உள்ளடக்கத்துக்குச் செல்

கொழும்புச் செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொழும்புச் செட்டிகள்
மொத்த மக்கள்தொகை
6,075 (2012 census)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
Province
 மத்திய மாகாணம்5,427
 வடமேல்279
 மத்திய மாகாணம்193
மொழி(கள்)
சமயங்கள்
இந்து, கிறிஸ்தவம் (mostly கத்தோலிக்கம் and ஆங்கிலிக்கம்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்

கொழும்புச் செட்டி / இலங்கைச் செட்டி (Colombo Chetty) எனப்படுவோர் இலங்கையில் வாழும் சிறு தொகையினரான ஒரு சமுதாயத்தினரைக் குறிக்கும். இவர்கள் தற்போது பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தையே பின்பற்றி வருகிறார்கள். இலங்கையில் பல்வேறு துறைகளிலும் இவர்களைக் காண முடியும். ஆரம்ப காலத்தில் இவர்களின் மூதாதையர்கள் கொழும்பு நகரில் மாத்திரம் குடியேறியதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

தோற்றம்[தொகு]

இவர்கள் பல்வேறு இனங்களையும் சேர்ந்த தென்னிந்திய வணிகர்களின் வழித் தோன்றல்கள் ஆவர். இவர்களுடைய மூதாதையர் பெரும்பாலும் தமிழர்கள். குறைந்த அளவில் மலையாள, தெலுங்கு இனத்தவர்களின் வழி வந்தவர்களும் உள்ளனர். தென்னிந்திய வணிகர்கள் ஏறத்தாழ இலங்கையின் வரலாற்றுக் காலம் முழுவதுமே இந்நாட்டோடு தொடர்பு கொண்டுள்ளார்கள். எனினும், கொழும்புச் செட்டிகளின் மூதாதையர்கள், கி.பி 1505 ஆம் ஆண்டுக்குப் பின், இலங்கையில் போத்துக்கீசர் ஆட்சி நிலவிய காலத்தில் இங்கே வந்தவர்களாவர். இவர்கள் போத்துக்கீசரின் சமயமான கத்தோலிக்க சமயத்துக்கு மாறி இலங்கையில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். இவர்கள் தங்கள் சமுதாயத்துக்குள் மட்டுமன்றி, இலங்கைத் தமிழர், சிங்களவர், போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், ஐரோப்பிய ஆசியக் கலப்பினத்தவர் போன்ற பலருடனும் மணத்தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.

முதலாவதாக இலங்கையில் குடியேறியவர்களுள், பிற்காலத்தில் பிரசித்திபெற்று விளங்கிய சைமன் காசிச்செட்டியின் மூதாதையரான கஸ்பர் காசி செட்டியைக் குறிப்பிடலாம். இவர் 1620 இல் இலங்கையைத் தனது நிரந்தர வதிவிடமாகக் கொண்டார்.[2]

தனித்துவ அடையாளம்[தொகு]

கொழும்புச் செட்டி c. 1870

கொழும்புச் செட்டிகள் வைசியர்கள் (வணிகர்கள்) ஆவர். தமிழ் இந்துக்களாக இருந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்களே கொழும்புச் செட்டிகள். இதனால் இவர்களின் கலாசாரத்தில் இந்துக் கலாசாரத்தின் தாக்கம் காணப்படுகின்றது. திருமணத்தின்போது [தாலி]] அணிவதை விசேடமாகக் குறிப்பிடலாம். 1984 ஆம் ஆண்டு வரை, கொழும்புச் செட்டிகளில் பலர் தமிழைப் பயின்று வந்ததுடன், அவர்கள் தமிழ்ச் சாதிகளுள் ஒன்றைச் சேர்ந்தவராகவே கருதப்பட்டு வந்தனர்.

எனினும், ஆங்கிலக் கல்வியும், தமிழர் தவிர்ந்த சிங்களவர் உட்பட்ட ஏனைய இனமக்களுடனும் இனக் கலப்புற்றதனாலும், இவர்கள் படிப்படியாகத் தமிழைக் கைவிட்டுவிட்டனர். இவர்கள் பொரும்பாலும் ஆங்கிலத்தையே வீட்டு மொழியாகக் கொண்டுள்ளதுடன், சிங்களத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கொழும்புச் செட்டிகளை இலங்கைத் தமிழர்களுடன் சேர்த்தே கணக்கெடுத்தனர். இந்த நடைமுறையை அவர்கள் விரும்பவில்லை. தங்களைத் தனியான இனமாகக் கணக்கெடுக்க வேண்டும் என்று இலங்கை செட்டி சங்கத்தின் (Sri lankan Chetti Association) பொதுச் செயலாளர் ஷர்லி புள்ளே திசேரா வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். இதன் விளைவாக, கொழும்புச் செட்டிகளைத் தனியான இனக் குழுவாக அங்கீகரிக்க வேண்டும் என்று 1984 ஜனவரி 14 ஆம் நாள் அரசாங்கம் அறிவித்தது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், கொழும்புச் செட்டிகளைத் தனியான இனக் குழுவாகக் குறிப்பிட வேண்டும் என்று அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்த்தன 1989 அக்டோபர் 30 ஆம் திகதி பணிப்புரை விடுத்தார். இவர்கள் இன்று தமிழராகவோ சிங்களவராகவோ கணிக்கப்படாமல் ஒரு தனி இனமாகவே கொள்ளப்படுகின்றார்கள். இவர்கள் பல இனத்தவரிடையேயும் கலந்து மணம் புரிந்ததன் காரணமாகச் சில சந்தர்ப்பங்களில் இவர்களுக்கும், பறங்கிச் சமூகத்தவருக்கும் இடையே துல்லியமான வேறுபாடுகளைக் காண முடியாத நிலையும் உள்ளது.

எடுத்துக்காட்டாகப் பறங்கியராகக் கருதப்படும் இலங்கையின் பிரபல ஆங்கில எழுத்தாளரான மைக்கேல் ஒண்டாச்சி என்பவர் கொழும்புச் செட்டிகளுடன் தாராளமான மண உறவுகளைக் கொண்டிருந்த இந்துத் தென்னிந்திய வைத்தியர் ஒருவரின் வழி வந்தவர் என அறியப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் குடியேற்றவாத ஆட்சிகளின் கீழ் சிவில் சேவைகளில் அமர்ந்த தமிழர்களில் பலர் கொழும்புச் செட்டிகளாக இருந்தனர். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில், அரச சேவையில் உயர் பதவிகளை வகித்ததுடன், ஒரு சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கி, தமிழ்ப் புலவர்கள் பற்றியும், இலங்கையில் தமிழர்களின் வரலாறு தொடர்பிலும் பல நூல்களை எழுதி வெளியிட்ட சைமன் காசிச்செட்டி என்பவர் கொழும்புச் செட்டி சமூகத்தைச் சேர்ந்தவராவார்.

புகழ்பெற்ற கொழும்புச் செட்டிகள் சிலர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  2. இலங்கையில் கொழும்புச் செட்டிகள், தினகரன் வாரமஞ்சரி, சூலை 18, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழும்புச்_செட்டி&oldid=3627660" இலிருந்து மீள்விக்கப்பட்டது