கொங்கு நாட்டின் புகழ்பெற்ற கால்நடைச் சந்தைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கு நாட்டின் கால்நடைச் சந்தைகள் (மாட்டுத்தாவணிகள்) மிகவும் புகழ் பெற்றவையாகும். கொங்கு நாட்டில் குறிப்பிட்ட சில ஊர்களில் தொன்றுதொட்டு வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் தேர் திருவிழாவில் வெளியூர்களிலிருந்து மாடுகள் கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு ஏதுவாகக் கால்நடைச் சந்தைகள் (மாட்டுத்தாவணிகள்) தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கால்நடைச் சந்தைகள் நடக்கின்றன - சித்திரையில் கண்ணபுரம், ஆனியில் அத்திக்கோம்பை (ஒட்டன்சத்திரம்), ஆடியில் தொப்பம்பட்டி (பழனி) மற்றும் அந்தியூர் ஆவணியில் கோபிசெட்டிப்பாளையம் போன்ற இடங்களில் கால்நடைச் சந்தைகள் கூடும்.

அத்திக்கோம்பை கால்நடைச் சந்தை[தொகு]

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்திக்கோம்பை உச்சிமகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் கால்நடைச் சந்தை (மாட்டுத்தாவணி) நடைபெறுவது உண்டு. இந்த மாட்டுச் சந்தை ஒரு வாரம் நடைபெறும். இந்த மாட்டுச் சந்தையில் பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வருவதுண்டு உழவுக்குப் பயன்படும் காளைகள், ரேக்ளா பந்தயக் காளைகள், ஜெர்சி இன பசு மாடுகள், குதிரைகள், ஆடுகள் எல்லாம் இங்கு விற்பனையாகின்றன. காளை மாடுகள் ரூபாய் 50000/- முதல் 130000/- வரை விலை போனதாம்.

அந்தியூர் கால்நடைச் சந்தை[தொகு]

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் புகழ் பெற்ற கால்நடைச் சந்தை (மாட்டுத்தாவணி) நடைபெறுவது உண்டு. கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் இந்தச் சந்தை ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தொடர்ந்து நடத்தப்படும். இந்தத் திருவிழாவில் அந்தியூரைச் சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, கோபி, பவானி, பர்கூர், ஜரத்தல் மட்டுமல்லாது கர்நாடகம், கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் கால்நடை வளர்ப்போர்கள் வந்து கலந்துகொள்கிறார்கள். இப்பகுதிகளிலிருந்து கறவை, உழவு, சிந்து, நாட்டு மாடுகள் விற்பனைக்கு வருவதுண்டு..

கண்ணபுரம் கால்நடைச் சந்தை[தொகு]

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே ஓலப் பாளையம், கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் புகழ் பெற்ற கால்நடைச் சந்தை (மாட்டுத்தாவணி) நடைபெறுவது உண்டு. கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் பூச்சாட்டுதலுடன் தொடங்கும். கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் இந்தச் சந்தை ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தொடர்ந்து நடத்தப்படும். ஒவ்வொரு வருடமும் காங்கயம் காளைகள், பசு மாடுகள் குதிரைகள் மற்றும் ஜமுனா பேரி ஆடுகளும் விற்பனைக்கு வருவதுண்டு.

கோபிசெட்டிபாளையம் கால்நடைச் சந்தை[தொகு]

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் புகழ் பெற்ற கால்நடைச் சந்தை (மாட்டுத்தவணி) நடைபெறுவது உண்டு. இந்தச் சந்தை ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தொடர்ந்து நடத்தப்படும். கோபிச்செட்டிபாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கறவை, உழவு, சிந்து, நாட்டு மாடுகள் விற்பனைக்கு வருவதுண்டு.

தொப்பம்பட்டி கால்நடைச் சந்தை[தொகு]

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள தொப்பம்பட்டி அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கால்நடைச் சந்தை (மாட்டுத்தாவணி) நடைபெறுவது உண்டு. இந்தச் சந்தை ஐந்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்படும். காங்கயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, உடுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிகளவில் கால்நடைகள் வருவதுண்டு. இங்கு இரண்டு லட்சம் ரூபாய் விலையில் காங்கயம் காளைகள் விற்கப்பட்டதாகத் தெரிகிறது.

படக் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. அத்திக்கோம்பை மாட்டுத்தாவணியில் ஒரு ஜோடி காளை விலை ரூ.1.30 லட்சம்
  2. அந்தியூர் சந்தையில் மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனை[தொடர்பிழந்த இணைப்பு]
  3. கண்ணபுரம் மாட்டு சந்தை களைகட்டியது : மாடு, குதிரை, ஆடுகள் வரத்து அதிகரிப்பு
  4. தொப்பம்பட்டி மாட்டுத்தாவணி
  5. பட்டி நோன்பு