உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால் ஹரி தேஷ்முக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால் ஹரி தேஷ்முக்
பிறப்பு(1823-02-18)18 பெப்ரவரி 1823
புனே,[1] புனே, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய மகாராட்டிரம், இந்தியா)
இறப்பு9 அக்டோபர் 1892(1892-10-09) (அகவை 65)
புனே, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய மகாராட்டிரம், இந்தியா)
மற்ற பெயர்கள்லோகித்வாடி, இராவ் பகதூர்
காலம்19th century philosophy
முக்கிய ஆர்வங்கள்
நெறிமுறைகள், மதம், மனிதநேயம்

கோபால் ஹரி தேஷ்முக் (Gopal Hari Deshmukh) ( பிறப்பு: 1823 பிப்ரவரி 18-இறப்பு:1892 அக்டோபர் 9) இவர் மகாராட்டிராவைச் சேர்ந்த ஓர் இந்திய ஆர்வலரும், சிந்தனையாளரும், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் எழுத்தாளருமாவார். இவரது அசல் குடும்பப்பெயர் சிதாயே என்பதாகும். குடும்பம் பெற்ற வரி வசூல் உரிமை காரணமாக, பின்னர் தேஷ்முக் என்று அழைக்கப்பட்டது. [2] மகாராட்டிராவில் சமூக சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய நபராக தேஷ்முக் கருதப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

கோபால் ஹரி தேஷ்முக் 1823 ஆம் ஆண்டில் மகாராட்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மூன்றாம் ஆங்கிலோ மராத்தியப் போரின் போது இரண்டாம் பாஜி ராவின் தளபதியான பாபு கோகலேவின் பொருளாளராக இருந்தார். தேஷ்முக் புனே ஆங்கில நடுநிலைப் பள்ளியில் படித்தார். [3]

தொழில்

[தொகு]

தேஷ்முக் பிரிட்டிசு இராச்சியத்தின் கீழ் அரசாங்கத்தின் மொழிபெயர்ப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1867 ஆம் ஆண்டில், குசராத்தின் அகமதாபாத்தில் அரசாங்கம் இவரை ஒரு நீதிபதியாக நியமித்தது. இரத்லம் மாநிலத்திலும் திவானாக பணியாற்றினார். இவர் பணிபுரியும் போது அரசாங்கம் இவரை 'அமைதி நீதி' மற்றும் 'இராவ்பகதூர்' போன்ற கௌரவங்களை வழங்கி பாராட்டியது. இவர் ஒரு அமர்வு நீதிபதியாக ஓய்வு பெற்றார். உதவி நில ஆணையர், நாசிக் உயர்நீதிமன்றத்தின் இணை நீதிபதி, சட்ட சபை உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்தார். [4]

சமூகச் செயல்பாடு

[தொகு]

மகாராட்டிராவில் சமூகப் பணி

[தொகு]

தனது 25 வயதில், தேஷ்முக் மகாராட்டிராவில் சமூக சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்ட கட்டுரைகளை லோகிதாவாடி என்ற புனைப் பெயரில் 'பிரபாகர்' என்ற வாராந்திர பத்திரிக்கையில் எழுதத் தொடங்கினார். முதல் இரண்டு ஆண்டுகளில், சமூக சீர்திருத்தம் குறித்து 108 கட்டுரைகளை எழுதினார். அந்தக் கட்டுரைகள் மராத்தி இலக்கியத்தில் 'லோகிதாவடிஞ்சி சதாபத்ரே' என்று அறியப்பட்டுள்ளன

இவர் விடுதலை மற்றும் பெண்களின் கல்வியை ஊக்குவித்தார். மேலும் இவரது காலத்தில் இந்தியாவில் நடைமுறையில் இருந்த குழந்தை திருமணம், வரதட்சணை முறை மற்றும் பலதார மணம் ஆகியவற்றிக்கு எதிராக எழுதினார்.

இவர் தனது காலத்தில் இந்தியாவில் வலுவாக இருந்த சாதி அமைப்பின் தீமைகளுக்கு எதிராக எழுதினார். தீங்கு விளைவிக்கும் இந்து மத மரபுவழியைக் கண்டித்தார். மேலும் ஒரு நீண்ட பாரம்பரியத்தின் மூலம் பிராமணர்கள் கொண்டிருந்த மத விசயங்கள் மற்றும் சடங்குகளின் ஏகபோகத்தைத் தாக்கினார் (தேஷ்முக், இவரே ஒரு பிராமணர்). இந்து சமுதாயத்தில் மத சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான சில 15 கொள்கைகளை இவர் அறிவித்தார். [5]

அப்போதைய மும்பை மாநில ஆளுநர் ஹென்றி பிரவுனின் தலைமையில் தேஷ்முக் புனேவில் ஒரு பொது நூலகத்தை நிறுவினார். பல்கலைகழகத்திற்கு சில புத்தகங்களையும் நன்கொடையாக வழங்கினார். பம்பாயின் (1875) நூலகம், பிரிட்டிசு மக்களால் நிறுவப்பட்டது. இவரது தனிப்பட்ட தொகுப்பு பல்கலைகழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

குசராத்தில் சமூக பணி

[தொகு]

தேஷ்முக் அகமதாபாத்தில் நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பிரேமாபாய் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் சமூகப் பிரச்சினைகள் குறித்த நகரத்தின் வருடாந்திர மாநாடுகளை ஏற்பாடு செய்தார். மேலும் இவரும் அம்மாநாட்டில் உரை நிகழ்த்தினார். இவர் அகமதாபாத்தில் பிரார்த்தனா சமாஜத்தின் ஒரு கிளையை நிறுவினார். விதவைகளின் மறுமணத்தை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனத்தையும் நிறுவினார். குசராத்து மக்கள் அமைப்பை நிறுவினார். குசராத்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் ஹைடெச்சு என்ற வாராந்திர இதழைத் தொடங்கினார். மேலும், இவர் "குசராத்தி புதி-வர்தக சபை" யையும் தொடங்கினார்.

புத்தகங்கள்

[தொகு]

தேஷ்முக் மத, சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்று மற்றும் இலக்கிய விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 35 புத்தகங்களை எழுதினார். இவர் பானிபட்டு போர், கல்யோக், ஜாதிபெட், லங்கேச்சா இதிஹாஸ் போன்றத் தலைப்புகளில் எழுதினார். சில ஆங்கிலப் படைப்புகளையும் மராத்தியில் மொழிபெயர்த்தார். பல புத்தகங்கள் இவரைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் பிரபல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளன.

இவரது எழுத்தில் 1) பானிபட்டு 2) குசராத்தின் வரலாறு 3) லங்காவின் வரலாறு போன்ற தலைப்புகள் அடங்கும்

குறிப்புகள்

[தொகு]
  1. Garge, S. M., Editor, Bhartiya Samajvigyan Kosh, Vol. III, Page. No. 321, published by Samajvigyan Mandal, Pune
  2. The Golden Book of India: A Genealogical and Biographical Dictionary of the Ruling Princes, Chiefs, Nobles, and Other Personages, Titled Or Decorated of the Indian Empire. Aakar Books. 1893. p. 150.
  3. Bal Ram Nanda (1977). Gokhale: The Indian Moderates and the British Raj. Princeton University Press. p. 17. His[Deshmukh's] family of Chitpawan Brahmans, one of the greatest beneficiaries of the Peshwa regime...
  4. Language Politics, Elites, and the Public Sphere. Orient Blackswan. 2001. p. 83-84.
  5. Language Politics, Elites, and the Public Sphere. Orient Blackswan. 2001. p. 83.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_ஹரி_தேஷ்முக்&oldid=2985454" இலிருந்து மீள்விக்கப்பட்டது