத வலிமையை நன்குணர்ந்து பேர்ஃபுட் எனும் நடனத்தையும் அவர் அடிக்கடி அரங்கேற்றுவார். இளம் வயதிலேயே இந்நடனத்தைக் கற்றுக் கொண்டதாக ஷக்கீரா கூறுகிறார். ஒரு MTV பேட்டியில் ஷக்கீரா தான் சிறு வயதாக இருக்கும்பொழுது, பெல்லி நடனத்தின் போது அவரது பெல்லியில் (வயிறுப்பகுதி) நாணயத்தை எப்படி விழவைப்பது என்று முயன்று பெல்லி நடனம் கற்றதாகக் கூறினார்.

இவரது இவ்வகை நடனங்களை அவரது நிகழ்படத்தில் காணலாம். குறிப்பாக, "ஓஜோஸ் அஸி", "லா டோர்டுரா", "ஹிப்ஸ் டோன் லை", ப்யூட்டிஃபுல் லயர் போன்ற நிகழ்படங்களில் பெல்லி நடனம் அடக்கம். மேலும் பெல்லி நடன இயக்குனர்கள் பலரையும் கைவசம் வைத்திருக்கிறார். அவர்களில் விருதுபெற்ற பெல்லி நடன இயக்குனர் பொயன்கா (Boženka.) வும் அடங்குவார்.

கொடைத்தன்மை[தொகு]

1997 ல் ஷக்கீரா "பியஸ் டெஸ்கால்ஜஸ்" தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். கொலம்பிய ஏழைச்சிறுவர்களுக்கான பள்ளிக்கூடமாக இது அமைந்திருக்கிறது. ஷக்கீரா மற்றும் தேசிய குழுக்கள் இணைந்து இது நிறுவப்பட்டது. அவரது மூன்றாவது இசைத்தொகுப்பின் பெயரே அவரது தொண்டு நிறுவனத்துக்கும் சூட்டப்பட்டிருக்கிறது.

ஷக்கீராவின் இசைப்பாதையில் அவர் பலதரப்பட்ட தொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். 2002 ல் பிரின்சு ட்ரஸ்டுக்காக பாடினார். அதே ஆண்டு VH1 நிகழ்த்திய ஒரு தொண்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். வெர்சைல்ஸ் மாளிகையில் சூலை 2 2005 ல் அவரது பெரிய வெற்றிப் பாடல்களைப் பாடி உதவி செய்தார். சூலை 7, 2007 ல் ஹாம்பர்க்கிலும் இவரது உதவும் நல்லெண்ணம் தொடர்ந்தது. "கிளிண்டன் க்ளோபல் இனிஷியேடிவ்"க்காகவும் பல பாடல்களைப் பாடினார். அவரது பிரபல பாடல்கள் பலவும் தொண்டு செயல்கள் புரிந்தன. இலத்தீன் அமெரிக்கா சொலிடரிடி ஆக்சன் (ALAS) எனும் தொண்டு நிறுவனத்துக்காக பணம் சேர்த்தார். இங்கு 150,000 மக்கள் கலந்து கொண்டனர். கட்டணங்களும் இலவசமாக பெறப்பட்டன.

UNICEF நல்லெண்ணத் தூதராகவும் ஷக்கீரா இருக்கிறார். அவரது ஆர்வம், நன்னடத்தை காரணமாக அவரைத் தூதராக நியமித்ததாக யுனிசெஃப் கூறுகிறது.

OK இதழ் முதல் 50 உதவும் பிரபலங்களின் பட்டியலில் ஷக்கீராவை 48 ஆவது இடத்தில் வைத்திருக்கிறது. ஷக்கீரா கிட்டத்தட்ட 55,000 டாலர்கள் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடை தருவதாக அவ்விதழ் கூறுகிறது.

செப்டம்பர் 28, 2007 ல் "கிளிண்டன் க்ளோபல் இனிஷியேடிவ்" நிகழ்த்திய நிகழ்ச்சியில் 40 மில்லியன் டாலர்களை ஈட்டி நன்கொடை அளித்தார். மேலும் கல்வி மற்றும் மருத்துவத்திற்காக, நான்கு இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் ஐந்து மில்லியன் டாலர்கள் வழங்கினார்.

டிசம்பர் 2007 ல் வங்கதேச வெள்ள இழப்பீடுகளைப் பார்க்க மூன்று நாட்கள் அங்கே செலவழித்தார். பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.

இதைப்போன்று பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

ஒயில்[தொகு]

2006 கலைநிகழ்வில் ஷக்கீரா

இசையும் குரலும்[தொகு]

ஷக்கீரா, பலரிடம், தான் கிழக்கத்திய இசை கேட்டு வளர்ந்தவள் என்று கூறுகிறார். அவர் பல வகைகளில் பாடியிருக்கிறார். நாட்டுப்புற, பாப், ராக் போன்றவைகள் அடங்கும். அவரது எசுப்பானிய இசைத்தொகுப்புகள் நாட்டுப்புற மற்றும் இலத்தீன் ராக் வகையைக் கலந்து இசையமைக்கப்பட்ட பாடல்வகையாகும். ஏனைய ஆங்கில இசைத்தொகுப்புகள் பாப் மற்றும் ராக் வகை.

ஷக்கீரா அவரது வலிமை மிகுந்த மெல்சிமேடிக் குரலால் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல் எழுதுவது மற்றும் தயாரிப்பு[தொகு]

ஷக்கீரா அவரது எல்லா இசைத்தொகுப்புகளுக்கும் பாடல்கள் எழுதுவது மற்றும் தயாரிப்பு ஆகிய வேலைகளைச் செய்துவருகிறார். நம்ப முடியாத வகையிலான பாடலாசிரியர் மற்றும் குறிப்பிடத்தகுந்த தயாரிப்பாளர் என்று பலரும் புகழ்கிறார்கள்.

இரண்டு பாடல்கள் தவிர ஏனைய எல்லா பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். முதலாவது "டிய எஸ்பெஸல்" என்கிற பாடல். அர்ஜெண்டினா ராக் பாடகர் குஸ்டவோ செராடி என்பவர் எழுதிய பாடலது. இசையும் அவரது துணையுடன் அமைக்கப்பட்டது. இரண்டாவது விக்லெஃப் ஜீனுடன் இணைந்து பாடிய பிரபல பாடலான ஹிப்ஸ் டோன் லை பாடல்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கீரா&oldid=3860170" இலிருந்து மீள்விக்கப்பட்டது