கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகநானூறு 179 மற்றும் 232 எண்களைக் கொண்ட இரண்டு பாடல்கள் மட்டும் இவரது பாடல்களாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் வெற்றுள்ளன. கொடிமங்கலம் என்பது இவர் ஊர். அந்த ஊரின் ஒரு பகுதி வாதுளி. சேந்தன் என்பது இவர் பெயர். ஆர் என்னும் பினொட்டும், நல் என்னும் முன்னொட்டும் இவரைச் சிறப்பிக்கும் வகையில் சேர்க்கப்பட்டவை. இவர் தம் பாடலில் சொல்லும் செய்திகள்:

புறம் 179[தொகு]

  • திணை - பாலை

தலைவன் தான் பொருள் தேடச் செல்லவிருப்பதைத் தோழியிடம் கூறுகிறான். தோழி பின்வருமாறு கூறி அவன் சொல்வதைத் தடுத்து நிறுத்துகிறாள்.

யானை வானத்தில் தன் கையை உயர்த்தி வணங்கி வாயைப் பிளந்து ஏங்கிப் பிளிறினாலும் மழை பொழியாத காட்டிலா செல்லப்போகிறாய்? போராடி மாண்ட வீரர்கள் நடுகல்லாய் நிற்கும் வழியிலா செல்லப்போகிறாய்? கொடுவில் ஆடவர் திரியும் வழியிலா செல்லப்போகிறாய்?

நீ சென்றுவிட்டால் இவள் வாயில் இன்னகையைக் காணமுடியுமா? குவளைமலர் கண்களும், மதியேர் முகமும் புலம்பாவா? (எனவே செலவைத் தவிர்க்க வேண்டும் - என்கிறாள்)

புறம் 232[தொகு]

  • திணை - குறிஞ்சி

கரும்பு வயலில் மேய்ந்துகொண்டிருந்த யானை வானத்தில் முழங்கிய இடியின் ஒலியைக் கேட்டுப் புலி உருமுவதாக எண்ணி மலைப் பிளவுகளில் தன் முழக்கமும் எதிரொலிக்கும்படி ஒலி எழுப்பிக்கொண்டு ஓடுவது போலத் தாய் முருகு அயர வேலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளாளாம்.

தலைவிக்காக வெளியில் காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தோழி இதனைக் கூறுகிறாள்.

குன்றத்துப் பாறையில் வேங்கைப்பூ சிதறிக் கிடப்பது போல மகளிர் குரவையாடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடக்குமாம்.