கோட்டக்கல் சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருச்சுனன் வேடத்தில் கோட்டக்கல் சந்திரசேகரன், மார்ச் 2017

கோட்டக்கல் சந்திரசேகரன் (Kottakkal Chandrasekharan) (15 சனவரி 1945 - 4 செப்டம்பர் 2019) [1] தென்னிந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பாரம்பரிய நடனமான கதகளி கலைஞர் ஆவார். [2] பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே நடுவட்டம் என்ற இடத்தில் 1945இல் பிறந்தார். இவர் பத்மசிறீ வழெங்கடா குஞ்சு நாயர், கோட்டக்கல் கிருஷ்ணன்குட்டி நாயர் ஆகியோரின் முக்கிய சீடராக இருந்தார். இவரது தந்தை ஏ.எம். குமாரசாமி பட்டத்திரிபாடு, தாய் பி. வி. பாருகுட்டி வாராசியார் .

தொழில்[தொகு]

தனது ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு கோட்டக்கலில் பிஎஸ்வி நாட்டியச் சங்கத்தில் நடனப் பயிற்சிக்காக சேர்ந்தார். பின்னர் 1996 முதல் அதன் முதல்வராகவும் இருந்தார்.[3]. மேலும் நளன், பாகுகன், வீமன், அருச்சுனன், இராவணன், துரியோதனன், கீசகன் போன்ற வேடங்களில் தனது சிறப்பான சித்தரிப்புக்காக புகழ் பெற்றார். கேரளாவின் அனைத்து புகழ்பெற்ற கோயில்களிலும் சங்கங்களிலும் கதகளியை நிகழ்த்திய இவர், 'கதகளி மகோத்சவம்', ஆசியாட் (1982) போன்ற விழாக்களிலும், இந்தியாவின் தில்லி, மும்பை, கொல்கத்தா, சூரத், பெங்களூர், போபால், ஆந்திரா (புட்டபர்த்தி) சென்னை போன்ற இடங்களில் நடந்த நடன நிகழ்சிகளில் பங்கேற்றார். லோக மலையாள மேளா, இந்திய விழா (1983இல் இங்கிலாந்தின், பிரித்தானிய அமைப்பால் சிறப்பு விருதினராக அழைக்கப்பட்டார்), மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா (இராமாயண மேளா), சீனா, கொரியா, ஆங்காங், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் இவர் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்[தொகு]

இவர் மத்திய சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றுள்ளார். 1963இல் எர்ணானகுளம் கதகளி சங்கத்திலிருந்து ஆறுதல் பரிசு, வழெங்கடா குஞ்சு நாயர் விருது (கொல்லம்), வி. எஸ். சர்மா அறக்கட்டளை விருது (கேரள கலாமண்டலம்), 1990 இன் துலாசேவனம் விருது (திருவனந்தபுரம்), ஆலப்புழா மாவட்ட கதகளி சங்க விருது, எஸ்.பி.டி. ஆர்யா வட்டம் விருது (கோட்டக்கல்), போன்ற பல விருகளையும் பெற்றுள்ளார். 1994 ஆம் ஆண்டில் தளிப்பறம்பு ராஜராஜேஸ்வரர் கோயிலிலிருந்து 'நாட்டியத்திலகம்', 'வீரசிருங்ககலை' ஆகிய கௌரவத்தையும் பெற்றார்.

குடும்பம்[தொகு]

இவர், மனைவி சுசீலா, மகன் ஜிதேஷ் மற்றும் மகள் ஜோத்ஸ்னா ஆகியோருடன் கோட்டக்கலில் வசித்து வந்தார்.

இறப்பு[தொகு]

இவர் தனது 74 வயதில் செப்டம்பர் 4, 2019 அன்று காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.thehindu.com/news/national/kerala/kottakkal-chandrasekharan-passes-away/article29335469.ece
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-02-24. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.