கோஹிஸ்தான் மாவட்டம்
கோஹிஸ்தான் (کوہستان) பாகிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது வடமேற்கு முன்னரங்க மாகாணத்தின் ஆளுகைப் பரப்புக்கு உட்பட்டது. பாரசீக மொழியில் கோஹிஸ்தான் என்பது மலை நாடு என்னும் பொருள் தரும் ஒரு சொல்லாகும். நடு, தென் மற்றும் தென்மேற்கு ஆசியப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்புப் பதையாக இருந்ததனால் இப் பகுதிக்குச் சிறப்பான வரலாறு உண்டு. இப் பகுதியில், மிகப் பழங்காலம் முதலே பெரும்பான்மையாகத் தார்டிக் மற்றும் பஷ்தூன் இனக்குழுவினர் வாழ்ந்து வருகின்றனர். இப் பகுதி வரலாற்றில், பாரசீகர், கிரேக்கர், சித்தியர், குஷாண்கள், துருக்கியர், ஆப்கானியர், முகலாயர், பிரித்தானியர் போன்றோரால் கைப்பற்றப்பட்டு இருந்துள்ளது.
புவியியல்
[தொகு]இம் மாவட்டம் மிகவும் குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட ஒரு மாவட்டமாகும். இது, காஷ்மீரின் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட ஆசாத் காஷ்மீரைக் கிழக்கு எல்லையாகவும், ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தை மேற்கு எல்லையாகவும் கொண்டது. யூரேசிய நிலத்தட்டும், இந்தியத் துணைக்கண்டமும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பதால், இப் பகுதி, 2005 ஆம் ஆண்டில் காஷ்மீரில் இடம்பெற்றது போன்ற நிலநடுக்கங்களுக்கு உட்படக்கூடியது.
பசுமையான காடுகளையும், பாரிய மலைகளையும், ஆறுகளையும் கொண்டது இம் மாவட்டம். சிந்து நதி இப் பகுதியை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது. கிழக்குப் பகுதி சிந்து கோஹிஸ்தான் என்றும் மேற்குப் பகுதி சுவாத் கோஹிஸ்தான் என்றும் அழைக்கப்படுகின்றது. கில்கிட்டுக்குப் போகும் காராக்கோரம் நெடுஞ்சாலை கோஹிஸ்தான் ஊடாகச் செல்கிறது. இச் சாலையில் உள்ள கோஹிஸ்தான் நகரங்கள் எல்லாமே கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே அமைந்துள்ளன.
கோஹிஸ்தான் மாவட்டம் தாசில்கள் எனப்படும் மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இவை, பாலாஸ், பட்டான், தஸ்சு என்பனவாகும். தஸ்சு நகரம் இம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]பெரும்பாலான கோஹிஸ்தானியர் கால்நடை வளர்ப்பிலேயே தங்கியுள்ளனர். இவர்கள் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும், மாடுகள், செம்மறியாடுகள், ஆடுகள் என்பவற்றை வளர்க்கின்றனர்.