கொழு உடல் மருத்துவ இயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிகமான உடல் பருமன் அல்லது பெருத்த உடல் மருத்துவ இயல், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு ஆங்கிலத்தில் Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது.

அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காக சிறுகுடலின் ஒருபகுதி, அல்லது வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. சிறுகுடலை மாற்றி அமைப்பதன்மூலம் உடல் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சாதாரணமாக ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு அதிகமானால் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் உடல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பருமனாக இருந்து மது (ஆல்கஹால்) உபயோகிக்காதவராக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யலாம். மேலும் அவரது மனநலம் திருப்திகரமாகவும் வயது 18 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உடல் பருமன் BMI (Body Mass Indx) என்னும் குறியீட்டால் கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட (1) உடல் எடையை கிலோகிராமில் கண்டறிந்து கொள்ளவேண்டும் மேலும் (2) உடலின் உயரத்தை மீட்டரில் அளந்து அதன் வர்க்கத்தை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். (1) ஐ (2) ஆல் வகுத்து வரும் எண்தான் BMI என்பது.

BMI ன் மதிப்பு 20 க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர் என தீர்மானிக்கலாம். 20 முதல் 25 வரை இருந்தால் சராசரி எடை எனவும், 25 முதல் 30 வரை இருந்தால் அதிக எடை எனவும், 30 முதல் 40 வரை இருந்தால் உடல் பருமனானவர் எனவும் 40 க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர் எனவும் வகைப்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழு_உடல்_மருத்துவ_இயல்&oldid=1356298" இலிருந்து மீள்விக்கப்பட்டது