க. அப்புலிங்கம் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அப்புலிங்கம் என்பவர் தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர். புதுக்கவிதைகளின் வளர்ச்சியில் இவரது பங்கு அதிகம் உண்டு. நிலக்கிழார், சிவனடியார், சமூக அன்னம்பாலிப்பு சத்திரக் காப்பாளர், பதிப்பாளர் போன்ற பன்முகப் பார்வைக் கொண்டவர்.[1]

பிறப்பும் இளமையும்[தொகு]

இவர் திருச்சி மாவட்டம், திருவானைக்கா எனும் ஊரில் 03-7-1917 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் கணபதியாப் பிள்ளை-மதுரம் அம்மாள் ஆவர். தமிழில் புலவர் பட்டம் பெற்ற இவர், அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் கலைவாணன் எனும் புனைப்பெயரில் கவிதைகள் படைத்துள்ளார்.

கவிதைப் பணிகள்[தொகு]

இவர் கலை இலக்கிய முற்போக்கு இதழ்களான கிராம ஊழியன், வசந்தம், கலைமகள், கலாமோகினி உள்ளிட்ட இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். 1963 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற பன்மொழிக் கவியரங்கில் கலந்து கொண்டு கவிதைகள் வாசித்துள்ளார்.1942 இல் காந்தியின் வேண்டுகோளுக்கிணங்கத், தாம் அணிந்திருந்த அந்நியத் துணியைத் தீயிலிட்டுப் பொசுக்கிக் கதர் ஆடை அணியத்தொடங்கினார். சுமார் 500 கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதைகள் படைத்துள்ளார்.

படைப்புகள்[தொகு]

அவருடைய படைப்புகளில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல நூல்கள் அடங்கும்.

 • உதயம்
 • நிவேதனம்
 • அழியா அழகி
 • ஆன்மாராதனை
 • வயலூர் முருகன் பிள்ளைத்தமிழ் [2]
 • காவை முருகன் பிள்ளைத்தமிழ்
 • மனச்சிமிழ்
 • ஞானதீபம்
 • காவிரி
 • ஜீவானந்தம்

விருதுகள்[தொகு]

சாகித்திய அகாதெமி பரிசு, தமிழகக் கவிஞர் மன்றத்தின் பரிசு என பல பெற்றவர். திருச்சி தமிழ்ப் பேரவை இவருக்கு, கவிஞர் திலகம் எனும் விருது வழங்கியுள்ளது. 1986ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான முதல் பரிசினை இவரது, கலைவாணன் கவிதைகள் எனும் நூல் பெற்றுள்ளது.அமெரிக்க நாட்டு உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

மறைவு[தொகு]

இவர் 12-02-1988இல் மறைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. இருபதாம் நூற்றாண்டில் 100 தமிழ்க் கவிஞர்கள். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ். 2004. பக். 90. 
 2. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குமார வயலூர், திருச்சிராப்பள்ளி

உசாத்துணை[தொகு]