கோவிந்தாஜீ கோயில்

ஆள்கூறுகள்: 24°47′52″N 93°56′55″E / 24.797798°N 93.948486°E / 24.797798; 93.948486
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்தாஜீ கோயில்
[[Image:|280px|alt=|]]
கோவிந்தாஜீ கோயில் is located in மணிப்பூர்
கோவிந்தாஜீ கோயில்
மணிப்பூரின், இம்பாலில் அமைவிடம்
கோவிந்தாஜீ கோயில் is located in இந்தியா
கோவிந்தாஜீ கோயில்
கோவிந்தாஜீ கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மணிப்பூர்
மாவட்டம்:கிழக்கு இம்பால் மாவட்டம்
அமைவு:இம்பால்
ஆள்கூறுகள்:24°47′52″N 93°56′55″E / 24.797798°N 93.948486°E / 24.797798; 93.948486
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:மன்னர் நாராசிங் மற்றும் மன்னர் சந்திரகீர்த்தி சிங்

கோவிந்தஜீ கோயில் (Shree Govindajee Temple) என்பது இந்து தெய்வங்களான இராதை கிருஷ்ணருக்காக (கோவிந்தாஜி) கட்டபட்ட கோயிலாகும். இது இந்தியாவின் மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வைணவக் கோயிலாகும். இது முதலில் 1846 இல் மன்னர் நாராசிங் ஆட்சியின் போது கட்டப்பட்டது. பின்னர் 1876 இல் மன்னர் சந்திரகிருதியால் கோயில் மீண்டும் கட்டப்பட்டது.

அமைவிடம்[தொகு]

மணிப்பூர் இராச்சியத்தின் முன்னாள் மன்னர்களின் அரண்மனையான சானா கோனுங்கிற்கு அருகில் (மணிப்பூரின் தலைநகரான இம்பாலில்) கோவிந்தஜீ கோயில் அமைந்துள்ளது. [1] இம்பாலை சாலை வழியாகவும் வானூர்தி சேவைகள் வழியாகவும் அணுகலாம். தேசிய நெடுஞ்சாலை 39 (இந்தியா) வடக்கில் திமாப்பூர் (நாகாலாந்து) மற்றும் கிழக்கில் மியான்மர் ஆகியவற்றுடன் இணைக்கிறது. மேலும் இது தேசிய நெடுஞ்சாலை 53 (இந்தியா) வழியாக இதை அசாமில் உள்ள சில்சாரை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 150 (இந்தியா) மிசோரமுடன் இணைகிறது. [2] அருகிலுள்ள தொடருந்து இணைப்பானது 215 கிலோமீட்டர்கள் (134 mi) தொலைவில் உள்ள திமாபூர் ஆகும். அங்கிருந்து இம்பாலுக்கு பேருந்து சேவைகள் உள்ளன. புது தில்லி, கொல்கத்தா, குவகாத்தி, சில்சார் ஆகிய இடங்களில் இருந்து இம்பாலுக்கு வானூர்திகள் இயக்கப்படுகின்றன.[3]

வரலாறு[தொகு]

மணிப்பூர் இராச்சியத்தின் மன்னர் நாரா சிங் (கி.பி. 1844 – 50) தங்களின் குல தெய்வமான கோவிந்தாஜிக்கு 1846 ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் தேதி கோவிலை கட்டினார். 1868 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கோயிலும் தெய்வச் சிலைகளும் கணிசமாக சேதமடைந்தன. இதன் விளைவாக, மன்னர் சந்திரகிருதியின் (1859-1886) ஆட்சியின் போது கோயில் அதன் அசல் வடிவமைப்பில் மீண்டும் கட்டப்பட்டது. 26 ஏப்ரல் 1876 இல் சிலைகள் நிறுவப்பட்டன. [4] 1891 ஆம் ஆண்டு ஆங்கிலோ மணிப்பூர் போர் மூண்டபோது கோயிலில் இருந்த கடவுள் சிலைகள் அகற்றபட்டு கொங்மாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் 1908 ஆம் ஆண்டு, சர்ச்சந்த் சிங்கால் மீண்டும் சிலைகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டன.

மணிப்பூர் மன்னர் மகாராஜா ஜெய் சிங் அல்லது பாக்ய சந்திரா கர்த்தா (1763 – 1798), கிருட்டிணரின் சிறந்த பக்தராவார். இவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர் தனக்கும் இராதைக்கும் பலாமரத்தில் சிலை செய்து வழிபடும்படி கூறி மறைந்தார். அதன்படி 1776 ஆம் ஆண்டில் கோவிந்தஜியின் சிலை செதுக்கும் பணி முறையாக தொடங்கப்பட்டது. அந்த பணிகள் முடிவுற்று 1779 நவம்பர் பௌர்ணமி நாளில் அவர் தனது அரண்மனையில் கட்டப்பட்ட கோவிலில் நிறுவினார். அந்தக் காலகட்டத்தில் இங்கு ஐந்து நாட்கள் நாட்டிய நாடகங்கள், ராசலீலைகள் நிகழ்த்தப்பட்டன. [5]

கட்டுமானம்[தொகு]

இக்கோயிலானது தங்கத் தகடுகள் வேயப்பட்ட இரண்டு குவிமாடங்கள், ஒரு பெரிய, உயரமான மண்டபம் ( Meitei [6] ) அல்லது சபை மண்டபம் ஆகியவற்றுடன் நடுத்தர அளவில் அமைந்துள்ளது. கர்பகிருகத்தில் கோவிந்தாஜி ( கிருட்டிணன் ) மற்றும் இராதை ஆகியோர் முதன்மை தெய்வங்களாக உள்ளனர். கருவறைக்கு இருபுறமும் வடக்கு, தெற்கு என இரு சந்நிதிகள் அமைக்கபட்டுள்ளன. அவற்றில் மூலவருக்கு தெற்கு பக்கச் சந்நிதி கிருட்டிணரும், பலராமருக்கும் அமைக்கபட்டுள்ளது. வடக்குப் பக்க சந்நிதியானது ஜகன்னாதருக்கும், சுபத்திரை மற்றும் பாலபத்திரர் ஆகியோருக்கும் அமைக்கபட்டுள்ளது. கோவில் மிகவும் நேர்த்தியாக அமைக்கபட்டுள்ளது. இது ஒரு அழகிய இடத்தில் கட்டப்பட்டுள்ளது. வளாகத்தைச் சுற்றி நன்கு பராமரிக்கப்பட்டுவரும் தோட்டம் அமைந்துள்ளது. கோவிலின் அருகாமையில் ஒரு சிறிய குளம் உள்ளது. மேலும் சுற்றிலும் உயரமான மரங்கள் வரிசையாக நடப்பட்ட ஒரு பெரிய திறந்தவெளி உள்ளது.[7]

முக்கிய கோவில்[தொகு]

இக்கோயில் அரண்மனை போன்று மூன்று வாயில்களுடன், உயரமான மேடையமைப்பின் மீது சதுர வடிவில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு வெள்ளை மாளிகை போல காட்சியளிக்கிறது. கருவறையைச் சுற்றி ஒரு பிரகாரம் அமைக்கபட்டுள்ளது. கோயிலின் மேலே இரண்டு குவிமாடங்கள் உள்ளன. ஒவ்வொரு குவிமாடத்தின் உச்சியிலும் ஒரு கலசம் உள்ளது. கலசத்தின் மேல் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இரண்டு குவிமாடங்களின் மேற்பரப்பும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. கோயில் நுழைவாயில் கிழக்கு நோக்கி உள்ளது. கோயில் செங்கல் மற்றும் சாந்து கொண்டு கட்டப்பட்டுள்ளது. மையத்தில் உள்ள கருவறையில் இராதையுடன் கோவிந்தாஜியின் உருவம் அமைக்கபட்டுள்ளது. அதன் அருகில் உள்ள வடக்கு அறையில் ஜகன்னாதர், சுபத்திரை , பாலபத்திரரின் உருவங்கள் நிறுவப்பட்டுள்ளன. அப்படியே தெற்கு அறையில் பாலபத்திரர், கிருஷ்ணரின் உருவங்கள் உள்ளன. கோவிந்தாஜி மற்றும் இராதையின் உருவங்கள் முதலில் ஒரு சிறப்பு மரத்தால் செதுக்கப்பட்டு, மீதமுள்ள மரத்தில் ஜெகன்னாதர், சுபத்திரை, பாலபத்திரர்வின் ஆகியோரின் உருவங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கிருஷ்ணர் மற்றும் பலராமரின் உருவங்கள் வண்ணமயமாக பிளாஸ்டர் ஆஃப் பாரிசால் ஆனவை.

வழிபாடு[தொகு]

கோவிலில் கடைபிடிக்கப்படும் தினசரி வழிபாட்டு முறையானது, காலை மற்றும் மாலை வேளைகளில் சம்பிரதாயமாக செய்யப்படுகிறது. பக்தர்களால் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு மிகவும் ஒழுக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள மணிக் கூண்டு கோபுரத்தில் உள்ள பெரிய கோயில் மணி அடிக்கப்படும்போது கோயில் கதவுகள் திறக்கப்படுகின்றன. இது நீண்ட தொலைவுக்கு கேட்கிறது. சடங்கு சங்குகள் ஊதும்போது கருவறைக்கு கருவறைக்கு முன்னால் உள்ள பிரதான திரை கதவு திறக்கப்பட்டு கருவறையில் உள்ள முக்கிய தெய்வ உருவங்களை பாக்தர்களின் தரிசனத்துக்கு காட்டுகின்றனர். பிரதான சன்னதியின் இருபுறமும் பக்தர்கள் வரிசையில் நிற்க, பெண்கள் ஒருபுறமும், ஆண்கள் மறுபுறமும் வரிசையில் நிற்கின்றனர். இங்கு வழிபாடு செய்ய வரும் ஆண்கள் வெள்ளை நிற சட்டை, குர்த்தா அல்லது வேட்டி மட்டுமே அணிந்து வர வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் பாரம்பரிய பூங்கோ ஃபனேக் மற்றும் இன்னாஃபி, சல்வார்-கமீஸ், புடவை ஆகியவற்றை அணிந்துவரவேண்டும். பெண்கள் பித்தளை தட்டில் மணியுடனோ அல்லது அது இல்லாமலோ தெய்வத்திற்கு பூசைப் பொருட்களை எடுத்துச் செல்கிறனர். முக்கிய வழிபாடு நேரங்களில் கோயிலில் நிரந்தரமாக பணியமர்த்தபட்டுள்ள இசைக்கலைஞர்கள் இசைப்பார்கள்.[சான்று தேவை] மணிப்பூரின் ஒரு இனக்குழுவினரான மெய்தீஸ், இந்தக் கோயிலின் தீவிர பக்தர்கள். [8]

கோயில் நிர்வாகம்[தொகு]

1949 ஆம் ஆண்டுவரை கோயில் மன்னர் குடும்ப பராமரிப்பிலேயே இருந்தது. 1949 ஆண்டு மணிப்பூர் இணைப்பு ஒப்பந்தத்தின் பிரிவு II இன் படி இந்திய விடுதலைக்குப் பிறகு மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. இதன் பிறகு கோயில் மாநில அரசின் வசம் வந்தது. பிறகு பூசகர் மற்றும் நகரத்தின் முக்கிய நபர்கள் உள்ளடக்கிய ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. [9] இக்க்ழுவின் தலைவராக மணிப்பூர் முதல்வர் உள்ளார்.[10]

திருவிழாக்கள்[தொகு]

மணிப்பூரில் ராச லீலை நடனம்

இங்கு மிகவும் கோலாகலமாக நடைபெறும் முக்கியமான திருவிழாக்களாக ஆவணி மாதத்தில் நடைபெறும் ஜன்மாஷடமி மற்றும் சூன்-சூலை மாதங்களில் நடைபெறும் காங் ( தேரோட்டம் ) ஆகும். இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கோவிலின் வளாகத்தில் நடைபெறும் மற்ற முக்கியமான நிகழ்ச்சிகளாக மணிப்பூரின் நடன வடிவமான ரசலீலை, ஹலங்கர் ( ஹோலி பண்டிகை ), பெப்ரவரியில் பசந்த பூர்ணிமா, அக்டோபரில் கார்த்திகை பூர்ணிமா ஆகியவை உற்சாகத்துடன் நடத்தப்படுகின்றன.[சான்று தேவை] ராசலீலை என்பது மன்னர் ஜெய் சிங்கால் தொடங்கப்பட்ட ஒரு நடன வடிவமாகும். இந்த நடன வடிவில், நடனக் கலைஞர்கள் அணியும் பாவாடை ஜெய் சிங்குக்கு கனவில் தெரியவந்தது. இறைவன் இதேபோன்ற ஆடையை அணிந்து அவருக்கு முன் தோன்றி, அவரை கோயில் கட்டும்படி அவரை வழிநடத்தினார். [5] பாரம்பரிய உடையில் ஏராளமான கோபியர் கோயிலின் உற்சவர் சிலையைச் சுற்றி நடனமாடும் ராசலீலை ஒரு பெரிய காட்சி விருந்தாக இருக்கும். இதற்காக கோயில் உற்சவர் சிலையானது புனித இடமான கைனாவில் உள்ள மைதானத்திற்கு கொண்டு வரப்படும்.[11] கைனா என்னும் இடமானது,  இம்பாலில் இருந்து 29 கி.மீ. தொலைவிலு உள்ளது. இதுதான் மன்னர் ஜெய் சிங்கின் கனவில் கிருஷ்ணர் கனவில் வந்து தனது உருவத்தை பலா மரத்தில் செதுக்கி கோயில் அமைக்கும்படி சொன்ன இடமாகும்.[12]

புதுப்பித்தல்[தொகு]

இந்தக் கோயிலும், மண்டபமும் 2012 நவம்பர் முதல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதுப்பிப்பதற்காக அகற்றப்பட்ட குவிமாடங்களின் மீதான பொற்தகடுகள் 2013 ஆகத்தில் மீண்டும் வேயப்பட்டன. பொற்தகடுகள் 30 கிலோகிராம் எடையில் செய்யபட்டதாக கூறப்படுகிறது. மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் தரையில் ஓடுகள் பதிக்க முன்மொழியப்பட்டது. புனரமைப்புக்கான மொத்த செலவு 8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.[10][13]

மேலும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Laveesh 2009.
 2. Broadcasting2010.
 3. "Imphal Tourism". Indiasite.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
 4. Devi 2003.
 5. 5.0 5.1 Ghosh & Ghosh 1997.
 6. Sharma, H. Surmangol (2006). "Learners' Manipuri-English dictionary (Definition of "Mandop")". dsal.uchicago.edu. சிக்காகோ பல்கலைக்கழகம். Digital Dictionaries of South Asia. பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.
 7. "BEST MOMENTS AT SHREE SHREE GOVINDAJEE TEMPLE". Connecting Your Soul To The Sacred. 2016-06-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-09.
 8. Dikshit & Dikshit 2013.
 9. Assembly 1972.
 10. 10.0 10.1 "Govindajee temple development high on priority list of Govt". The Sangai Express. 4 May 2014.
 11. "Art in the land of dreams". The Hindu. 18 November 2011.
 12. "Manipur:Jewel of India". National Informatics Centre. Archived from the original on 2007-01-10.
 13. "Gold plating works over". The Sangai Express. 10 October 2014. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தாஜீ_கோயில்&oldid=3929410" இலிருந்து மீள்விக்கப்பட்டது