கொண்டப்பள்ளி சீதாராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டப்பள்ளி சீதாராமையா
பிறப்பு1914/15
இலிங்கவரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்புஏப்ரல் 12, 2002
விசயவாடா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஇந்தியாவில் நக்சல் இயக்கத்தின் முக்கிய நபர்

கொண்டப்பள்ளி சீதாராமையா (Kondapalli Seetharamaiah) (1914/15 - 12 ஏப்ரல் 2002) என்பவர், இந்தியாவில் ஒரு மூத்த பொதுவுடைமை தலைவராகவும், மாவோயிஸ்ட் அமைப்பாளராகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், இலிங்காவரம் கிராமத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அருகிலுள்ள ஜோனபாடு கிராமத்தில் வளர்ந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர், இளம் வயதிலேயே, பொதுவுடைமை இயக்கங்களில் சேர்ந்தார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கிருஷ்ணா மாவட்டச் செயலாளராக ஆனார். இவரது கட்சிப் பிரிவு தெலங்கானா கிளர்ச்சியின் போது தீவிரமாக இருந்தது. 1964இல் கட்சி பிளவுபட்டபோது, இவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகினார். பின்னர், வாரங்கலில் உள்ள புனித கேப்ரியல் உயர்நிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். வாரங்கலில் கே. ஜி. சத்தியமூர்த்தியுடன் நட்பு கொண்டார். இருவரும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் (மார்க்சிஸ்ட்-லெனினிச) சேர்ந்தனர். இவர், கட்சியின் ஆந்திர மாநிலக் குழுவில் உறுப்பினரானார். [1] உட்கட்சி மோதலால், இவர் 1972இல் மத்திய அமைப்புக் குழுவில் சேர்ந்தார். ஆகத்து 1974இல், கட்சியின் ஆந்திர மாநிலக் குழு ஏற்படுத்தப்பட்டது. இவர் அதன் மூன்று உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். [2]

புதிய கட்சி[தொகு]

1977 ஆம் ஆண்டில் இவர் கட்சியிலிருந்து விலகி, [3] ஏப்ரல் 22, 1980 அன்று "இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிச-லெனினிச) மக்கள் போர் "என்பதை நிறுவினார்.

சனவரி 2, 1982 அன்று, ஐதராபாத்தில் பேகம்பேட்டை தொடருந்து நிலையத்தில், மும்பைக்கு செல்லக் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டார். சனவரி 4, 1984 அன்று இவர் உசுமானியா மருத்துவமனையின் கைதிகள் பிரிவில் இருந்து தப்பித்தார்.

கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த சத்தியமூர்த்தி, டங் சியாவோபிங்கின் அடிப்படையில் கட்சியின் மாவோயிச தன்மையை கேள்வி கேட்கத் தொடங்கினார். கம்மம் மாவட்ட போராளித் தளபதியான பைரெட்டி சத்தியநாராயண ரெட்டி சத்தியமூர்த்தியை வெளியேற்றுவதை எதிர்த்தார். ஆனாலும், அவர்கள இருவரையும் வெளியேற்றியதன் மூலம் ஏற்பட்ட உட்கட்சி மோதலைத் தொடர்ந்து, கட்சி மீது சீதாராமையா வைத்திருந்த பிடிப்பு வலுப்பெற்றது. .

1991இல், கட்சியில் இருந்து இவர், வெளியேற்றப்பட்டார். 1993 ஆம் ஆண்டில், தனது சொந்த கிராமத்தில் காவலர்களால் பிடிக்கப்பட்டார். [4] சில ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

இறுதி ஆண்டுகள்[தொகு]

தனது இறுதி ஆண்டுகளில், இவர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகினார். ஆல்சைமர் நோயால் அவதிப்பட்ட இவர், 12 ஏப்ரல் 2002 அன்று விசயவாடாவில் உள்ள தனது பேத்தி வீட்டில் தனது 87 வயதில் இறந்தார்.[5] இவருக்கு கோட்டீசுவரம்மா என்ற மனைவி இருந்தார்.[6] இவரது இறுதிச் சடங்குக்கு ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். [7]

குறிப்புகள்[தொகு]