க. சிவப்பிரகாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

க. சிவப்பிரகாசம் (இறப்பு: ஏப்ரல் 14, 2017) இலங்கைத் தமிழ் பத்திரிகையாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிவப்பிரகாசம் யாழ்ப்பாணம் மாதகலைப் பூர்வீகமாகக் கொண்டவர். தந்தை கந்தசாமி மலையகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அங்கு பிறந்தவர் சிவப்பிரகாசம்.[1] 1958 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் இந்து மாணவர் சங்கம் மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியனவற்றில் இணைந்து செயற்பட்டார். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய நாடகங்களில் நடித்திருக்கிறார்.[1] பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்னர், சிவப்பிரகாசம் கொழும்பு ஏரிக்கரைப் பத்திரிகை நிறுவனத்தில் சேர்ந்து ஓப்சேர்வர் பத்திரிகையில் 1958 முதல் 1962 வரை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.[2]> பின்னர் பேராசிரியர் க. கைலாசபதி தினகரன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தினகரனில் துணை ஆசிரியர் பணியில் சேர்ந்தார். செருமனி, பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு பல பயண இலக்கியக் கட்டுரைகளை எழுதினார்.[1]

வீரகேசரியில் இணைவு[தொகு]

எஸ்மண்ட் விக்கிரமசிங்க (ரணில் விக்கிரமசிங்கவின் தந்தை) வீரகேசரியின் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது, சிவப்பிரகாசம் அவர்களை வீரகேசரியில் இணைத்தார். 1966 ஆம் ஆண்டில் சிவப்பிரகாசம் இணை ஆசிரியராக இணைந்தவர், பின்னர் 1983 வரை பிரதம ஆசிரியராகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.[1] 1966 இல் சிவப்பிரகாசம் வீரகேசரியின் மாலைத்தினசரியாக மித்திரன் பத்திரிகையை அறிமுகப்படுத்தினார்.[3] பின்னர் ஜோதி, நவீன விஞ்ஞானி ஆகிய வாரப் பத்திரிகைகளையும் அறிமுகப்படுத்தினார். இக்காலத்தில் இவர் சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானார்.[1]

பயண இலக்கியம்[தொகு]

1975 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சென்று திரும்பி தனது பயண அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் 12 வாரங்கள் வெளியிட்டார். இந்தப்பயணத் தொடர் 1976 சூலையில் வீரகேசரி பிரசுரமாக சிரித்தன செம்மலர்கள் என்ற பெயரில் வெளியானது.[1]

புலம்பெயர்வு[தொகு]

1983 ஆடிக் கலவரம் இடம்பெற்றபோது, வீரகேசரி பணியாளர்களும் பாதிக்கப்பட்டனர். சில நாட்கள் பத்திரிகை வெளிவரவில்லை. சிவப்பிரகாசத்தின் வீடும் வாகனமும் சேதமானது.[1][4] இக்கலவரம் பற்றி அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட அவரும் அவரது குடும்பமும் ஐக்கிய அமெரிக்காவிற்குப் புலம் பெயர நேர்ந்தது. நீண்ட காலம் பொஸ்டன் மாநிலத்தில் வசித்து வந்த இவர் 2017 ஏப்ரல் 14 அன்று வர்ஜீனியா மாநில மருத்துவமனையில் தனது 83வது அகவையில் காலமானார். இவருடைய மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
க. சிவப்பிரகாசம் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சிவப்பிரகாசம்&oldid=2253852" இருந்து மீள்விக்கப்பட்டது