கோகுலத்தில் சீதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோகுலத்தில் சீதை, கார்த்திக் நடித்து 1995ல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். அகத்தியன் இயக்கிய இப்படத்தில் சுவலட்சுமி, மணிவண்ணன், கெளதம், விஸ்வநாத், ஸ்டான்லி, செந்தில்குமார், பிரபு, பத்மனாபன், ராஜன், ஹாரிஷ், ரமேஷ்கண்ணா, மணிசங்கர், "கோட்டை" பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜய், கரண், பாண்டு போன்ற நடிகர்கள் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா; தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர். இயக்குனர் அகத்தியனே கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களையும் எழுதியிருந்தார்.

இயக்குநர் அகத்தியனை நமக்கு மறக்க வாய்ப்பில்லை. காதல் கோட்டை திரைப்படம் அந்த அளவிற்கு அவருக்கு நல்ல புகழையும் பெயரையும் வாங்கி கொடுத்தது. எனக்கு அகத்தியனின் திரைப்படங்கள் பொதுவாகவே பிடிக்கும், ஏனென்றால், அவரது திரைப்படங்களில் திரைக்கதையை கையாளும் விதம் அருமையாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்திலும் சிறப்பாகவும், கவனமாகவும் செய்திருப்பார். ஏனென்றால், இந்த திரைப்படத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம் கொஞ்சம் பிசங்கினாலும் எதிர் மறையாக மாறிவிடும். சாராசரி கெட்ட பழக்கங்கள் கொண்ட பணக்கார வாலிபராக கார்த்திக் நடித்திருப்பார். கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரியான ஆள் என்பது என் கருத்து.


திரைப்படத்தின் ஆரம்பத்தில் கார்த்திக் (ரிஷி), தலைவாசல் விஜயின் உதவியுடன் சில பெண்களை நேர்முகம் காண்கிறார். நாம் வேலைக்குதான் ஆள் எடுக்கிறார் என்று காத்திருந்தால், அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஒரு பெண்ணை தேர்வு செய்து கொண்டிருப்பார். கார்த்திக்கின் கதாபாத்திரம் என்னவென்றால், "காதல்" என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லாதவர். காதல் என்பது அவரை பொருத்த வரை கெட்ட வார்த்தை. பெண்கள் என்றால், ஒரு நாள் இரவுக்கு மட்டும் ரசிக்க என்கிற கருத்து உடையவர். இவரது அலுவலகத்தில் பணி புரியும் கரண் (மோகன்) கதாபாத்திரமோ, தன்னை எப்போதும் தாழ்வாக நினைத்து கொள்ளும், வீட்டு பொறுப்புகளுக்காக காதலையே இழக்க துணியும் கதாபாத்திரம். இவரை அனைவரும் I.C (Inferiority Complex) மோகன் என்று அழைக்கிறார்கள்.


இவர்கள் இருவரும் ஒரு விழாவின் போது, சுவலக்ஷ்மி (நிலா) பாடும் பாடலை கேட்கிறார்கள். அப்போதே கரண், சுவலக்ஷ்மியை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். கார்த்திக்கோ, ஒரு நாள் மட்டும் சுவலக்ஷ்மியை ரசிக்க ஆசைபடுகிறார். இதற்காக தலைவாசல் விஜயின் உதவியை நாடுகிறார் கார்த்திக். ஆனால், சுவலக்ஷ்மி அவரை காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்று விடுகிறார். இந்த ஒரு காட்சியே சுவலக்ஷ்மியின் கதாபாத்திரத்தை விளக்கிவிடும். இதே போல, கரண் தனது காதலை சுவலக்ஷ்மியிடம் தெரிவிக்கிறார், ஆனால் சுவலக்ஷ்மியோ "நான் திருமணம் செய்து கொள்ளும் ஆணை தான் காதலிப்பேன்" என்றும், கரணுடைய வாழ்க்கை துணையாக வருவதிலும் சம்மதம் என்றும் வித்தியாசமான பதிலை கொடுத்துவிட்டு கிளம்பிவிடுகிறாள். இந்நிலையில், சுவலக்ஷ்மிக்கு அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன, தனது நிலையை கரணுக்கு அறிவித்து விடுகிறாள். மேலும், கரண் வந்து தன்னை அழைத்து சென்றால் அவருடன் வாழ்வேன் என்றும், இல்லை என்றால் தனக்கு பார்த்துள்ள மாப்பிள்ளையையே மணந்து கொள்வேன் என்றும் கூறி விடுகிறாள். சுவலக்ஷ்மியை அழைத்து வர கார்த்திக்கின் உதவியை கரண் நாடுகிறார். கார்த்திக்கும், கரண் கை பட எழுதிய கடிதத்தை வாங்கி கொண்டு சென்று சுவலக்ஷ்மியை அழைத்து வந்து விடுகிறார். ஆனால், கரணோ தன் குடும்ப சூழ்நிலையை காட்டி சுவலக்ஷ்மியை மணந்து கொள்ள மறுக்கிறார்.


இந்நிலையில் கார்த்திக், சுவலக்ஷ்மிக்கு தனது வீட்டிலேயே அடைக்கலம் கொடுக்கிறார். தனது அலுவலகத்தில் வேலையும் போட்டு கொடுக்கிறார். அதன் பிறகு மெல்ல சுவலக்ஷ்மி மீது காதல் பிறக்கிறது. தனது காதலை சொல்ல தனது தந்தை மணிவண்ணனையே தூது அனுப்புகிறார். மணிவண்ணன், தனது மகனுக்கு பொறுப்பு வரவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அவரது காதலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இந்த குழப்பத்தின் முடிவு சுபம்.


இந்த திரைப்படம், ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக சுவலக்ஷ்மி கதாபாத்திரத்தை காட்டி இருக்கிறது. கார்த்திக்கின் யதார்த்தமான நடிப்பு இந்த திரைப்படத்தின் உயிர் நாடி. உதாரணமாக, பஸ்ஸில் டிக்கெட் வாங்க சில்லரை இல்லாமல் "கிரெடிட் கார்டை" கொடுக்கும் காட்சி, கரணின் காதலுக்கு இவரிடம் உதவி கேட்கும் காட்சி என்று சொல்லி கொண்டே போகலாம். இந்த திரைப்படத்தில் பல இடங்களில் வசனங்கள் அருமையாக இருந்தது. இந்த திரைப்படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவை "கோகுலத்து கண்ணா.." மற்றும் "எந்தன் குரல் கேட்டு..." என தொடங்கும் பாடல்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுலத்தில்_சீதை&oldid=1819807" இருந்து மீள்விக்கப்பட்டது