உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டிமகளிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொண்டிமகளிர் என்பது விலைமகளிரைக் குறிக்கும் பெயராகும். சிறைபிடிக்கப்பட்டபெண்கள், பரத்தையர் என்ற பொருளிலும் வழங்கப்பெறுகின்றது.[1] விலைமகளிர் பற்றிய செய்திகள் சங்க காலத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. எனினும் மதுரைக்காஞ்சியிலேயே இவர்கள் பற்றிய விரிவான செய்திகளைக் காணமுடிகின்றது. பொருளைக் கொள்ளும் செயலுடையவர்களாக விளங்கிய தன்மையால் கொண்டிமகளிர் எனப்பட்டனர்.

கொண்டிமகளிர்[தொகு]

கொண்டிமகளிர் எனும் பெயருக்கு இலக்கியங்களிலே சிலவேறு பொருளும் வழங்கப்பெற்றுள்ளமையை காணலாம்.

கொண்டுவரப்பட்ட மகளிர்[தொகு]

சங்ககால போர் நடவடிக்கைகளிலே பகைமன்னர்களின் அந்தப்புரப் பெண்களைக் கைப்பற்றி ஏவல் மகளிராக ஆக்கிக்கொள்வதும் வழக்கமாகக் காணப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பகையரசிரிடமிருந்து கவர்ந்து கொண்டுவரப்பட்ட மகளிர் கொண்டிமகளிர் என்றே அழைக்கப்பட்டுள்ளனர்.[2]

கொண்டித்தனம் செய்யும் மகளிா்[தொகு]

மதுரைக் காஞ்சியில் கொண்டிமகளிர் பற்றி வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. கொண்டிமகளிர் என்போர் மாயம் செய்யும் வரைவின் மகளிர் அல்லர். யாருக்கும் அடங்காமல் கொண்டித்தனம் செய்யும் மகளிர். பிறரது நெஞ்சை நடுங்கச் செய்பவர்கள். வானவ மகளிர் மற்றவர் மயங்க ஆடுவர். யாருக்கும் எந்த உடலின்பமும் தர மாட்டார்கள். கொண்டி மகளிர் இசை முழக்கத்துடன் நடனப் பொய்தல் ஆடுவர். இவர்கள் தங்க வளையல் மின்னும்படியும் பூண்டிருக்கும் புதிய அணிகலன்கள் பொலியும்படியும் பலராகக் கூடி விளக்கு வெளிச்சத்தில் விளையாடுவார்கள். வானவ மகளிர் போல் கொண்டிமகளிர் நள்ளிரவில் கூடி விளையாடுவர். யாழில் பண் இசைத்துப் பாடுவர். முழவிசைக்கேற்ப ஆடுவர். ஆழமான நீர்த்துறைகளை அடுத்துக் குவிந்திருக்கும் மணலில் விளையாடுவர். ஆடும் விளையாட்டில் சலிப்பு தோன்றும்போது அதனை விட்டுவிட்டுப் பூப்பறிக்கும் விளையாட்டில் ஈடுபடுவர். நீரில் நனைவதைப் பொருட்படுத்தாமல் குவளை மலர்களைப் பறித்து அதன் காம்புகளை நன்றாக அலசிவிட்டுக் கட்டாக மனைக்குக் கொண்டுசென்று அழகுபடுத்தி வைத்துக்கொண்டு பொய்தல் விளையாட்டு விளையாடுவார்கள். பொய்தல் என்பது பொருள்களை மறைத்தும், ஆள் மறைந்தும் விளையாடும் விளையாட்டு, என்று கூறப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.[3]

செயல்[தொகு]

ஆடல், பாடல், அழகு என்பவற்றில் சிறந்து விளங்கிய இவர்கள் எவ்வாறு தங்களை ஒப்பனை செய்து ஆடவர்களை மயக்கினர் என்பதையும் செல்வம் முடியும்வரை தம்மை நாடி வந்தவர்களுக்கு இன்பம் அளித்துவிட்டுச் செல்வம் முடிந்ததும் அவர்கள் மனம் வருந்தும்படி அவர்களிடமிருந்து நீங்கி மீண்டும் தம்மை ஒப்பனை செய்து கொண்டு செல்வமுடைய ஆடவர் ஒருவரை நாடிச் சென்று இன்பம் அளிப்பர் என்று கூறப்படுகின்றனர்.[4]

செல்வத்தைப் பெறும்பொருட்டு அயலில் உள்ள ஆண்களோடு மட்டுமன்றி துர இடங்களிலிருந்து வரும் செல்வம் படைத்த ஆண்களோடும் அவர்களது செல்வம் முடியும் வரை கூடிமகிழ்வர்.

இவர்கள் தம்மை ஒப்பனை செய்து நறுமணமூட்டி வீதி வழியாக செல்கின்ற இளைஞர்களைக் கைகாட்டி அழைப்பர். காமநுகர்ச்சி ஒன்றையே பெரிதாகக் கருதும் ஆடவரும் இவர்களது மாயவலையில் சிக்கி காமத்தில் உழன்று தம் பொருள் யாவற்றையும் இழப்பர்.

மதுரைக் காஞ்சியிலே இவர்களின் வாழ்க்கை பற்றிய வர்ணனைகள் காணப்படுகின்றன. அதில், பழுமரம் தேரும் பறவையின் வாழ்வினைப் போன்றது என்றும், தேனை உண்டு நீங்கும் வண்டின் வாழ்வினைப் போன்றது என்றும் பலவாறு வர்ணிக்கப்பட்டுள்ளது.


மேற்கோள்கள்[தொகு]

 1. http://agarathi.com/word/கொண்டிமகளிர் பார்த்தநாள் 2017.01.15
 2. http://www.yarl.com/forum3/topic/147605-சங்ககாலப்-போர்முறைகளும்-விதிகளும்/ பார்த்தநாள் 2017.01.15
 3. ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர்
  ஒண் சுடர் விளக்கத்து, பலர் உடன் துவன்றி, 580
  நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
  வானவ மகளிர் மான, கண்டோர்
  நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,
  யாம நல் யாழ் நாப்பண் நின்ற
  முழவின் மகிழ்ந்தனர் ஆடி, குண்டு நீர்ப் 585
  பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
  கொழுங் கொம்பு கொழுதி, நீர் நனை மேவர,
  நெடுந் தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
  மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர - மதுரைக்காஞ்சி

 4. சங்கஇலக்கியமும் சமூகமும், 2007, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் - கொழும்பு - ப.147

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டிமகளிர்&oldid=2406945" இலிருந்து மீள்விக்கப்பட்டது