கோதான்
கோதான் நூலின் அட்டப்படம் | |
| நூலாசிரியர் | பிரேம்சந்த் |
|---|---|
| உண்மையான தலைப்பு | Godaan (गोदान) |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
| வகை | புனைகதை |
வெளியிடப்பட்ட நாள் | 1936 |
| ஊடக வகை | அச்சு (கெட்டி அட்டை, சாதாரண அட்டை) |
| ISBN | 0-948924-07-1 |
| OCLC | 17509087 |
| 891.433 | |
| LC வகை | PK2098.S7 G613x 1987 |
மூல உரை | Godaan (गोदान) இந்தி விக்கிமூலத்தில் |
கோதான் (Godaan, இந்தி: गोदान) என்பது முன்சி பிரேம்சந்த் எழுதிய இந்தி புதினமாகும். இது முதன்முதலில் 1936 இல் வெளியிடப்பட்டது. நவீன இந்திய இலக்கியத்தின் மிகச்சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமூக-பொருளாதார கையறுநிலை மற்றும் கிராம ஏழைகள் சுரண்டப்படுவதை மையமாகக் கொண்ட இந்த புதினம் பிரேம்சந்தின் கடைசி முழுமையான புதினமாகும். கடன் வலையில் சிக்கித் தவிக்கும் ஒரு முதிர்ந்த ஏழை விவசாயியின் கதையை இது விவரிக்கிறது. அவர் பசு ஒன்றை வாங்க விரும்புகிறார், ஆனால் அதற்கான பணமிலாததால் பசுவை வங்க முடியாமல் தவிக்கிறார். இது 1957 இல் ஜெய் ரத்தன் மற்றும் புருஷோத்தம லால் ஆகியோரால் தி கிஃப்ட் ஆஃப் எ கௌ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. [1] கோர்டன் சி. ரோடார்மெல் 1968 இல் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பே இப்போது " சிறந்த மொழிபெயர்ப்பு" என்று கருதப்படுகிறது. [2] இதை தமிழில் சரஸ்வதி ராம்நாத் கோதானம் என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.[3]
ராஜ் குமார், காமினி கௌஷல், மெஹ்மூத், சசிகலா ஆகியோரின் நடிப்பில் 1963 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படமாக கோதான் உருவாக்கப்பட்டது. [4] 2004 இல், 27-பாகங்கள் கொண்ட தொலைக்காட்சித் தொடரான தெஹ்ரீர்.... முன்ஷி பிரேம்சந்த் கி, [5] [முன்ஷி பிரேம்சந்தின் எழுத்துகள்] என்ற தொடரின் ஒரு பகுதியாக கோதான் இருந்தது. இத்தொடரில் பங்கஜ் கபூர், சுரேகா சிக்ரி நடிக்க, குல்சர் இயக்கினார். இத்தொடரை தூர்தர்ஷன் தயாரித்தது.
கதைக்களம்
[தொகு]இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டதாக விவரிக்கபட்டுள்ளது. ஹோரி மகாதோவின் குடும்பம் கிராமப்புற சிறு விவசாய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவரது குடும்பத்தில் மனைவி தானியா, இரண்டு மகள்களான ரூபா, சோனா, மகன் கோபர், மருமகள் ஜூனியா ஆகியோர் அடங்குவர். பல ஏழை விவசாயிகளைப் போலவே, ஹோரியும் ஒரு பசுவை சொந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டவராக கதை தொடங்குகிறது. அவர் போலா என்னும் ஒரு பால் வியாபாரியிடமிருந்து 80 ரூபாய் கடனுக்கு ஒரு பசுவை வாங்குகிறார்.
ஹோரியின் மீது பொறாமை கொண்ட அவரது தம்பி மனைவி புனியா, தன் கணவன் ஹீராவை தூண்டிவிட்டு அந்தப் பசுவை நஞ்சுவைத்து சாகடிக்கவைக்கிறாள். ஹோரியின் மனைவி காவல் துறையில் புகார் அளிக்கிறாள். காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பயந்து ஹோரி தப்பி ஓடிவிடுகிறான். காவல் துறையினரின் பிடியில் இருந்து தன் தம்பியைக் காக்க, ஹோரி கடன் வாங்கி இலஞ்சம் தருகிறார். போலாவின் கைம்பெண் மகளான ஜூனியாவை ஹோரியின் மகன் கோபர் காதலிக்கிறான். அவள் கர்ப்பமாகிறாள். இதனால் கிராம மக்களின் கோபத்துக்கு அஞ்சி கோபர் நகரத்திற்கு ஓடிவிடுகிறான். ஜூனியா தங்கள் மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்து வருவதால் ஹோரியும் தானியாவும் அவளை தங்கள் மருமகளாக ஏற்றுக்கொண்டு, அவளுக்கு அடைக்கலமும் கொடுக்கின்றனர். ஜூனியாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கிராம பஞ்சாயத்து ஹோரிக்கு அபராதம் விதிக்கிறது. ஹோரி மீண்டும் கடன் வாங்கி அபராதத் தொகையை கட்டுகிறார்.
கந்துவட்டி கடன் சுமையால் ஹோரி பெரும் துன்பத்துக்கு ஆளாகிறார். இறுதியில் தனது மூதாதையர் நிலம் ஏலம் போவதில் இருந்து தடுக்க வெறும் 200 ரூபாய்க்கு தனது மகள் ரூபாவை திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார். இருப்பினும், அந்த 200 ரூபாயை திருப்பிச் செலுத்தி, தன் பேரனின் பாலுக்காக ஒரு பசுவைப் வாங்க வேண்டும் என்ற அவர் உறுதியேற்று, அதனால் ஏற்பட்ட பணிச்சுமையை அவரது மரணத்திற்கு காரணமாகிறது.
கோதான் புதினத்தில், ஹோரி, ஏழை விவசாயியாக சித்தரிக்கப்படுகிறார். அவர் சூழ்நிலைக் கைதியாக இருந்து அதில் பாதிக்கப்பட்டவர், தவறுகள், நல்லொழுக்கங்கள் என இரண்டையும் கொண்டவர். அவர் கஷ்டங்களை முழுமையாக தாங்கிக்கொண்டு, தனது விழுமியங்களுக்கும், கடமைகளுக்கும் உண்மையாகவே வாழ்கிறார். ஹோரி கடன்காரராகவே இறந்து போகிறார். இறக்கும்போது அவர் மன் மனைவியிடம் தன் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்கிறார். அப்போதும் அவர் தன் பசுவை நினைத்துக் கொள்கிறார்.
ஹோரியின் மரணம் புதிய ஒரு சிக்கலை உருவாக்குகிறது. அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யும் பிராமணப் புரோகிதர் ஒரு பசுவை தானமாஎ கேட்கிறார். இதைக் கேட்டு ஹோரியின் மனைவி ஆத்திரம் தாங்க இயலாமல் வெடித்து அழுகிறாள்.
கதைப்பாத்திரங்கள்
[தொகு]- ஹோரி என்பவர் பெலாரி என்ற சிற்றூரைச் சேர்ந்த ஒரு உழவர். அவருக்கு தானியா மனைவியும், சோனா, ரூபா என்னும் இரு மகள்களும், கோவர் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் ஒரு நேர்மையான மனிதராக சித்தரிக்கப்படுகிறார், மேலும் தனது நேர்மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடுகிறார். இரு சகோதரர்களின் அண்ணான இவர், பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அவர்களின் நலனுக்காக பெரும்பாலும் தனது சொந்த குடும்பத்தின் நலன்களையும் தியாகம் செய்கிறார். இது அவரது குடும்ப வாழ்வில் அடிக்கடி புயலைக் கிளம்ப காரணமாகிறது. தனது பசு இறப்புக்கு காரணமான, தன் தம்பி ஹீராவை காவல்துறையினரிடமிருந்து காக்க அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார். சமூகத்திலிருந்து விலகி, அனாதையாக இருப்பதாக உணர்கிறார். தன் மகன் கோவர் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்து வீட்டிற்கு அழைத்து வரும்போது பஞ்சாயத்து விதிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். அதேபோல், தன் மருமகள் ஜூனியாவுக்கான பணத்தைக் கொடுக்கவோ அல்லது அவளை தன் வீட்டிலிருந்து வெளியேற்றவோ விருப்பமில்லாததால், ஜூலியாவின் தந்தையான போலா ஹோரியின் எருதுகளைப் பிடித்துச் சென்றுவிடுகிறார். இவர்கள் ஜூலியாவை தங்கள் மருமகளாகவும், அவளுடைய குழந்தையை தங்கள் பேரக்குழந்தையாகவும் ஏற்றுக்கொள்கின்றனர். இவர் கனிவானவரும், தாராள மனப்பான்மை கொண்டவராகவும் உள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளான சேலியாவுக்கு இவர் அடைக்கலம் கொடுக்கிறார். அவள் மதாதின் என்ற பிராமணரால் சீரழிக்கபட்டு, தன் சோந்த சமூகத்தினரால் புறக்கணிக்கப்படுகிறாள்.
- தானியா ஹோரியின் மனைவி. இவர் துணிச்சலானவர், உக்கிரமானவள், அநீதியை பொறுத்துக்கொள்ளாதவர். அநீதிக்கு எதிராகவும், ஹோரியின் விருப்பத்திற்கு எதிராகவும் தானியா குரல் எழுப்பி அவருக்கு எரிச்சலூட்டுகிறார். ஹோரி கடன் கொடுத்தவர்களிடமிருந்தும், பிராமண புரோகிதர்களிடமிருந்தும் வரும் அதிகப்படியாக அடக்குமுறையை பொறுத்துக் கொள்ளும்போது தானியா கோபம் கொள்கிறாள். ஹோரி, சில சமயங்களில் தனக்குக் கீழ்ப்படியாததற்காக தானியாவை அடிக்கிறார் என்றாலும், அவளுடைய வாதங்கள் சரியானவை என்பதை அவர் அறிவார். இவர் ஹோரிக்கு உண்மையையும் உண்மையின் யதார்த்தத்தையும் காட்டுகிறார். அவரைப் போலல்லாமல், இவர் பழமொழிகளிலும், வறட்டு இலட்சியங்களின் கட்டுக்கதைகளிலும் தன்னை மூழ்கடித்துகொண்டுவிடவில்லை. சமூகத்தின் பாரம்பரியக் கொள்கைகளை விட, தான் சரியென்று நினைப்பதையும், தனது தருமத்தையும், இவர் நிலைநிறுத்துகிறார். இவர் தெரிந்தே தன் வீட்டில், ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை, தன் மருமகளாக ஏற்றுக்கொள்கிறார். தங்களை ஒரு சங்கடமான நிலைக்கு கொண்டுவந்தற்கு மருமகள் ஜூனியாவை மட்டும் இவர் குறை கூறவில்லை. அதில் தன் மகன் கோவருக்கும் சமமான பொறுப்புள்ளது என்பதை இவர் அறிவார். இவர் ஒரு அன்பான தாய். தேவைப்படும்போது ஹீராவின் குழந்தைகளைக் கூட கவனித்துக்கொள்கிறார். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளான கர்ப்பிணி செலியாவை மனமுவந்து தங்க வைத்துக் கொள்கிறார். தனியா எப்போதும் அமைதியான, ஆறுதல் மிக்க வாழ்க்கையை அறிந்ததவரில்லை, ஏனெனில் புதினம் முழுவதும் இவர் தன் கணவருடன் வாழ்வாதாரத்திற்காக போராடுவதைக் காண்கிறோம். இவர் வலிமையானவர், சாதி, சமய வேறுபாடின்றி ஏழைகளுக்கு உதவுபவர்.
- கோபர் தானியா, ஹோரி இணையரின் ஒரே மகன். ஏழைக் குடும்பத்தில் பிறந்த கோபர், வசதியான வாழ்க்கையை விரும்புகிறான். முதலில் தன் தந்தையைப் போலவே ஒரு எளிய மனிதனாக இருந்தாலும், லக்னோ நகரத்தில் அவனுக்கு கிடைத்த அனுபவத்தினால் நடைமுறை வாழ்கை மற்றும் உலக அறிவோடு இருக்க கற்றுக்கொள்கிறான். போலாவின் மகள் ஜூனியாவை கர்ப்பமாக்கி, ஊர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல், ஜூனியாவை அவனது பெற்றோரின் வீட்டு வாசலில் விட்டுவிட்டு நகரத்திற்கு ஓடிவிடுகிறான். இவனது முன்யோசனையற்ற அவசர நடத்தை ஹோரிக்கு சிக்கலை உண்டாக்குகிறது. இதனால் ஹோரி ஊர் பஞ்சாயத்துக்கு தண்டத் தொகையைச் செலுத்துகிறார். கோபர் மிர்சா குர்ஷெட்டிடம் வேலைக்குச் செய்கிறான். ஆனால் சொந்தமாக ஒரு தொழிலைத் துவங்குகிறான். மற்றவர்களுக்கும் கடனாக பணம் கொடுக்கிறான். சில நாள் பயணமாக, உயர்தர காலணிகளுடன் ஒரு நனிநாகரீகன் தோற்றத்தில் கிராமத்திற்கு வரும்போது, இவனை யாராலும் எளிதில் அடையாளம் காண இயலாத நாகரீத தோற்றத்தில் வருகிறான். கிராமத்தில் இவனைப் பார்த்து வியப்பு கொள்கின்றனர். மற்ற இளைஞர்கள் இவனைப் பார்த்து நகரத்திற்குச் செல்ல விரும்புகின்றனர். அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கிறான். உள்ளூர் பிராமண புரோகிதரான டாடாடின் தன் தந்தையைச் சுரண்டுவதை அறிந்ததும், பாரம்பரிய நம்பிக்கைத் தளைகளிலிருந்து மீண்டு வருமாறு தன் தந்தைக்கு அறிவுறுத்துகிறான். அவன் கிராமத்தில் ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறான். மேலும் தன் நண்பர்களுடன் சேர்ந்து கந்துவட்டிக் கடன் கொடுப்பவர்கள், பிராமண பூசாரியின் மோசமான மனநிலை போன்றவர்களை அம்பலப்படுத்தவும் நையாண்டி செய்யவும் ஒரு நாடகத்தை நடத்துகிறான். இவன் புரோகிதரை நீதிமன்றத்திற்கு இழுப்பதாக மிரட்டுகிறான். மேலும் இந்த விஷயத்தில் தன் தந்தையுடன் சண்டையிடுகிறான். எளிய மனிதரான ஹோரி, கடவுள் மீது பயமுள்ளவர், தனது தர்மத்திற்கு எதிராக தன்னால் செயல்பட முடியாது என்பதை அவர் உணர்கிறார். கோபத்துடன், இவன் தன் மனைவி ஜூனியாவுடன் கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்திற்குத் திரும்பிச் செல்கிறான். இவனது பலவீனங்களான மதுப் பழக்கமும், கோபக்கார குணமும் ஜூனியாவுடனான இவனது உறவைப் பாதிக்கிறது. இவனது உடல்நிலை பாதிக்கும்போது இவரது அர்ப்பணிப்புள்ள மனைவி இவனுக்குப் பாலூட்டும்போதுதான் தனது தவறை உணர்கிறான். இவன் சர்க்கரை ஆலையில் வேலை செய்கிறான், பின்னர் மாலதி என்பவரின் வீட்டில் தோட்டக்காரராகிறான்.
- ததாடின் கிராம பிராமண புரோகிதரும், பேராசை கொண்ட கந்து வட்டிக்காரரும் ஆவார். இந்த தரம் குறைந்த மனிதன், கிராம மக்கள் செய்யும் தவறுகளை கண்காணிக்க கிராமத்தை சுற்றி வருவது ஒரு முரண்பாடாகும். தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண் ஜூனியாவை மருமகளாக ஏற்றுக்கொண்டு அவளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஹோரியை இவர் தண்டிக்கிறார். இவர் ஒரு நயவஞ்சகர், மேலும் இவரது சொந்த மகன் மத்தாடின் என்பவன் செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளான சேலியாவுடன் தொடர்பு வைத்திருப்பதை இவர் கண்டும் காணாமல் இருக்கிறார். தீட்டுப்பட்ட தன் மகனை பிராமண சமயத்தின் மைய நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்காக, வாரணாசியிலிருந்து பண்டிதர்களை அழைத்து அவனை சுத்திகரிக்க சடங்குகளைச் செய்கிறார். ஹோரியின் வறுமையை கண்டு இவர் பரிதாபப்படுவதில்லை, மாறாக தனக்கு ஒரு நல்வாய்ப்பாகக் கருதி அவரைச் சுரண்டுகிறார்.
- மடாதின் பிராமண புரோகிதரான தாதாடினின் மகன். இவன் ஒரு இளைஞன். இவர்களின் தோட்டத்தில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்ணான சேலியாவுடன் இவன் உறவில் இருக்கிறான். கிராம மக்களுக்கு இது தெரியும். சேலியாவுக்கு இவன் வீட்டிற்குள் நுழைய அனுமதி கிடையாது. அவளது பெற்றோரும் உறவினர்களும் இவளை அவன் முறைப்படி ஏற்றுக்கொள்ளுவான் என காத்திருக்கிறனர். கடைசியில், அவர்கள் இவனைத் தண்டிக்க முடிவு செய்து, இவனை அடித்து, இவன் வாயில் ஒரு எலும்புத் துண்டை வைக்கின்றனர் - வாயில் எலும்புத் துண்டை வைப்பதானது பிராமணர்களுக்குத் தடைசெய்யப்பட்டது. ஆனால் சேலியா அவனைக் காப்பாற்றுகிறாள். மாடாதின் தன் சொந்த வீட்டிலேயே ஒதுக்கப்பட்டவனாகிறான். இவனது தந்தை இவனை மீண்டும் பிராமண சமயத்தின் மைய நீரோட்டத்திற்குக் கொண்டுவருவதற்காக சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்கிறார். சடங்குகளுக்கு அவர் நிறைய பணம் செலவிடுகிறார், காசியிலிருந்து பண்டிதர்கள் வரவழைக்கிறார். மதாடினுக்கு மலேரியா காய்ச்சல் வருகிறது. அது இவனை மரணத்தின் வாசல் வரை கொண்டு செல்கிறது. செலியாவை தன் ஆசைக்கு பயன்படுத்தி தான் செய்த தவறை உணர்கிறான். சேலியாவுக்கு தன்னால் ஒரு மகன் பிறந்திருப்பதை அறிந்த மாதாடின், குழந்தையைப் பார்க்க ஏங்கி, அவள் இல்லாத நேரத்தில் தந்திரமாக வருகிறான். அவன் மனந்திரும்பி, ஹோரி மூலம் அவளுக்கு இரண்டு ரூபாய் தருகிறான். சேலியாவுக்கும் தன் மகனுக்கும் கடமைப்பட்டிருப்பதை இவன் உணர்கிறான். பின்னர் தன் பூணூலை அகற்றி, பிராமணியத்தின் கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான். இப்போது, சேலியாவைத் தன் மனைவியாகக் கொண்டு தைரியமாக வாழும் சுதந்திரத்தை அடைகிறான்.
- போலா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி. இவர் மனைவியை இழந்தவர். இவருக்கு இரண்டு திருமணமான மகன்களும், ஜூனியா என்ற இளம் கைம்பெண் மகளும் உள்ளனர். ஹோரிக்கு கடனாக ஒரு பசுவை கொடுக்க போலா ஒப்புக்கொள்கிறார். அதற்கு பதிலாக இவர் மறுமணம் செய்துகொள்ள ஹோரி ஒரு பெண் பார்ப்பதாக உறுதியளிக்கிறார். ஹோரியின் மகன் கோபருடன் தன் மகள் ஓடிப்போனதால் போலா மிகவும் வருத்தமடைகிறார். இதனால் பழிவாங்கும் எண்ணத்துடன் ஹோரியின் வீட்டிற்கு வந்து, கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கோருகிறார். ஹோரியிடம் கடனைத் திருப்பித்தர பணம் இல்லை. போலா அவரது எருதுகளை கடனுக்காக ஓட்டிச் செல்வதாக மிரட்டுகிறார். ஹோரி அவ்வாறு செய்தால் அது தன் வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்று மன்றாடுகிறார். ஜூனியாவை அவரது வீட்டிலிருந்து விரட்டும்படி போலா கேட்கிறார். இதில் ஹோரிக்கு உடன்பாடில்லாததால், போலா அவரது எருதுகளை ஓட்டிச் செல்கிறார்.
- ஹீரா என்பவர் ஹோரியின் தம்பி. இவரது மனைவி புனியா. இவரது சண்டையிடும் குணம் இவரை அண்ணன் ஹோரியிடமிருந்து பிரிக்கிறது. பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, ஹோரி தங்களது பூர்வீகச் சொத்தை தனக்கு சரியாக பிரித்துத்தராமல் ஏமாற்றிவிட்டதாக கருதுகிறார். மேலும் ஹோரி போலாவிடமிருந்து பசுவை கடன் வாங்கிய நிலையில், ஹோரி தங்கள் பாரம்பரிய சொத்தில் ஏமாற்றிய பணத்திலிருந்து பசுவை வாங்கியதாக நினைக்கிறார். பொறாமையாலும், வெறுப்பாலும் தூண்டப்பட்டு, இவர் பசுவை நஞ்சு வைத்து கொன்றார். பசுவை நஞ்சுவைத்து கொன்ற குற்றச்சாட்டுக்கு பயந்து, இவர் கிராமத்தை விட்டு ஓடிவிடுகிறார். புதினத்தின் இறுதியில், பல்வேறு துன்பங்களை அனுபவித்துவிட்ட நிலையில் இவர் வீடு திரும்புகிறார், தன் குற்றத்துக்கு ஹோரியிடம் மன்னிப்பு கேட்கிறார்.
- புனியா என்பவர் ஹீராவின் மனைவி ஆவாள். ஹோரியின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சந்தேகம் கொண்டவள். பூர்வீக சொத்தில் தன் கணவருக்கு சேரவேண்டியதை முறையாக தராமல் தன் கணவனை அவரது அண்ணன் ஏமாற்றிவிட்டதாக நம்புகிறாள். இந்தக் குற்றச்சாட்டை அடிக்கடிச் சொல்லி இவள் தன் கணவனை அவர்களுக்கு எதிராகத் தூண்டிவிடுகிறாள். இருப்பினும், புதினத்தின் பிற்பகுதியில், இவளுடைய கணவர் ஓடிப்போனதைத் தொடர்ந்து, இவர்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலையில் ஹோரி இவளுக்கு உதவுகயில் இவளது மனம் மாறுகிறது.
- ஷோபா ஹோரியின் இளைய தம்பி. இவர் திருமணமாகாதவர்.
- சுஹியா என்பவர் நகரத்தில் கோபரின் பக்கத்து வீட்டுக்காரி. இவர் ஜூனியாவின் நெருங்கிய தோழி. ஜூனியாவையும் கோபரின் மகனையும் இவர் கவனித்துக்கொள்கிறாள்.
- ராய் சாஹிப் இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றவர். மீண்டும் தேர்தலில் வென்று தன் மாமியாரின் ஜமீன்தாரியையும், சொத்துக்களையும் கைப்பற்றுவதற்காக தன் மகளை ஒரு பணக்கார ஜமீன்தாருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். இதனால், இவர் தன் மகளை மணைவியை இழந்தவரான ஒரு பணக்கார ஜமீன்தாருக்கு திருமணம் செய்து வைக்கிறார். இவர் பின்னர் தன் மாமியாரின் ஜமீன்தாரி பதவியைப் பெறுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சித் துறை அமைச்சராகிறார். தனது குடும்ப கௌரவத்திற்காக தன் மகனை ராஜா சூர்யகாந்தின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடும்போது, இவரது மகன் அதற்கு மறுத்துவிடுகிறான். அவன் மாலதி தேவியின் தங்கை சரோஜைவைக் காதலிக்கிறான். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு இலண்டனுக்குச் சென்றுவிடுகின்றனர். ராய் சாஹிப் தன் மாமியாரிடமிருந்து வென்ற முழு சொத்தையும் அவரது மகன் மீண்டும் கைப்பற்றிக் கொள்கிறான். இதனால் ராய் சாஹிப் பெரும் கடன்காரனாகிறார். இவரது மகள் மணவிலக்குப் பெறுகிறாள். இறுதியில் ராய் சாஹிப் தன் அனைத்து முயற்சிகளிலும் தோல்வியுற்று அதிருப்தியுடன் வாழும் நிலைக்கு ஆளாகிறார்.
- திருமதி மாலதி ஆக்ஸ்போர்டில் படித்த மருத்துவர். திரு. கவுலின் மூன்று மகள்களில் ஒருத்தி. விருந்துகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவராக உள்ளார். திரு. கன்னா அவளுடன் ஊர்சுற்றுகிறார், கோவிந்தி அவளைப் பார்த்து பொறாமைப்படுகிறார், வெறுக்கிறார். மாலதி, திரு. மேத்தாவின் சித்தாந்தம், அவரது எளிமை, புத்திசாலித்தனம் ஆகியவறின் காரணமாக அவரைக் காதலிக்கிறாள். ஏழைகளுக்கு சேவை செய்யத் தொடங்குகிறாள், மேலும் பல சமூக செயற்பாட்டுகளில் ஈடுபடுகிறாள். மாலதியின் மாற்றத்தைக் கண்ட பிறகு, திரு. மேத்தா மாலதியைக் காதலிக்கிறார். ஆனால் மாலதி திரு. மேத்தாவை நேசித்தாலும், அவரை திருமணம் செய்துகொள்ளும் முடிவை ஏற்க மறுக்கிறாள். இப்போது அவள் ஏழைகளுக்கு சேவை செய்வதிலேயே நாட்டம் கொண்டவளாக இருக்கிறாள். திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. திரு. மேத்தாவும் மாலதியும் சேர்ந்து ஏழைகளுக்கு சேவை செய்கின்றனர். தொண்டு செயல்களில் அர்ப்பணிப்புடன் இருப்பதால் புதினத்தின் இறுதியில் திருப்தி அடைந்ததாகக் காட்டப்படும் ஒரே கதாபாத்திரம் மாலதி மட்டுமே.
- திரு. மேத்தா ஒரு அறிஞர், ஒரு கல்லூரியில் மெய்யியல் விரிவுரையாளராக இருக்கிறார். இவர் மெய்யியல் குறித்த ஒரு புத்தகத்தையும் எழுதி வருகிறார், அதை அவர் மாலதிக்கு அர்ப்பணிக்கிறார். மாலதியும், கோவிந்தியும் இவரால் ஈர்க்கப்பட்ட இரண்டு கதாபாத்திரங்கள். ஏழைகளுக்கு தாராளமாக சேவை செய்வதில் தனது நிதி வருவாயை தவறாக நிர்வகிக்காமல் இருக்க, இவருக்கு மாலதியின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
- திரு. கன்னா ஒரு தொழிலதிபர். இவர் ஒரு சர்க்கரை ஆலையை வைத்திருக்கிறார். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தாலும், இவர் தன் மனைவி கோவிந்தியின் பாரம்பரிய விழுமியங்களுக்காக அவளை அவமதிக்கிறார். இவர் மாலதி மீது காதல் வயப்படுகிறார். கோவிந்தி இவரது நடத்தையால் சலிப்படைந்து இவரை விட்டுச் செல்கிறாள். இவர் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டுபவராக இருக்கிறார். இவரது சர்க்கரை ஆலை ஒரு தீ விபத்தில் அழிகிறது. அப்போது கோவிந்தி இவருக்கு துணையாக நின்று அதை மீண்டும் உருவாக்க ஊக்குவித்தபோதுதான், இவர் தனது தவறை உணர்கிறார். திரு. கன்னா இறுதியில் தன் மனைவியை நேசிக்கத் தொடங்குகிறார்.
- கோவிந்தி பணக்கார தொழிலதிபரான திரு. கன்னாவின் மனைவி. இவர் ஒரு பாரம்பரிய இந்து மனைவியாக உருவகப்படுத்தப்படுகிறார். இவர் நல்லொழுக்கமுள்ளவராகவும், இவரது கணவர் மற்றும் குழந்தைகளை மிகவும் அரவணைத்துச் செல்லும் தன்மை கொண்டவர். திரு. கன்னா பாரம்பரிய விழுமியங்களில் தவறுகளைக் கண்டுபிடிப்பதால் அவர் மீது அக்கறை கொள்ளவில்லை. அவர் மருத்துவர் மாலதி மீது மையல் கொண்டு அவளுடன் ஊர்சுற்றுகிறார். கோவிந்தி மிகுந்த மனச்சோர்வடைந்து அவரையும் அவரது வீட்டையும் விட்டுச் செல்ல முடிவு செய்கிறாள். ஆனால் இவரது கொள்கைகளை எப்போதும் பாராட்டி வரும் திரு. மேத்தா தான், குழந்தைகளுக்காக திரும்புமாறு இவளுக்கு அறிவுறுத்துகிறார். சர்க்கரை ஆலை தீவிபத்தில் அழிந்தபோது, இவள் தன் கணவருக்கு தார்மீகரீதியாக ஆதரவாக இருக்கிறாள். அதை மீண்டும் கட்டமைக்க அவரை ஊக்குவிப்பவர் இவர்தான்.
- மிர்சா சாஹேப் ஒரு நல்ல மனிதர். கோபர் நகரத்திற்கு ஓடி வந்ததும், முதலில் மிர்சா சாஹேப்பின் வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்கிறான்.
கருப்பொருட்கள்
[தொகு]இந்த புதினம் பல கருப்பொருள்களைக் கொண்டுள்ளது:
- சாதிப் பிரிவினையால் ஏற்படும் சிக்கல்கள்: வெவ்வேறு தொழில்களைச் சேர்ந்த மக்களும் அந்தந்த சாதியினரும் கிராமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பிராமண புரோகிதரான ததாதீன், உயர் சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தபராக உள்ளார்; அவர் தனது பல்வேறு சமயத் தடைகளால் கீழ் சாதி கிராம மக்களைச் சுரண்டுகிறார். ஹோரி [விவசாயி], போலா [மாடு மேய்ப்பவர்], செலியா [ செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகள்] ஆகியோர் இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பின் கீழ் சாதிகளின் பல்வேறு படிநிலைகளைக் குறிக்கின்றனர்.
- கீழ் வகுப்பினரைச் சுரண்டுதல்: கிராம ஜமீன்தார் மற்றும் பேராசை கொண்ட கந்துவட்டிக்காரர்களால் சுரண்டப்படும் ஏழை விவசாயிகளின் யதார்த்தமான சித்திரத்தை பிரேம்சந்த் வரைந்துள்ளார். ஜமீன்தார்கள் வருவாயைச் வசூலித்து அபராதம் விதிக்கின்றனர். இங்கே, ராய் சாஹேப் பசுவின் மரணத்திற்காக ஹோரிக்கு அபராதம் விதிக்கிறார். ஆனால் அவர் அதைக் கொல்லவில்லை. விவசாயிகளால் சரியான நேரத்தில் கடன்களை செலுத்த முடிவதில்லை, மேலும் அது காலப்போக்கில் பெருகுகிறது. அவர்கள் கடன் வலையில் சிக்கி, ஹோரியைப் போலவே, வாழ்வின் இறுதி வரை துன்பப்படுகிறனர். நாட்டில் இருந்த நிலப்பிரபுத்துவ முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் ஆதரிக்கிறார்.
- பெண்கள் சுரண்டப்படுதல்: பெண் கதாபாத்திரங்களான தானியா, ஜூனியா, செலியா, ரூபா ஆகியோர் அவர்கள் விரும்பும் ஆண்களால் சுரண்டப்படுகின்றனர்.
- தொழில்மயமாக்கலால் ஏற்படும் சிக்கல்கள்: தொழிலாளர்களைச் சுரண்டும் தொழிலதிபர்கள், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இளைஞர்கள் இடம்பெயர்தல் மற்றும் நகரங்களில் மோதல்கள்.
- தனிப்பட்ட உறவுகள், காதல் மற்றும் திருமணம்: முற்போக்கான எழுத்தாளராக பிரேம்சந்த், காதல், சாதி மறுப்புத் திருமணங்கள் போன்றவை செழித்து வளரும் ஒரு நவீன இந்தியாவை கற்பனை செய்கிறார். கோபர் மற்றும் ஜூனியா, மாதாதீன் மற்றும் சீலியா ஆகியோரின் சாதி மறுப்புத் திருமணங்களும், படித்த ஜோடியான ருத்ர பிரதாப் மற்றும் சரோஜ் ஆகியோரின் திருமணங்களும் கதையில் உள்ளன. திரு. கன்னாவுக்கு அவரின் மனைவி மீது அன்பும் மரியாதையும் இல்லாததால் அவர்களின் திருமண உறவு சிக்கலாக உள்ளது. திரு. மேத்தா மற்றும் மிஸ் மாலதி ஆகியோர் காதல், திருமண உறவு, ஆண், பெண் உறவு, பெண்மை ஆகிய சிக்கல்கள் குறித்து தீவிரமான சிந்தனையைத் தூண்டும் விவாதங்களை நடத்துகின்றனர். அவர்கள் நவீன இந்தியாவின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக உள்ளனர், மேலும் அவர்கள் அந்தந்த திறன்களைக் கொண்டு சமூகத்திற்கு சேவை செய்யும் நண்பர்களாக வாழ பரஸ்பரம் முடிவு செய்கிறார்கள்.
- அந்தக் கால அரசியல் சூழல்: காலனித்துவ சக்திகளிடமிருந்து விடுதலை பெற நாடு போராடிக் கொண்டிருந்தது. பல்வேறு கட்சிகள் மற்றும் சித்தாந்தங்களின் வளர்ச்சிக்கான காலம் அது. இந்த புதினத்தின் வழியாக பிரேம்சந்த் ஒரு சோசலிசவாதியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். சோசலிசம் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும், சுரண்டல்களுக்கும் ஒரு அருமருந்து.
இந்தக் கதை, காலனித்துவ ஆட்சியின் கீழ் சராசரி இந்திய விவசாயியின் நிலையைப் பிரதிபலிக்கிறது, கதாநாயகன் கலாச்சார மற்றும் நிலப்பிரபுத்துவ சுரண்டலை எதிர்கொள்கிறார். இந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கை எவ்வாறு வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டுகிறது.
இந்து சமயத்துடனான தொடர்பு
[தொகு]கோதானம் [6] என்பது பசுவை தானம் செய்யும் ஒரு முக்கியமான இந்து சடங்காகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது பாவத்திலிருந்து விடுபடவும், தெய்வீக ஆசியைப் பெறவும் உதவுகிறது. தர்மம் என்ற சொல் புதினத்தில் 34 முறை வெவ்வேறு சூழல்களிலும் வெவ்வேறு கதாபாத்திரங்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல் சமயம், தார்மீகக் கொள்கைகள், விழுமியங்கள், மனசாட்சி மற்றும் கடமை ஆகியவற்றைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு பொருளைக் கொண்டுள்ளது.
மரபு
[தொகு]பிரேம்சந்தின் நீடித்த வழிபாட்டு-மரபு இந்தி படைப்பாக கோதான் கருதப்படுகிறது. [7] இவரது மற்ற புதினங்களைப் போலவே, கோதானும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சமூகப் போராட்டங்களைச் சித்தரிக்கிறது.
ராஜ் குமார், காமினி கௌஷல், மெஹ்மூத், சசிகலா நடிப்பில் 1963 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படமாக கோதான் உருவாக்கப்பட்டது. 2004 இல், 27-பாகங்கள் கொண்ட தொலைக்காட்சித் தொடரான தெஹ்ரீர்.... முன்ஷி பிரேம்சந்த் கி முன்ஷி பிரேம்சந்த் கி, பிரேம்சந்தின் எழுத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் பங்கஜ் கபூர் மற்றும் சுரேகா சிக்ரி நடிக்க, குல்சார் இயக்கினார். தூர்தர்ஷன் தயாரித்தது.
கோதான் இந்திய இலக்கியத்தின் ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. [8] இது இந்திய மொழியில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தப் புதினம் ஜெய் ரத்தன், புருஷோத்தம லால் ஆகியோரால் 'தி கிஃப்ட் ஆஃப் கௌ' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதை தமிழில் சரஸ்வதி ராம்நாத் கோதானம் என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Singh, Amardeep (8 July 2010). "Comparing Translations: Godaan". In the Library: Notes and Bibliography. Retrieved 20 August 2010 – via Blogger.
- ↑ "The Gift of a Cow : A Translation of the Classic Hindi Novel: Godaan". Vedams Books. Retrieved 20 August 2010.
- ↑ நம்பிக்கையின் உருவம் | நாவல் வாசிகள் 21, கட்டுரை, எஸ். ராமகிருஷ்ணன் 24 ஆகத்து 2025
- ↑ "Godaan (1963)". ஐ. எம். டி. பி இணையத்தளம். Retrieved 25 August 2021.
- ↑ யூடியூபில் Tehreer...Munshi Premchand Ki : GODAAN - EP#1
- ↑ Prinja, Nawal K. (24 August 2009). "Hindu weddings". பிபிசி. http://www.bbc.co.uk/religion/religions/hinduism/ritesrituals/weddings.shtml.
- ↑ Premacanda, 1881-1936. The gift of a cow : a translation of the Hindi novel, Godaan. கணினி நூலகம் 72307.
{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Nagendra. (1988). Indian literature. Prabhat Prakashan. கணினி நூலகம் 19812121.
- ↑ நம்பிக்கையின் உருவம் | நாவல் வாசிகள் 21, கட்டுரை, எஸ். ராமகிருஷ்ணன், இந்து தமிழ் திசை, 8 செப்டம்பர் 2025