க. வேந்தனார்
வித்துவான் க. வேந்தனார் | |
---|---|
பிறப்பு | நாகேந்திரம்பிள்ளை 5 நவம்பர் 1918 வேலணை, யாழ்ப்பாணம் |
இறப்பு | செப்டம்பர் 18, 1966 | (அகவை 47)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | வித்துவான் (சென்னைப் பல்கலைக்கழகம்) பண்டிதர் (மதுரைத் தமிழ்ச் சங்கம்) |
பணி | தமிழாசிரியர் |
பெற்றோர் | கனகசபைப்பிள்ளை, தையல்முத்து |
பிள்ளைகள் | கலையரசி, இளங்கோ, தமிழரசி, இளஞ்சேய், இளம்வேள் |
வலைத்தளம் | |
வேந்தனார்.கொம் |
வித்துவான் க. வேந்தனார் (5 நவம்பர் 1918 – 18 செப்டம்பர் 1966) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மரபுவழித் தமிழ்ப் புலமையாளர்களுள் ஒருவர். இவர் சிறந்த தமிழறிஞராய், தமிழ்ப் பற்றாளனாய், ஆசிரியராய், கவிஞராய், சொற்பொழிவாளராய் வாழ்ந்தவர். பத்துப்பாட்டு முதல் பாரதியார் பாடல்கள் வரை ஆராய்ந்து தெளிந்த கட்டுரைகள் எழுதியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]வேந்தனார் யாழ்ப்பாணத்து வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கனகசபைப்பிள்ளை, தையல்முத்து அம்மையார் ஆகியோருக்குத் தனியொரு குழந்தையாகப் பிறந்தார். ஆசிரியரான சோ. இளமுருகனார் வழிகாட்டலால் பதினாறாவது வயதில் நாகேந்திரம்பிள்ளை எனத் தனது பெற்றோர் சூட்டிய பெயரினை வேந்தனார் எனச் சுத்தமான தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார்.
இளமையில் பயில்கின்ற பொழுதே இந்துசாதனம், ஈழகேசரி போன்ற இதழ்களில் இலக்கிய, சமய கட்டுரைகளை வரைந்ததோடு பின்பு வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன் ஆகிய ஏடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் ஆசிரியராக பயிற்சியினைத் தொடர்ந்த காலங்களில் இவர் சந்திக்க நேர்ந்த பரமேசுவராக் கல்லூரியின் அதிபர் கலாநிதி கு. சிவப்பிரகாசம், சி. சிதம்பரப்பிள்ளை, பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதி போன்றோரின் தொடர்புகளும் இவரின் தமிழ் மொழி வளம் பெற உதவியது. வேந்தனார் வித்துவான் சோதனைக்குத் தோற்றுவதற்காக தமிழ்நாடு சென்றிருந்த வேளை தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளுடன் சில காலம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அவரிடமிருந்து ஆழ்ந்த தமிழ் பற்றே பிற்காலங்களில் தன் குழந்தைகளுக்கு கலையரசி, இளங்கோ, தமிழரசி, இளஞ்சேய், இளம்வேள் எனத் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கத் தூண்டின.
தமிழாசிரியராக
[தொகு]சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் முதலான தமிழ் இலக்கியத்தில் இவருக்கிருந்த தேர்ச்சி காரணமாக பண்டித வகுப்புக்களுக்கும் பிற வகுப்புக்களுக்கும் மேற்படி நூல்களைப் படிப்பிக்கும் பொறுப்பை வித்துவானிடமே புலமையாளர்கள் ஒப்படைத்திருந்தனர். அவரின் பாடம் சொல்லும் ஆற்றலின் ஒரு முகத்தினை கம்பராமாயண அயோத்தியா காண்டத்து மந்தரை சூழ்ச்சிப்படலம், கைகேயி சூழ்வினைப் படலம் என்பவற்றிற்கு அவர் எழுதிய உரைவாயிலாக இன்றும் காணமுடியும். நீண்ட காலக் கற்பித்தல் அனுபவத்துடன் எழுதப்பட்ட இப் பாடநூல் இன்றும் மாணவர்களால் படிக்கப்பட்டு வருகின்றது.
எழுத்தாளராக
[தொகு]வேந்தனார் சிறந்த எழுத்தாளராகவும் மேடைப் பேச்சாளராகவும் இருந்துள்ளார். எழுத்தாளர் என்ற வகையில் பல இலக்கியக் கட்டுரைகளை வேந்தனார் சமகாலத்தில் வெளிவந்த பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அவ்வப்போது எழுதி வந்துள்ளார்.
கவிஞராக
[தொகு]வித்துவான் சிறந்த கவிஞராகவும் தமிழ் உலகிற்கு அறிமுகமாகியுள்ளார். அவ்வப்போது இவர் எழுதிய கவிதைகள் ஈழநாடு முதலான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளதுடன் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகி வந்துள்ளன. அப்பாடல்களுள் சிலவற்றைத் தொகுத்து ‘கவிதைப் பூம்பொழில்’ என்னும் பெயருடன் ஸ்ரீ லங்கா புத்தகசாலை 1964 ஆம் ஆண்டு வெளியிட்டது. அத்தொகுப்புக்குப் பண்டிதமணி சி. கணபதிப்பிளை, சோ. இளமுருகனார் ஆகியோர் சிறப்புப் பாயிரம் நல்கியிருந்தனர்.
வேந்தனாரின் சிறுவர்களுக்கான கவிதைகள் சுட்டிக்காட்டத்தக்க முக்கியதுவம் வாய்ந்தனவாகும். அவரின்,
- “காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
- கட்டிக் கொள்ளும் அம்மா
- பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
- பருகத் தந்த அம்மா”
எனும் சிறுவர்க்காக எழுதிய பாடல் இன்றும் சிறுவர்களால் பாடப்பட்டு வருகிறது.
பட்டங்கள்
[தொகு]மதுரை தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டத்தையும் சைவசித்தாந்த சமாசத்தில் சைவப் புலவர் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தைப் பெற்றவர் வேந்தனார். வாழுங் காலத்திலேயே திருவாவடுதுறை ஆதீனத்தாரால் ‘தமிழன்பர்’ என்ற பட்டமும் (1947), ஸ்ரீலங்கா சைவாதீனத்தினரால் ‘சித்தாந்த சிரோமணி’ (1964) என்ற பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்.
வேந்தனாரின் நூல்கள்
[தொகு]- இந்து சமயம் (பாட நூல்)
- திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சியும் குயிற்பத்தும் (1961)
- கவிதைப் பூம்பொழில் (1964, 2010)
- குழந்தை மொழி” (சிறுவர் பாடல்கள், 2010),
- தன்னேர் இலாத தமிழ்" (கட்டுரைத் தொகுப்பு, 2010)
- "மாணவர் தமிழ் விருந்து" - கட்டுரைநூல் - பாகம் 2 (2019)
- "தமிழ் இலக்கியச்சோலை" - கட்டுரைநூல்- பாகம் 3 (2019)
- "குழந்தைமொழி"- பாகம் 1 (2018)
- "குழந்தைமொழி"- பாகம் 2 (2019)
- "குழந்தைமொழி"- பாகம் 3 (2019)
- கம்பராமாயணம் - கும்பகர்ணன் வதைப் படலம் - பாடநூல்
- கம்பராமாயணம் - காட்சிப்படலமும் நிந்தனைப் படலமும்- பாடநூல்
- கம்பராமாயணம் - மந்தரை சூழ்ச்சிப்படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்- பாடநூல்
- பாரதியார் பாடல்கள் விளக்கவுரை - பாடநூல்
உசாத்துணைகள்
[தொகு]- என்றும் நினைவில் அழியா 20ம் நூற்றாண்டு இலக்கியகர்த்தா பரணிடப்பட்டது 2012-03-25 at the வந்தவழி இயந்திரம், தினகரன், செப்டம்பர் 26, 2010
- வித்துவான் வேந்தனாரின் வாழ்வும் தமிழ்ப் பணியும்[தொடர்பிழந்த இணைப்பு], மா. க. ஈழவேந்தன்
- கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!, வ.ந.கிரிதரன்