உள்ளடக்கத்துக்குச் செல்

க. பசுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. பசுபதி
பிறப்பு(1925-07-14)14 சூலை 1925
வராத்துப்பளை, பருத்தித்துறை, இலங்கை
இறப்புசூலை 5, 1965(1965-07-05) (அகவை 39)
இறப்பிற்கான
காரணம்
புற்றுநோய்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விநல்லூர் ஆசிரிய கலாசாலை
பணிஆசிரியர், இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்
அறியப்படுவதுகவிஞர்
பெற்றோர்கந்தையா
அன்னம்

க. பசுபதி (14 சூலை 1925 – 5 சூலை 1965) ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர். யாழ்ப்பாணக் கவிராயர் என்ற புனை பெயரில் தனது கவிதைகளை எழுதினார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1925 ஆம் ஆண்டு பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் கந்தையா - அன்னம் தம்பதியருக்குப் பிள்ளையாகப் பிறந்தார்.[1] காலஞ்சென்ற தமிழறிஞர் கந்த முருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்ற பசுபதி தம் கவிப்புலமையை விருத்தி செய்துகொண்டார்.

கவிதை இயற்றல்

[தொகு]

இளமைக் காலத்திலிருந்தே கவிதைகளைப் படைத்துவந்த இவர், இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளிவரும் பல பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை வெளியிட்டு வந்துள்ளார். பல நூறு கவிதைகளை எழுதியுள்ளார்.[1]

சாதிப் போராட்டம்

[தொகு]

யாழ்ப்பாண சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பசுபதி, தனது ஆரம்ப கல்வியைக் கற்கத் தொடங்கிய காலம் தொடக்கம், பாடசாலைகளில் சாதிக்கொடுமையால் பாதிப்புகள் பலவற்றைச் சந்திக்க நேர்ந்தது. இதனால், இளமைக் காலத்தில் இருந்து சாதிக் கொடுமைக்கு எதிரான போராட்ட உணர்வும் சமூக சேவையில் நாட்டமும் வரப்பெற்றார். அந்நாட்களில் யாழ்ப்பாணத்திலும் பருத்தித்துறையிலும் செயற்பட்ட சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஐக்கிய சேவாசங்கம் போன்ற சமூக சீர்திருத்த அமைப்புகளுடன் இணைந்து சேவை செய்தார்.[1]

இவரது தமிழாசிரியர் கந்தமுருகேசனார் பகுத்தறிவு வாதியாக இருந்தமையால் பசுபதியும் பகுத்தறிவுக் கொள்கையில் ஊறி தன்னையும் பகுத்தறிவு வாதியாக மாற்றிக்கொண்டு ஒரு இறைமறுப்பாளராகவே வாழ்ந்தார்.

1956 தொடக்கம் 1963 வரை அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் இணைச் செயலாளராகவும் நிர்வாகச் செயலாளராகவும் பணியாற்றினார். இக் காலகட்டத்தில் மகா சபையின் முயற்சியால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதியிலும் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்காக சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. இந்த முயற்சியின் பின்னணியில் கவிஞர் பசுபதியும் செயற்பட்டார். மேலும், மகாசபையின் தலைமையில் நடத்தப்பட்ட தேநீர்க் கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் என்பவற்றில் தீவிரமாக ஈடுபட்டார்.[1]

தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள், அவர்களுடைய பிரச்சினைகள், எதிர்கால நடவடிக்கைள் என்பவற்றை வளர்ச்சி பூர்வமாக விளக்கி, 1959 இல் வெளியிடப்பட்ட மகாசபை மலர் என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்குப் பொறுப்பாசிரியராக இருந்து பசுபதி பணியாற்றினார். 1956 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினராக சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார்.[1]

ஆசிரியப் பணி

[தொகு]

நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முதலில் இரத்மலானையிலும், பின்னர் கைதடியிலுள்ள செவிடர் குருடர் பாடசாலையில் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.[1]

முற்போக்குக் கவிஞர்

[தொகு]

முற்போக்குக் கவிஞராக இருந்த பசுபதி தனது கவிதைகளில் சமூகக் கொடுமைகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இவருடைய முற்போக்குக் கவிதைகள் தமிழக, ஈழ்த்துப் பத்திரிகைகளில் வெளிவந்தன. கொழும்புப் பத்திரிகைகளில் பாலர் பகுதியில் சிறுவர்களுக்கான பாக்களையும் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது மறைவிற்குப் பின்னால் 1965 செப்டம்பரில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் புது உலகம் என்ற பெயரில் இவரது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது.[1]

மறைவு

[தொகு]

பசுபதி தனது 40வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார்.[1]

வெளிவந்த நூல்கள்

[தொகு]
தளத்தில்
க. பசுபதி
நூல் உள்ளது.
  • புது உலகம் (பசுபதி கவிதைகள், 1965)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 த. பரமலிங்கம் (ஏப்ரல்-சூன் 1983). "மக்கள் கவிஞர் க. பசுபதி". மக்கள் இலக்கியம்: பக். 15-16. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1983.04-06. பார்த்த நாள்: 2017-12-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பசுபதி&oldid=3619678" இலிருந்து மீள்விக்கப்பட்டது