க. சண்முகரத்தினம்
க. சண்முகரத்தினம் K. Shanmugaratnam | |
|---|---|
| கனகரத்தினம் சண்முகரத்தினம் | |
| தாய்மொழியில் பெயர் | கனகரத்தினம் சண்முகரத்தினம் |
| பிறப்பு | 2 ஏப்ரல் 1921 சிங்கப்பூர், நீரிணைக் குடியேற்றங்கள் |
| இறப்பு | 28 சூலை 2018 (அகவை 97) சிங்கப்பூர் |
| கல்வி | மூன்ன்றாம் எட்வர்டு மன்னர் மருத்துவக் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகம் |
| பணி | நோயியல் |
| பிள்ளைகள் | 3; தர்மன் சண்முகரத்தினம் உட்பட |
கே. சண்முகரத்தினம் என அழைக்கப்படும் கனகரத்தினம் சண்முகரத்தினம் (Kanagaratnam Shanmugaratnam, 2 ஏப்பிரல் 1921 – 28 சூலை 2018), சிங்கப்பூரின் அறிவியலாளரும், நுண்திசுநோய்கூறியலாளரும், சிங்கப்பூரின் நோயியலின் தந்தை என அழைக்கப்பட்டவரும் ஆவார். இவர் மூக்குத்தொண்டை தசைப்புற்று குறித்த ஆய்வுக்காகவும்,[1] சிங்கப்பூர் புற்றுநோய் பதிவேட்டை நிறுவியமைக்காகவும் அறியப்பட்டார்.[2]
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]சண்முகரத்தினம் 1921 இல் சிங்கப்பூரில் இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார்.[3] இவரின் தந்தை ஒர்ர் ஆசிரியர் ஆவார்.
விக்டோரியா பாடசாலையில் இடைநிலைக் கல்வியைப் பெற்ற சண்முகரத்தினம் 1937 இல் ஏழாம் எட்வர்டு மன்னர் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பிற்காக சேர்ந்தார். ஆனால் இரண்டாம் உலகப் போர், சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அவரது கல்வி தடைப்பட்டது.[4] இறுதியில் 1947 இல் பட்டம் பெற்றார்.
இளங்கலைப் பட்டதாரியாக, சண்முகரத்தினம் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கினார். பல்வேறு கல்விப் பரிசுகளை வென்றும், மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியும் ஒரு திறமையான மாணவராகக் குறிப்பிடப்பட்டார். சண்முகரத்தினத்திற்கு 1957 இல் இலண்டன் பல்கலைக்க்ழக முதுகலை மருத்துவப் பள்ளியில் பிரித்தானிய அரசியாரின் ஆய்வூதியம் வழங்கப்பட்டு முனைவர் பட்டம் பெற்றார்.[4]
பணி
[தொகு]சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படைகளால் கட்டாயமாக உடல் உழைப்பாளராக சேர்க்கப்படுவதைத் தவிர்க்க சண்முகரத்திம் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். மருத்துவ உரிமத்தைப் பெற்ற பிறகு, அவர் அரசு மருத்துவ சேவையில் ஒரு நோயியலாளராகச் சேர்ந்தார்.[1] 1950 ஆம் ஆண்டில், உள்ளூர் நோய் முறைகளைக் கவனிப்பதில் ஆர்வமாக இருந்த அவர், சிங்கப்பூரில் உள்ள அனைத்து திசுவியல் ரீதியாகக் கண்டறியப்பட்ட புற்றுநோய்களின் எளிய அட்டைக் குறியீட்டைத் தொடங்கினார். அந்த நேரத்தில், அரசாங்கத்தின் நோயியல் துறை முழு நாட்டின் திசுவியல் சேவைகளுக்கும் பொறுப்பாக இருந்தது.[1]
1967 இல், பன்னாட்டுப் புற்றுநோய் ஆய்வு நிறுவனம், சிங்கப்பூர் புற்றுநோய் சங்கம் ஆகியவற்றின் நிதி ஆதரவுடன் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் நோயியல் துறையில் சிங்கப்பூர் புற்றுநோய்ப் பதிவேட்டை நிறுவுவதற்கு சண்முகரத்தினம் தலைமை தாங்கினார்.[2] இது தென்கிழக்கு ஆசியாவில் முதல் விரிவான, மக்கள் தொகை அடிப்படையிலான புற்றுநோய்ப் பதிவேடாகும். சிங்கப்பூரின் மக்கள் தொகை அதிகரித்து, திட்டத்தின் அளவு பல ஆண்டுகளாக விரிவடைந்ததால், புற்றுநோய்ப் பதிவேடு 2001 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சிற்கு மாற்றப்பட்டது, இப்போது அது தேசிய நோய்கள் பதிவு அலுவலகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.[1][5] ஒரு ஆய்வாளராக, அவரது முக்கிய நிபுணத்துவப் பகுதி மூக்குத்தொண்டை தசைப்புற்று ஆகும், இது தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு சீனாவில் அதிக நிகழ்வு விகிதங்களைக் கொண்ட ஒரு வகைப் புற்றுநோய் ஆகும்.[6]
சிங்கப்பூரில் மருத்துவக் கல்வியின் வளர்ச்சிக்கு, குறிப்பாக உரிமம் பெற்ற உள்ளூர் மருத்துவர்களுக்கான பட்டப்பின் படிப்புப் பயிற்சிக்கு, சண்முகரத்தினம் ஒரு பங்களிப்பாளராக இருந்தார். 1960களின் பிற்பகுதியில், சிங்கப்பூர் பல்கலைக்கழகம் மருத்துவப் பட்டப்பின் படிப்புக் கல்வியை முறைப்படுத்தத் தவறியதற்காகவும் உள்ளூர்த் தகுதிகளை வழங்குவதில் தோல்வியடைந்ததற்காகவும் முன்னாள் கல்வியாளரும், அப்போதைய துணைப் பிரதமருமான டோ சின் சாய், பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தணிக்கை செய்து உள்ளூர் பத்திரிகைத் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்; இந்த முயற்சியை மேற்பார்வையிடும் ஒரு குழுவின் தலைவராக அப்போதைய மருத்துவக் கழகத்தின் முதுகலை நிபுணரான சண்முகரத்தினத்தை அவர் குறிப்பாகக் கேட்டுக்கொண்டார்.[7] இம்முயற்சி 1970 வாக்கில் வெற்றியீட்டியது. உள்ளூர் மருத்துவர்கள் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உள்நாட்டு மருத்துவமனைகளில் சிறப்புப் பயிற்சியை முடிக்க அனுமதித்தது[8]
1986-இல் சண்முகரத்தினம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார், தனது தொண்ணூறுகளின் முற்பகுதி வரை விரிவுரைகளையும் கருத்தரங்குகளையும் நடத்தினார். சண்முகரத்தினம், மருத்துவக் கழகம், சிங்கப்பூர் மருத்துவப் பேரவை, பன்னாட்டுப் புற்றுநோய்க் கட்டுப்பாட்டு ஒன்றியம் போன்ற பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.[9]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சண்முகரத்தினத்திற்கு மூன்று பிள்ளைகள், அவர்களில் ஒருவர் பொருளியலாலர் தர்மன் சண்முகரத்தினம், இவர் சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் (2011-2019), தற்போதைய குடியரசுத் தலைவரும் (2023 செப்டம்பர் முதல்) ஆவார்.[3]
சண்முகரத்தினம் தனது 97-ஆவது அகவையில் 2018 சூலை 28 அன்று சிங்கப்பூரில் காலமானார்.[1][9][10][11][12][13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Sim, Shuzhen (30 July 2018). "Renowned Pathologist K. Shanmugaratnam Dies At 97 (In Memoriam)". ஆசிய விஞ்ஞானி. https://www.asianscientist.com/2018/07/features/kanagaratnam-shanmugaratnam-obituary-pathology/. பார்த்த நாள்: 1 August 2018.
- ↑ 2.0 2.1 "Commemorating 50 Years of the Singapore Cancer Registry and the Legacy of Professor K Shanmugaratnam". சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் Saw Swee Hock School of Public Health. 12 December 2019. https://sph.nus.edu.sg/2019/12/commemorating-50-years-of-the-singapore-cancer-registry-and-the-legacy-of-professor-k-shanmugaratnam/.
- ↑ 3.0 3.1 "Tamils in Federated Malaya and Singapore". Daily News. 19 February 2016. http://www.dailynews.lk/?q=2016/02/20/features/tamils-federated-malaya-and-singapore.
- ↑ 4.0 4.1 "Queen's Fellowship". Indian Daily Mail (தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் NewspaperSG Digital Archives). 9 January 1954. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/issue/indiandailymail19540109-1.
- ↑ "Speech by Mr Gan Kim Yong, Minister for Health, at the launch of the Singapore Cancer Registry 50th Anniversary monograph, 25 Nov 2019". சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம். 25 November 2019. https://www.moh.gov.sg/news-highlights/details/speech-by-mr-gan-kim-yong-minister-for-health-at-the-launch-of-the-singapore-cancer-registry-50th-anniversary-monograph-25-nov-2019.
- ↑ "Building A Treasure Chest Of Medical Data". ஆசிய விஞ்ஞானி. 23 March 2016. https://www.asianscientist.com/2016/03/features/sg50-pioneer-kanagaratnam-shanmugaratnam-building-treasure-chest-medical-data/.
- ↑ "About Us — Past Masters & Honorary Fellows". Academy of Medicine, Singapore.
- ↑ Quah, Jipson (March 2017). "The Path of Making History – Interview with Prof Chew Chin Hin". SMA News. Singapore Medical Association.
- ↑ 9.0 9.1 Tock, Edward P.C. "Citation on Emeritus Professor K Shanmugaratnam, SMA Honorary Member" (PDF). Singapore Medical Association. Retrieved 1 August 2018.
- ↑ Ng, Keng Gene (29 July 2018). "Founder of Singapore Cancer Registry K. Shanmugaratnam dies aged 97". The Straits Times. https://www.straitstimes.com/singapore/spore-cancer-registry-founder-dies-aged-97. பார்த்த நாள்: 1 August 2018.
- ↑ Tan, Martino (29 July 2018). "Kanagaratnam Shanmugaratnam, founder of S'pore Cancer Registry & father of DPM Tharman, dies". mothership.sg. Retrieved 1 August 2018.
- ↑ "Shanmugaratnam Kanagaratnam". சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம். Retrieved 1 August 2018.
- ↑ "Portrait of Dr. K. Shanmugaratnam, Master of Academy of Medicine in Singapore". தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர். Retrieved 1 August 2018.