கோணங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோணங்கி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் இளங்கோ.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர்.சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர்.[1]கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர்.

இலக்கியப் பணி[தொகு]

1980-களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர். கவிஞர் பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழில் புதிதாக எழுதத் தொடங்கியவர். புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந. முத்துச்சாமி, கி. ராஜநாராயணன், எஸ். சம்பத், ஜி. நாகராஜன் போன்ற தமிழ் எழுத்தாளர்களை விரும்பி வாசிப்பவர். ஆனால் அவர்களைப் போல எழுதாமல் தமக்கென்று தனித்த நடையை உருவாக்கியிருப்பவர்.

கோணங்கி, கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர். தமிழ் எழுத்தாளர் நகுலன், ருஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்து ஸ்பானிஷ் மொழியில் எழுதும் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோருக்கு கல்குதிரை சிறப்பிதழ் கொணர்ந்தவர். பெரும்பத்திரிகைகள் மற்றும், வணிக இதழ்களில் இவர் எழுதுவதில்லை. ஓரிடத்தில் நில்லாது நிலையற்ற நிலையில் வாழ்பவர்; இலக்கியவாதிகளின் நண்பர். இவருடைய மூத்த சகோதரர், சிறுகதை ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வன். பாழி, பிதிரா, என்ற இவருடைய மூன்று நாவல்களும் தமிழ்-நாவலுக்கென்ற மரபான தளங்களைத் தவிர்த்து, புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை. இவர் பற்றி விமர்சகர்கள் நாகார்ஜுனன், எஸ். சண்முகம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இவருடைய முதல் ஐந்து சிறுகதை நூல்கள் யாவும் தொகுக்கப்பெற்று ஒன்றாக வெளியாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • மதினிமார்கள் கதை (சிறுகதைத்தொகுப்பு, 1986)
  • கொல்லனின் ஆறு பெண் மக்கள் (சிறுகதைத்தொகுப்பு, 1989)
  • பொம்மைகள் உடைபடும் நகரம் (சிறுகதைத்தொகுப்பு, 1992)
  • பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் (சிறுகதைத்தொகுப்பு, 1994)
  • உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை (சிறுகதைத்தொகுப்பு, 1997)
  • பாழி (நாவல், 2000)
  • பிதிரா (நாவல், 2004)
  • இருள்வ மௌத்திகம் (கதைத்தொகுப்பு, 2007)
  • சலூன் நாற்காலியின் சுழன்றபடி (சிறுகதைத் தொகுப்பு, 2008) - மேற்கண்ட முதல் ஐந்து நூல்களில் உள்ள சிறுகதைகள் யாவும் அடங்கியது.
  • (நாவல், 2014)

கோணங்கியின் எழுத்து[தொகு]

இவரின் எழுத்தில் உவமையும் உருவகங்களும் இதுவரை சொல்லப்படாத மாறுபட்ட பொருண்மையில் இருக்கும்.


நவம்பர் மாத மரத்துண்டுகள் எடுத்து...

முட்டைகள் சேகரிக்கும் தெலங்கானா காதலி செஞ்சு குனிகிறாள் 'நவம்பர் மாத மரத்துண்டுகள் எடுத்து.' செறிவுமிக்க சே குவாரா விரல்களின் தனிமை இந்தியாவில் பன்னிரண்டு நாட்கள் அவசியமான பயணம் அழகாக மரணமடைவதில் வாழ்க்கை அர்த்தமற்றது மூச்சு நடைதிணறும் ஆஸ்த்மாவில் முன்னாள் வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் மாளிகையில் ரோஜா கொடுத்த மாபெரும் விருந்தில் சே துண்டிக்கப்படாதபோது கைகள் ஏந்துகிற கோப்பைகளில் நக்ஸல் தேயிலை ஆவிகள் கல்கத்தாவின் வறுமை வரைபடம் ஆக்ரா ரோஜா மடிப்புகளில் மறைந்திருக்கும் மரணம் புத்தகமாகி வார்த்தையாகாமல் வெற்றிடத்தில் லம்பாடிப்பெண்கள் நாவலாகும்படி ஒவ்வொரு மரத்துண்டும் எடுத்துச் சுழல்களில் நடனம் கால்தூக்கிய இசைகளின் கோடை வைரத்தில் அருகம்புல் நீரோட்டம் வருத்தும் ஷெனாய் மணம் பிரதி வறண்டு கோப்பைகளாகின்றன சுருள்பட்டு இருட்டும் ஷெனாய் மூச்சுக்குழல் ஈச்ச மரங்கள் அறிந்த கனவுப்புனைகதை உதிர்ந்த பாதிப்பனியிலை அறுவடைசெய்த கோதுமைநிறக்காதல் மேதி பட்டணத்தில் அனாதையாய்க் கிடக்க ஆந்திரப்பழங்குடி சாரங்கிப்பாடல்கள் இசைவிரல்களில் சிவந்த முல்லைநிலம் மரவாசனைகளில் சுழலும் நெருப்பு உள்ளே உயிர்மையின் கோடை கலைந்துசெல்ல கருநீலம் துடைத்த மேகங்களில் கோயா மூதாதைகளின் வெள்ளிவாத்து உப்புப்பானைக்குள் மந்திரிக்கப்பட்ட முட்டைகள் அடியில் தற்கொலை குளிர்காலம்.


-- பிதிரா நாவலிலிருந்து.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணங்கி&oldid=2218913" இருந்து மீள்விக்கப்பட்டது