சக்கரவாகேசுவரர் கோயில், சக்கராப்பள்ளி
தேவாரம் பாடல் பெற்ற சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருச்சக்கரப்பள்ளி, இராசகிரி ஐயம்பேட்டை, குலோத்துங்க சோழவள நாடு, குலோத்துங்க விளநாடு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம் |
பெயர்: | சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | சக்கரப்பள்ளி |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சக்கரவாகேஸ்வரர் |
தாயார்: | தேவநாயகி |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | காவிரியாறு, காக தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அய்யம்பேட்டையில் சக்கராப்பள்ளி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 17ஆவது சிவத்தலமாகும்.
தல வரலாறு[தொகு]
- சக்கரவாகப் பறவை வழிபட்டதாலும், (சக்கரமங்கை வழிபட்டதாலும்) இவ்வூர் சக்கரப்பள்ளி என்று வழங்கலாயிற்று.
- திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். சக்கரவாகப் பறவை வழிபட்டத் தலம் என்று கூறுவதும் உண்டு.
- பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று சூரியன் இவ்விறைவனை வழிபடும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
அமைப்பு[தொகு]
இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் சக்கரவாகேசுவரர் என்றும் திருச்சக்கராப்பள்ளி உடைய மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி தேவநாயகி ஆவார். நுழைந்தவுடன் மரத்தாலான கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. கருறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். சன்னதியில் நால்வர், சூரியன், பைரவர், சந்திரன், நாகங்கள், லிங்க பானம் ஆகியவை காணப்படுகின்றன. கருவறை மற்றும் விமானத்துடன் கூடிய மூலவர் சன்னதி தரைத்தளத்திலிருந்து சற்று தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் இடப்புறம் தேவநாயகி அம்மன் சன்னதி உள்ளது.
தல சிறப்புக்கள்[தொகு]
- கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை.
- அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், யம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது.
- கல்வெட்டுக்களில் இவ்வூர், "குலோத்துங்க சோழவள நாடு, குலோத்துங்க விளநாடு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
- இங்குள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12-ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச் சபைக்குரிய சில விதிகளாக நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
- ஞானசம்பந்தர் காலத்தில் வணிகப்பெருவழியில் அமைந்த பெரும் வணிக நகரம் செம்பியன்மாதேவி காலத்தில் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டது. செம்பியன்மாதேவி இவ்வூர் இறைவனை மலர்கொண்டு வழிபடும் புடைப்புச்சிற்பம் இதனை உறுதிப்படுத்தும். முதலாம் இராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூர் நித்தவிநோத வளநாட்டு கிழார் கூற்றத்து அகழிமங்கலத்து பிரம்மதேயம் திருசக்கராப்பள்ளி என கல்வெட்டுகளில் காணப்படுகிறது. [1] * கருவறை அர்த்தமண்டபடத் தென்புறச் சுவரின் வெளிப்பக்கம் இரண்டு கோஷ்டங்களுக்கு இடையில் நீண்ட கல்வெட்டுப்பகுதியும், புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. சிற்பங்கள் உள்ள மாடத்தின் ஒரு புறம் மேடையில் லிங்கத்திருமேனி உள்ளது. அதன்மேல் மாலை சூட்டப்பட்டுள்ளது. இரு புறமும் எரியும் விளக்குகள் உள்ளன. எதிரில் செம்பியன்மாதேவியார் இரு கரங்களைக் குவித்து இலிங்கத்தை வணங்கும் நிலையில் உள்ளார். [2]
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலம்[தொகு]
சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன. [1]
- சக்கராப்பள்ளியில் உள்ள சக்கரவாகேசுவரர் கோயில்
- அரியமங்கையில் உள்ள ஹரிமுக்தீஸ்வரர் கோயில்
- சூலமங்கையில் (சூலமங்கலம்) உள்ள கிருத்திவாகேசுவரர் கோயில்
- நந்திமங்கையில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில்
- பசுமங்கையில் (பசுபதிகோயில்) உள்ள பசுபதீசுவரர் கோயில்
- தாழமங்கையில் (தாழமங்கலம்) உள்ள சந்திரமௌலீசுவரர் கோயில்
- புள்ளமங்கை என்றழைக்கப்படுகிற ஆலந்துறைநாதர் கோயில்
திருத்தலப் பாடல்கள்[தொகு]
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி
சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே..
மேற்கோள்கள்[தொகு]
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
படத்தொகுப்பு[தொகு]
சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 17 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 17 |