உள்ளடக்கத்துக்குச் செல்

கோப்பெருந்தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோப்பெருந்தேவி
சிலப்பதிகாரம் கதை மாந்தர்
கோப்பெருந்தேவியுடன் (வலது) வீற்றிருக்கும் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கும் கண்ணகி
உருவாக்கியவர் இளங்கோவடிகள்
தகவல்
துணைவர்(கள்)நெடுஞ்செழியன்
தேசிய இனம்பாண்டியர்

கோப்பெருந்தேவி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒருவர் ஆவார். பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவியான இவர், கண்ணியமும் நல்லொழுக்கமும் பொருந்திய அரசியாக வர்ணிக்கப்படுகிறார். கதைக்களத்தில், இவர் கண்ணகியின் கணவரான கோவலனின் மரணத்திற்கு மறைமுகமாக காரணமாகிறார். கோப்பெருந்தேவியின் கதாபாத்திரம் காவியத்தில் சுருக்கமாக மட்டுமே தோன்றினாலும், இவரது கால் சிலம்பு கதையின் முக்கிய நிகழ்வுகளுக்கு ஒரு காரணமாக அமைகின்றது. தானாக எந்த தீங்கும் இழைக்காத போதும், தன்னுடைய சுற்றத்தாரின் செயல்களால் மிகுந்த சோகத்தையும், ஒரு துயரமான முடிவையும் சந்திக்கிறார். சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கதாப்பாத்திரங்களில் சோகமான முடிவை எட்டும் பெண் கதாப்பாத்திரங்களில் இவரும் ஒருவராகிறார்.

இலக்கியம்

[தொகு]

சிலப்பதிகாரம் என்பது தமிழ் இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகும்.[1] இந்த காப்பியமானது இளங்கோவடிகள் அவர்களால் கி.பி. இரண்டாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு இடையே இயற்ற பெற்றதாகும். இது கோவலன் மற்றும் கண்ணகி ஆகிய இருவரின் கதையை சித்தரிக்கின்றது.[2][3]

கதைக்களம்

[தொகு]

சிலப்பதிகாரத்தின் முதல் பகுதி கோவலன், கண்ணகி ஆகியோரின் திருமணத்தையும், அவர்கள் வாழ்ந்த சோழப் பேரரசின் புகார் நகரத்தையும் விவரிக்கிறது. நடனக் கலைஞரான மாதவி உடனான தகாத உறவின் மூலம் தனது அனைத்து செல்வத்தையும் இழந்த கோவலன், மீண்டும் கண்ணகியிடம் திரும்புகிறான். கோவலனை மன்னித்து ஏற்று கொள்ளும் கண்ணகி, பிறகு கணவனுடன் பாண்டியப் பேரரசில் உள்ள மதுரை நகருக்கு செல்கிறார். பாண்டிய நாட்டை அரசர் நெடுஞ்செழியன் மற்றும் அவரது மனைவி கோப்பெருந்தேவி ஆகியோர் வழிநடத்துகின்றனர்.[4]

கோப்பெருந்தேவி ஒரு கண்ணியமான மற்றும் நல்லொழுக்கம் கொண்ட பெண்ணாக வர்ணிக்கப்படுகிறார். மேலும் இவர் செம்மொழி தமிழ் இலக்கியங்களில் அரசகுலப் பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் நற்பண்புகளைக் கொண்டவராக விளங்குகின்றார். கோவலன் கண்ணகியின் இரண்டு கால் சிலம்புகளில் ஒன்றை விற்று பணம் திரட்ட முற்படுகிறார். இதை கண்ட அரச பொற்கொல்லன், தான் திருடிய அரசியின் சிலம்பிற்கு பதிலாக, வெளி தோற்றத்தில் ஒத்த வடிவுடைய கண்ணகியின் சிலம்பை, அரசியின் சிலம்பென்றும், அதை கோவலன் திருடியதாகவும் அரசரிடம் பொய்யாக பறைசாற்றுகின்றார். இந்தச் செயலால் கோபமடைந்த நெடுஞ்செழியன், கோவலனைக் கைது செய்து, பிறகு நியாயமான விசாரணையின்றி கொல்ல உத்தரவிடுகிறார்.[5]

கோவலன் கொல்லபட்ட பிறகு, கண்ணகி அரசரிடம் தன் கணவன் குற்றமற்றவர் என்று கூறி அவரின் சாவுக்கு நீதி கோருகிறார். அதேசமயம், அரசி கோப்பெருந்தேவியின் காணாமல் போன கால் சிலம்பின் உள்ளே முத்துப் பரல்கள் இருந்ததாகவும், கண்ணகியின் சிலம்பில் மாணிக்கக் கற்கள் இருந்ததையும் அவர் வெளிப்படுத்துகிறார். உண்மையையும், தன் தவறையும் உணர்ந்த அரசர் அக்கணமே உயிர் துறக்கிறார். இச்செயலால் கண்ணகிக்கு ஏற்பட்ட துயரத்தையும், அரசனுக்கு நேர்ந்த அவமானத்தையும் பொறுக்க முடியாமல், கோப்பெருந்தேவியும் உயிர் துறக்கிறார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]

துணை நூற்கள்

[தொகு]
  • சாத்திரி, க. அ. நீலகண்ட (2002) [1955]. A History of South India (in ஆங்கிலம்). ஆக்சுபோர்டு பல்கலைக்கழக பதிப்பகம். ISBN 978-0-195-60686-7.
  • சுவெலபில், கமில் (1973). The Smile of Murugan: On Tamil Literature of South India (in ஆங்கிலம்). பிரில் பதிப்பகம். ISBN 978-9-004-03591-1.
  • தீட்சிதர், வி. ஆர். இராமச்சந்திர (1939). The Silappadikaram (in ஆங்கிலம்). ஆக்சுபோர்டு பல்கலைக்கழக பதிப்பகம். ISBN 978-9-390-03592-2.
  • பார்த்தசாரதி, ஆர். (1993). The Cilappatikaram of Ilanko Atikal: An Epic of South India (in ஆங்கிலம்). கொலம்பியா பல்கலைக்கழக பதிப்பகம். ISBN 978-0-231-07848-1.
  • போலாக், செல்டன் (2003). Literary cultures in history: reconstructions from South Asia (in ஆங்கிலம்). கலிபோர்னியா பல்கலைக்கழக பதிப்பகம். ISBN 0-520-22821-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பெருந்தேவி&oldid=4483816" இலிருந்து மீள்விக்கப்பட்டது