உள்ளடக்கத்துக்குச் செல்

சஃபார் மகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஃபார் மகால்
சஃபார் மகாலின் சஃபார் நுழைவாயில்
சஃபார் மகால் is located in இந்தியா
சஃபார் மகால்
இந்தியா இல் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிமுகலாயக் கட்டிடக்கலை
நகரம்தில்லி
நாடுஇந்தியா
நிறைவுற்றது19 ஆம் நூற்றாண்டு
இடிக்கப்பட்டதுஅழிபாடு
கட்டுவித்தவர்முகலாய வம்சம்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இரண்டாவது அக்பர் சா, இரண்டாவது பகதூர் சா சஃபார்

சஃபார் மகால் என்பது, முகலாயப் பேரரசு மங்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில், தெற்கு தில்லியில் உள்ள மெகுரௌலி என்னும் ஊரில் கட்டப்பட்ட ஒரு கோடைகால அரண்மனையாகும். முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட கடைசிப் பெரிய கட்டிடம் இதுவெனக் கருதப்படுகின்றது.

இந்தக் கட்டிடம் இரண்டு பகுதிகளாக உள்ளது ஒன்று மாளிகை. இது "இரண்டாவது அக்பர் சா"வினால் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மற்றது நுழைவாயில். இது 19 ஆம் நூற்றாண்டில் இரண்டாவது பகதூர் சா சஃபாரினால் மீளக் கட்டுவிக்கப்பட்டது. இந்த அரண்மனை ஒரு வகையில் துயரமான ஒரு வரலாற்றைக் கொண்டது. கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் சா சஃபார் தன்னை இந்த அரண்மனை வளாகத்தில், புகழ்பெற்ற கவாசா குதுப்புதீன் பக்தியார் காக்கி என்பவரின் தர்காவுக்கு அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில், வேறும் முகலாய வம்சத்தினர் சிலரது கல்லறைகளோடு அடக்கம் செய்யவேண்டும் என விரும்பியிருந்தார். ஆனால், 1857 ஆம் ஆண்டு பிரித்தானியருக்கு எதிரான கிளர்ச்சியில் பகதூர் சா சஃபாருக்கு இருந்த தொடர்பு காரணமாக அவர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கே அவர் முதிர்ந்த வயதில் இறந்துபோனார். எவ்வித அரச மரியாதைகளும் இன்றி அங்கேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.[1][2][3][4] இந்திய விடுதலைக்குப் பின்னர் அவரது உடற் பகுதிகளைக் கொண்டுவந்து அவர் விரும்பிய இடத்தில் அடக்கம் செய்வதற்கு எடுத்த முயற்சிகளும் கைகூடவில்லை.

வரலாறு

[தொகு]
The last Mughul Emperor Bahadur Shah Zafar

கிபி 1526 ஆம் ஆண்டில் தில்லியைக் கைப்பற்றி பாபரினால் நிறுவப்பட்ட முகலாயப் பேரரசு 332 ஆண்டுகளுக்குப் பின்னர் 1858 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் சா சஃபார் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய அரசினால் விசாரணை செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. இம் முகலாய வம்சத்தின் வரலாற்றின் இறுதிக் கட்டத்தைச் சேர்ந்த பேரரசர்கள் சிலரும், பிற அரச குடும்பத்தினர் சிலரும் சஃபார் மகால் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மெகரௌலியில், சஃபார் மகால் வளாகத்தினுள் உள்ள கல்லறைகளைச் சுற்றி அமைந்துள்ள அலங்கார சலவைக்கல் மறைப்பு முதலாம் பகதூர் சாவின் கல்லறைக்காக அவரது மகன் சகாந்தர் சாவினால் கட்டுவிக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது சா ஆலம், அவரது மகனான இரண்டாவது அக்பர் சா ஆகிய பேரரசர்களுக்கான கல்லறைகளும் இதற்குள்ளேயே அமைக்கப்பட்டன. அத்துடன் இறுதி முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபாரின் மகன்களில் ஒருவராகிய மிர்சா பக்ருத்தீனும் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். பகதூர் சா சஃபாரும் தனக்கென ஓரிடத்தை இங்கே ஒதுக்கி வைத்திருந்தும் நாடுகடத்தப்பட்டதால் அந்த வாய்ப்பு அவருக்கு அமையாமல் போய்விட்டது.

அமைப்பு

[தொகு]
Multichambered dalan with a terrace
Ruins of the Palace with the Dargah of Qutubuddin Bakhtiar Kaki in the background

இந்த அரண்மனை, கவாசா காக்கி தர்காவிலிருந்து மேற்குத் திசையில், 300 அடிகள் தொலைவில் அமைந்துள்ளது. இது 1842 ஆம் ஆண்டில் "இரண்டாவது அக்பர் சா"வினால் மூன்று மாடிகளையுடைய கட்டிடமாகக் கட்டப்பட்டது. இது சிவப்பு மணற்கற்களால் சலவைக் கற்களும் கலந்து கட்டப்பட்டது. 50 அடி அகலம் கொண்ட இது, யானை நுழைவாயில் எனப்படும் பெரிய வாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. இவ் வாயிலூடாக முழுவதாக அலங்கரிக்கப்பட்ட யானை செல்லத்தக்கதாக 11.75 அடிகள் உயரம் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.

முதன்மை வளைவில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று இது இரண்டாவது பகதூர் சாவினால் அவரது பதினோராவது ஆட்சியாண்டில் 1847 - 48 காலப்பகுதியில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. முகலாயர் பாணியில் அமைக்கப்பட்ட ஒரு அகலமான முனை நெம்பு நீட்சி அமைப்பு இந்த வாயில் வளைவில் அமைந்துள்ள கவர்ச்சியான அம்சம் ஆகும். நுழைவாயிலில், இரண்டு துருத்திக்கொண்டிருக்கும் சாளரங்களும், அவற்றின் இரு பக்கங்களிலும், வங்காள வகைக் குவிமாடங்களும் காணப்படுகின்றன. வளைவின் இரு பக்கக்கங்களிலும் பெரிய தாமரை வடிவில் அமைந்த அலங்கார அமைப்புக்கள் காணப்படுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. Abhilash Gaur (1999-11-07). "Zafar Mahal: A forsaken monument". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2009-07-22.
  2. Y.D.Sharma (2001). Delhi and its Neighbourhood. New Delhi: Archeological Survey of India. p. 62-63. Archived from the original on 2005-08-31. பார்க்கப்பட்ட நாள் 2009-07-25.
  3. "Hathi Gate and Zafar Mahal". Archived from the original on 2009-07-31. பார்க்கப்பட்ட நாள் 2009-07-22.
  4. William Dalrymple (2006-10-01). "A dynasty crushed by hatred". Telegraph.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2009-07-22.[தொடர்பிழந்த இணைப்பு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஃபார்_மகால்&oldid=4123506" இலிருந்து மீள்விக்கப்பட்டது