கோலா லிப்பிஸ்
கோலா லிப்பிஸ் | |
---|---|
Kuala Lipis | |
பகாங் | |
ஆள்கூறுகள்: 4°11′3.588″N 102°03′15.228″E / 4.18433000°N 102.05423000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | லிப்பிஸ் மாவட்டம் |
உருவாக்கம் | 1887 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 15,448[1] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 27200 |
தொலைபேசி எண்கள் | 06 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | C |
இணையதளம் | லிப்பிஸ் நகராண்மைக் கழக இணையத்தளம் |
கோலா லிப்பிஸ் (ஆங்கிலம்: Kuala Lipis; மலாய் மொழி: Kuala Lipis) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். லிப்பிஸ் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. இந்த நகரம் லிப்பிஸ் மாவட்டத்தின் தலைப் பட்டணமும் ஆகும். இதன் மக்கள்தொகை 15,448.[2]
லிப்பிஸ் ஆறு, ஜெலாய் ஆறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்து இருக்கும் கோலா லிப்பிஸ், மலாயா வரலாற்றில் ஆழமான வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டது. 1887-இல் பிரித்தானியர்கள் வருவதற்கு முன்னதாகவே, மக்கள் இங்கு குடியேறி இருந்தனர். ரவுப் நகரில் தங்கம் தோண்டி எடுக்கப் பட்டதால், கோலா லிப்பிஸ் நகரத்திலும் மக்கள் குடியேற்றம் மிகுதியானது.
பொது
[தொகு]பகாங் மாநிலத்தை ஆட்சி செய்த பிரித்தானியர்கள், 1898-இல் இந்த நகரத்தை பகாங் நகரத்தின் தலைநகரமாகப் பிரகடனம் செய்தார்கள். 57 ஆண்டுகளுக்குப் பின்னர் 1955-இல், கோலா லிப்பிஸ் நகரத்திற்குப் பதிலாக குவாந்தான் தலைநகரமானது.
பகாங் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் கோலா லிப்பிஸ் நகரமும் ஒன்றாகும். கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; குவாந்தானில் இருந்து 235 கி.மீ. தொலைவில் இந்த நகரம் உள்ளது.[3]
வரலாறு
[தொகு]கோலா லிப்பிஸ் நகரம் நிறைய வரலாற்றுத் தடயங்களைக் கொண்டது. 2,500 லிருந்து 4,500 ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட தெம்பிலிங் கத்தி (Tembiling knife) எனும் கல்லால் செய்யப்பட்ட ஆயுதம் இங்கு கண்டுப்டிக்கப்பட்டது.[4]
நவீன காலத்தில் மனிதர்கள் அங்கு குடியேறுவதற்கு முன்னர், புதிய கற்காலத்தில் (neolithic age) மனிதர்கள் அங்கே வாழ்ந்து இருக்கிறார்கள். கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அண்மைய காலங்களில் அதைப் பற்றிய பல வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து உள்ளன.[5]
மலாயாவில் மனித நாகரிகம் ஒரு பண்பட்ட நிலையை அடைந்து வந்த காலக்கட்டத்தில், லிப்பிஸ் மாவட்டத்தின் உட்பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு ஆறுகளையே பெரும்பாலும் நம்பி இருக்கிறார்கள். பச்சைக் காடுகளில் காட்டுப் பாதைகளை அமைத்து இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருந்து கோலாலப்பீஸ் வந்து சேர இரண்டு வாரங்கள் பிடித்து இருக்கின்றன. தவிர, காட்டு விலங்குகளிடம் இருந்தும் அவர்கள் போராட வேண்டி இருந்து இருக்கிறது.
கோலாலம்பூர் - கோலா லிப்பிஸ் சாலை
[தொகு]மலாயாவின் கிழக்குக் கரைப் பாகங்களின் உட்புறங்களைத் திறந்து விடுவதற்கு, பிரித்தானியர்கள் கோலாலம்பூரையும் கோலா லிப்பிஸையும் இணைப்பதற்கு 1890-களில் ஒரு சாலையை அமைத்தார்கள். அந்தச் சாலையின் நீளம் 130 கி.மீ. இந்தச் சாலை பல குன்றுகள், பள்ளத்தாகுகளை ஊடுருவிச் சென்றது. பெரும்பாலும், அன்றைய காலத்தில் எருமைமாட்டு வண்டிகளையே பயன்படுத்தினார்கள்.
1930களில் தான் மலாயாவுக்கு மகிழுந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றைப் புதுமைப் பொருட்களாகக் கருதிய காலம் 1950-களில் தான் மாற்றம் கண்டது. தொலைதூரப் பயணங்களுக்கு மகிழுந்து என்பது ஓர் அத்தியாவசியப் பொருளாக மாறியது. பகாங் மாநிலத்திற்குச் செல்வதை ஒரு சாகசச் செயலாகவே மக்கள் கருதினர்.
தங்கச் சுரங்கத் தொழில்
[தொகு]1887-இல் பிரித்தானியர்கள் வருவதற்கு முன்னால், கோலா லிப்பிஸ் தங்கச் சுரங்கத் தொழிலின் மையமாக விளங்கி வந்தது. 1898-இல் அதை பகாங் மாநிலத்தின் தலைப் பட்டணமாக மாற்றி அமைத்தார்கள். அதற்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் காட்டில் இருந்து கிடைத்த வாசனைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்தனர்.
மருந்து சார்ந்த காட்டு விலங்குகளின் உறுப்புகள், பறவைகளின் அழகு இறகுகள், மரவேர்கள், மூலிகைகள், ’காகாரு’ எனும் வாசனைப் பொருள் போன்றவற்றைச் சீனத் தரகர்களிடம் விற்றனர். அதற்குப் பதிலாக அரிசி, உப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றனர்.
பழைய வரலாற்றின் பழைய தடங்கள்
[தொகு]பிரித்தானியர்களின் வருகைக்குப் பின்னர், பெரிய அளவிலான காலனித்துவக் கட்டடங்கள் இங்கே கட்டப்பட்டன. கோலா லிப்பிஸ் மாட்ட அலுவலகம், கோலா லிப்பிஸ் கிளிபர்ட் பள்ளி, பகாங் கிளப் போன்றவை காலனித்துவத் தாக்கங்களின் பிரதிபலிப்புகளாக இன்னும் இருக்கின்றன. கோலா லிப்பிஸ் நகருக்கு அருகில் இருக்கும் குன்றில், பிரித்தானிய ஆணையரின் மாளிகை கட்டப்பட்டது. அது இப்போது ஓர் அரும் பொருள் காட்சியகமாக விளங்கி வருகிறது.
1924-இல் தொடர்வண்டி அறிமுகம் செய்யப்பட்டதும், இந்த நகரம் மலாயாவில் மிகவும் புகழ்பெற்ற செல்வாக்கு பெற்ற நகரமாக விளங்கியது. பகாங் மாநிலத்தின் தலைப்பட்டணம் எனும் அந்தஸ்து 1955-இல் இடம் மாறியதும், இந்த நகரத்தின் செல்வாக்கும் குறைந்து போனது. பழங் காலத்து பிரித்தானியக் கட்டடங்கள் தான் அதன் பழைய வரலாற்றை இன்றும் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன. அவை பழைய வரலாற்றின் பழைய தடங்கள்.
கோலா லிப்பிஸ் பிரபலங்கள்
[தொகு]- மலேசியாவின் தற்போதைய பிரதமர் நஜீப் துன் ரசாக். இவர் 1953 ஜூலை 23-இல் கோலா லிப்பிஸ் நகரில் பிறந்தார். அண்மையில் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், இந்த நகருக்கும் வருகை புரிந்தார். பகாங் மாநிலத்தில் ஜெராண்டுட், தெமர்லோ பகுதிகள் வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டன.[6]
- மலேசியாவின் முன்னாள் வெளியுறவு, உள்துறை அமைச்சர் துன் கசாலி சாபி.
- மலேசியாவின் பிரபல பாடகர் சித்தி நூர்ஹாலிசா. இவருடைய குடும்பத்தார் இன்னும் இந்த நகரில் வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் கண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ //www.statistics.gov.my/portal/download_Population/files/population/04Jadual_PBT_negeri/PBT_Pahang.pdf
- ↑ The population of Kuala Lipis, Malaysia is 15448 according to the GeoNames geographical database. The data for this record was 2012-01-17.
- ↑ It is about 171 kilometers from Kuala Lumpur and about 235 km from Kuantan.
- ↑ The “Tembeling” knife is clearly not a wood-cutting tool; it might have been used for skinning animals and cutting up meat or it may be a reaping knife.
- ↑ Neolithic Stone Gouges from the Malay Archipelago and Their Northern Prototypes. John Loewenstein Anthropos Bd. 52, H. 5./6. (1957), pp. 841-849
- ↑ Prime Minister Datuk Seri Najib Razak arrived in Kuala Lipis on a RMAF helicopter to visit relief centres in Pahang.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- A Malaysian Adventure Kuala Lipis - just before the outbreak of the 2nd World War.
- Pyrokumprinx Advanced Media The only known personal site about living in Kuala Lipis. Features recent happenings and news.
- KTM / MRT Line Integrations