உள்ளடக்கத்துக்குச் செல்

க. சு. நவநீதகிருஷ்ண பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவநீதகிருஷ்ண பாரதி
பிறப்பு(1889-03-01)1 மார்ச்சு 1889
கரவட்டங்குடி, கிருஷ்ணாபுரம், தமிழ்நாடு
இறப்புதிசம்பர் 22, 1954(1954-12-22) (அகவை 65)
இருப்பிடம்மாவிட்டபுரம், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிதமிழாசிரியர், புலவர்
அறியப்படுவதுதமிழறிஞர்
பெற்றோர்சுப்பிரமணிய பாரதி
வாழ்க்கைத்
துணை
சௌந்தரநாயகி
பிள்ளைகள்பத்மாவதி பூர்ணானந்தா

க. சு. நவநீதகிருஷ்ண பாரதி (1 மார்ச் 1889 - 22 திசம்பர் 1954)[1] ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் இயற்றிய தனிச் செய்யுள்களின் தொகுப்பாகிய உலகியல் விளக்கம் என்னும் நூலின் பதிப்பாசிரியராய் விபுலாநந்த அடிகள் பணியாற்றியுள்ளார். அடிகளின் பதிகத்தினையும், கடவுள் வாழ்த்தினையும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட முன்னுரையினையும் கொண்டு 1922 இல் இந்நூல் வெளியிடப்பட்டது.[2] திருவாசகம், நன்னூல், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதி இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பாராட்டுப் பெற்றார்.[3]

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

நவநீதகிருஷ்ண பாரதி தமிழ்நாடு, கிருஷ்ணாபுரம், கரவட்டங்குடியில் சுப்பிரமணிய பாரதி, தைலம்மை ஆகியோருக்குப் பிறந்தார்.[4] இராமசாமிப்‌ புலவரிடம்‌ தமிழ்‌ மொழியைக் கற்றார்‌. இளம் வயதில் இலக்கணம், இலக்கியம், தருக்கம் ஆகியவற்றைக் கற்றார். நாராயணசாமி ஐயரிடம்‌ சங்க இலக்கியங்களையும்‌, அரசஞ்சண்முகனாரிடம்‌ தொல்காப்பியத்தையும்‌ கற்றுத்‌ தேர்ந்தார்.[5] தனது பதினெட்டாவது வயதில்‌ பாலைக்காடு விக்டோரியாக்‌ கல்லூரியில்‌ தமிழ்ப்‌ பண்டிதராகப்‌ பணியாற்றத்‌ தொடங்கினார்‌. இரண்டு ஆண்டுகளின் பின் திருவாவடுதுறை அம்பலவாணதேசிக சுவாமிகளுக்குத்‌ திருமுறை ஆய்வுத் துணைவராகவும்‌,[4] தொடர்ந்து திருவாரூர்க்‌ கல்லூரியில்‌ ஆசிரியராகவும்‌ பணியாற்றினார்.

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியிலும், இராமநாதன் கல்லூரியிலும் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்ற 1917 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார்.[2][4] மாவிட்டபுரத்தில்‌ இவர்‌ வாழ்ந்த வீடு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மேற்கு வீதிக்‌ கரையில்‌ அமைந்திருந்தது. தேசநேசன் இதழில் இவர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[4] இவரது மனைவி பெயர் சவுந்தரநாயகி. சமூகசேவகி காலஞ்சென்ற பத்மாவதி பூர்ணானந்தா இவர்களது மகள் ஆவார்.[6]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • உலகியல் விளக்கம் (செய்யுள் தொகுப்பு), 1922
  • பாரதீயம் (3 பாகங்கள், இலக்கண நூல்), 1949
  • திருவாசகப்பேறு: சிவபுராணமும் கீர்த்தித்திருவகவலும், நாவலர் அச்சுக்கூடம், 1953
  • திருவாசகம் ஆராய்ச்சிப் பேருரை, தெல்லிப்பழை, 1954
  • பறம்புமலைப் பாரி (செய்யுள்கள்)[2]
  • புத்திளஞ் செழுங்கதிர்ச் செல்வம் (செய்யுள்கள்)[4]
  • திருவடிக் கதம்பம் (செய்யுள்கள்)[2]
  • காந்தி வெண்பா (அச்சில் வெளிவரவில்லை)[2]

பட்டங்கள்

[தொகு]
  • பண்டிதர்
  • புலவர்மணி - யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் 1952 திசம்பர் 1 இல் பொற்கிழியளித்து இப்பட்டத்தை வழங்கியது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
தளத்தில்
க. சு. நவநீதகிருஷ்ண பாரதி எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. தமிழ்ப் புலவர் வரிசை ஒன்பதாம் புத்தகம், சு. அ. இராமசாமிப் புலவர், பக். 134, 1955
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 ஈழகேசரி வெள்ளிவிழா மலர். யாழ்ப்பாணம்: ஈழகேசரி. 1956. pp. பக். 209.
  3. "உரையாசிரியர்கள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். Archived from the original on 27 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2022.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 நாவலர் மாநாடு விழா மலர் 1969. 1969.
  5. 5.0 5.1 கலாநிதி, திசம்பர் 1952, பக். 7
  6. "இறைபதமடைந்த சமூகசேவகி பத்மாவதி பூரணானந்தா". தினக்குரல். 10 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சு._நவநீதகிருஷ்ண_பாரதி&oldid=3934629" இலிருந்து மீள்விக்கப்பட்டது