கொடுகொட்டி (ஆடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுகொட்டி என்பது சிவபெருமான் வேடம் பூண்டு ஆடப்படும் ஆட்டங்களில் ஒன்று. சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக் கண்டு மனம் இரங்காமல் கைகொட்டியாடியபடியால் ‘கொடுகொட்டி’(கொடுங்கொட்டி) என்னும் பெயர் பெற்றது. கொட்டிச் சேதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு.[1] கொடுகொட்டி என்ற இசைக்கருவியும் உண்டு. சிவபெருமானுக்கு எட்டு கைகள் என்றும், ஒரு கையில் துடியையும், இரண்டு கையில் தோளில் மாட்டியுள்ள முழவையும் முழக்கிக்கொண்டு பல் வேறு உருவங்களைப் காட்டி அவன் நடனம் ஆடுவதாக ஒரு கற்பனை.
இந்தக் கற்பனையை விளக்கும் ஆட்டம் 'கொடுகொட்டி' ஆட்டம்.[2]

சிலப்பதிகாரம்[தொகு]

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினோரு வகை ஆடல்களில் கொடுகொட்டி எனற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

"பாரதி யாடிய பாரதி யரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம் பேவல் கேடப்
உமையவள் ஒருதிற னாக வோங்கிய
இமையவண் ஆடிய கொடுகொட்டி யாடல்"-[3]

கலித்தொகை[தொகு]

இந்த ஆடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு. இவ்வாடலில் உட்கு(அச்சம்), வியப்பு, விழைவு(விருப்பம்), பொலிவு(அழகு) என்னும் குறிப்புகள் அமைந்திருக்கும் என்று கூறும் செய்யுளை நச்சினார்கினியர் தமது கலித்தொகை உரையில் மேற்கோள் காட்டுகிறார்.

"கொட்டி யாடற் றோற்றம் ஒட்டிய
உமையவள் ஒருபா லாக ஒருபால்
இமையா நாட்டத்து இறைவன் ஆகி
அமையா உட்கும் வியப்பும் விழைவும்
பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க
அவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம்
பொலிய ஆடினன் என்ப"

என்பது அச்செய்யுள்.

இவற்றையும் காணவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகு கலைகள்
  2. படுபறைப் பல இயம்பம் பல் உருவம் பெயர்த்து நீ
    கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
    கொடிபுரை நுசும்பினாள் கொண்ட சீர் தருவாளோ - கலித்தொகை கடவுள் வாழ்த்து

  3. சிலம்பு கடலாடு காதை, 39-44
  • வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுகொட்டி_(ஆடல்)&oldid=3528078" இலிருந்து மீள்விக்கப்பட்டது