கௌரி ஹப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரி ஹப்பா
பிற பெயர்(கள்)கௌரி நோன்பு / விரதம்/ பண்டிகை
கடைபிடிப்போர்இந்து
வகைகலாச்சார, பருவகால, இந்து சமய வழிபாடு
தொடக்கம்புரட்டாசி சுக்ல பட்சம் திருதியை
நாள்சூரியசந்திர நாட்காட்டியின் படி
நிகழ்வுவருடத்திற்கு ஒருமுறை

கௌரி ஹப்பா (Gowri Habba) என்பது கர்நாடகாவில் விநாயக சதுர்த்திக்கு ஒரு நாள் முன்பு கொண்டாடப்படும் இந்து பண்டிகையாகும் .

இந்த திருவிழா விநாயகரின் தாயாக போற்றப்படும் கௌரி தேவியை கொண்டாடுகிறது. இது பொதுவாக திருமணமான பெண்களால் அனுசரிக்கப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்டிகையாக உள்ளது. [1] இந்த பண்டிகை, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய வட இந்திய மாநிலங்களில் ஹர்தாலிகா என்று அழைக்கப்படுகிறது. விநாயகரின் தாயும் சிவனின் மனைவியுமான கௌரி, தனது பக்தர்களுக்கு தைரியத்தையும் சக்தியையும் அளிக்கும் திறனுக்காக இந்தியா முழுவதும் வணங்கப்படுகிறார். கௌரி ஆதி சக்தி மகாமாயாவின் அவதாரம் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. கௌரி சிவனின் சக்தியாக உள்ளார். தாடிகே அல்லது பாத்ரா மாதத்தின் மூன்றாம் நாளில், திருமணமான பெண்கள் தன் பெற்றோர் வீட்டிற்கு வருவதைப் போல கௌரி வீட்டிற்கு வருவாள் என்று நம்பப்படுகிறது. மறுநாள் அவரை மீண்டும் கைலாசத்திற்கு அழைத்துச் செல்வது போல அவரது மகன் விநாயகர் வருகிறார் என்று புராணம் சொல்கிறது.

சொர்ண கௌரி விரதம் அம்மனை சாந்தப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்றும் இந்து மக்களால் கருதப்படுகிறது. [2]

சொர்ண கௌரி விரத சடங்குகள்[தொகு]

இந்த நாளில், திருமணமான பெண்கள், குளித்துவிட்டு, புதிய ஆடைகளை அணிந்து, குடும்பத்திலுள்ள சிறுமிகளை அலங்கரிப்பார்கள். பின்னர் அவர்கள் ஜலகௌரி அல்லது மஞ்சளால் செய்யப்பட்ட கௌரியின் அடையாளச் சிலையை 'ஸ்தாபனம்' செய்கிறார்கள். கௌரியின் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட களிமண் சிலைகள் உள்ளூர் சந்தையில் கிடைக்கிறது. அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை அரிசி அல்லது கோதுமை தானியம் நிரப்பிய ஒரு தட்டில், வைத்து பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜை அல்லது சடங்கு சுத்தம், அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப்படுகிறது. பின்னர், பூஜை செய்த பெண்கள் கோவில்களுக்கும் அல்லது இந்த பண்டிகையை செய்த மற்றொருவரின் வீட்டிற்கும் செல்கிறார்கள், அங்கு, அவரவர் வீட்டில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி சடங்குகள் செய்யப்படுகிறது.

ஒரு மண்டபம், பொதுவாக வாழைமரக் கன்று மற்றும் மாவிலை தோரணங்களாலும், வண்ணமயமான பூக்களாலும் அலங்கரிக்கப்படுகிறது. கௌரி தேவி, பூமாலைகள், பருத்தியால் செய்யப்பட்ட ஆடை, மேலும் அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படுகிறார். பூக்கள் மற்றும் அட்சதையால் வழிபாடு மேற்கொண்ட பெண்கள் தங்கள் வலது மணிக்கட்டில் 'கௌரிதாரா' எனப்படும் பதினாறு முடிச்சுகள் கொண்ட புனித நூல் ஒன்றைத் தங்களின் வலது கையில் கட்டிக் கொள்கின்றனர். இந்த சடங்கு, கௌரியின் ஆசீர்வாதமாகவும், விரதத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. மேலும், பதினாறு முடிச்சுகளில் ஒவ்வொன்றும் சமய நடைமுறையின் போது மந்திரங்களால் வழிபடப்படுகிறது. [3] [4]

திருவிழாவின் போது பாகின பிரசாதம் எனப்படும் தாம்பூலம் வழங்கப்படுகிறது. விரதத்தின் ஒரு பகுதியாக குறைந்தது ஐந்து பேருக்கு இவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும், பொதுவாக மஞ்சள், குங்குமம், வளையல்கள், கருப்பு மணிகள் (மங்கலசூத்திரத்தில் பயன்படுத்தப்படுகிறது), ஒரு சீப்பு, ஒரு சிறிய கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள் தேங்காய், ரவிக்கை துண்டு, தானியங்களில் அரிசி, துவரம் பருப்பு பச்சை பருப்பு, கோதுமை அல்லது ரவை மேலும் வெல்லம் ஒரு கனசதுர வடிவில் வெட்டப்பட்டது போன்றவை இருக்கும். பாகினா எனப்படும் இந்த தாம்பூலம், பாரம்பரிய பொருளான புதிய முறங்களில் வழங்கப்படுகிறது. அதன் மேற்புரம் மஞ்சளால் வரையப்பட்டது. இவ்வாறு அனைத்து பொருட்களும் இருக்கும் ஒரு தாம்பூலம் பூஜை செய்த கௌரிதேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மீதமுள்ளவை திருமணமான பெண்களுக்கு வழங்கப்படுகிறது. [2] [5]

புகைப்படங்கள்[தொகு]

சொர்ண கௌரிதேவி பண்டிகையைக் குறிக்கும் புகைப்படங்கள்:

விநாயகருடன் கௌரிதேவி
கௌரி விரத பண்டிகையின் (தாம்பூலம்) உள்ளடக்கம் பகுதி 1
கௌரி விரத தாம்பூலத்தின் உள்ளடக்கம் பகுதி 2
கௌரி விரத தாம்பூலத்தின் உள்ளடக்கம் பகுதி 3
கௌரி ஹப்பா சடங்கு - திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து மஞ்சள் மற்றும் குங்குமத்தை வழங்குதல்
கௌரி விரத பண்டிகையில் பயன்படுத்தப்படும் புதிய முறம்

சான்றுகள்[தொகு]

  1. Hamilton, Francis formerly Buchanan (1807). "A" Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar ... in the Dominions of the Rajah of Mysore and the Countries Acquired by the East-India-Company: Volume 4. Cadell & Davies. பக். 94. 
  2. 2.0 2.1 http://www.mantraaonline.com/wp-content/uploads/Puja/Gowri/Gowrieng.pdf Page 15 Puja Text – Sri S.A.Bhandarkar Transliterated by Sowmya Ramkumar
  3. Ome, Hari; HariOme (2016-08-04). "How to observe Swarna Gowri Vratha? • Hari Ome" (in en-US). https://www.hariome.com/how-to-observe-swarna-gowri-vratha/. 
  4. Sri Swarnagowri Vrata | Pooja Vidhana in kannada by VEDA BRAHMA SHRI GANAPATHI SHASTRYGALU (in ஆங்கிலம்), retrieved 2019-08-29
  5. Blog, Bangalore Press (2013-09-06). "Celebrate with Bangalore Press: How to observe Swarna Gowri Vratha?". https://bangalorepress.blogspot.com/2013/09/how-to-observe-swarna-gowri-vratha.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_ஹப்பா&oldid=3677909" இருந்து மீள்விக்கப்பட்டது