கொங்கணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொங்கண சித்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொங்கணர்
கொங்கண சித்தர்
பதவிசித்தர்
சுய தரவுகள்
பிறப்பு
இறப்பு
சமயம்இந்து
பெற்றோர்
Era9 ஆம் நூற்றாண்டு
உட்குழுசைவ சமயம்
சைவ சித்தாந்தம்
Creedசைவ சித்தாந்தம்
கோயில்ஊதியூர்
பதவிகள்
Teacherபோகர்
Literary worksKonganar Mukkaandam (3000 songs), Mukkaanda Suthiram, Vaippu Nool, Patchini, Sarakku Vaippu 100, Navakiraga Kakisham, Konganar Vakkiyam 10, Suthiram 13, Konganar 40, Konganar 8, Konganar Thitchavithi

கொங்கண சித்தர் ("Koṅgaṇar Siddhar")[1] அல்லது கொங்கணர் அல்லது கொங்கணவர் பதினெண் சித்தர்களுள் முக்கியமான சித்தராகக் கருதப்படுபவர்.

எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண் பிரதேசத்தில் புளிஞர் குடியில் கொங்கணச் சித்தர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த முருகன் மற்றும் அம்பிகை பக்தர் ஆவார். முருகனை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். முருகப்பெருமான் பழனியம்பதியில் ஆண்டி கோலத்தில் நின்று தரிசனம் தருகிறார். முருகப்பெருமான் பழனியை விட்டு திருவிளையாடல் புரியும் பொருட்டு அளவாய் மலை சென்று அங்கு சித்தர்கள் சேர்த்து வைத்த பொன் மலையை தூக்கி வந்து வைகை பொன்மலை என்ற இடத்தில் வைத்ததாக அளவாய் மலை தல வரலாறு கூறுகிறது முருகன் பழனியை விட்டு இடம்பெயர்ந்ததை ஞான திருஷ்டியால் அறிந்த போகர் புதிய மூலவராக நவபாஷாணத்தால் ஆன தண்டாயுதபாணியை வடித்தெடுத்தார். தனது சீடரான கொங்கணரை அழைத்து அளவாய் மலை சென்று முருகனின் திருவிளையாடலை நேரில் சென்று அறிந்து வரபணித்தார். அதை ஏற்று கொங்கணரும் பழனியில் இருந்து அளவாய் மலை வந்து நடந்ததை அறிந்து கொண்டு சிறிது காலம் தவம் புரிந்தார். பிறகு அங்கிருந்து வைகை பொன்மலை என்ற குன்றுதோறாடல் தலத்தை அடைந்து அங்குள்ள குகையில் சுமார் 300 வருடங்கள் தவம் புரிந்து முருகன் தரிசனம் கண்டதாக குறிப்புகள் கூறுகின்றன. அங்கிருந்து ஊதியூர் மற்றும் பழனி வந்து போகரை கண்டு அளவளாவி இருந்தார். மறுபடியும் பயணம் மேற்கொண்ட அவர் இறுதியில் திருப்பதி திருமலையில் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்[2]திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலையில் கொங்கண சித்தர் தவபீடம் உள்ளது. இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றாகும். கொங்கணச் சித்தர் தமிழ்நாட்டிலுள்ள பல தலங்களிலும் சென்று தவம் செய்ததாகவும் இறுதியில் திருப்பதியில் ஜீவசமாதியானதாகவும் தகவல்கள் உள்ளன. அவர் தங்கியிருந்த மற்ற இடங்களில் முக்கியமானவை வையப்பமலை, அலவாய்மலை, சங்ககிரி ஆகியவையாகும்

இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் என்பாருமுண்டு.

கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர்பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர்.[3]

அரச வம்சம்[தொகு]

கொங்கனர் அடிப்படையில் ஒரு இளவரசர் கொங்குநாட்டில் மகராஜன் எனும் மன்னனின் ஒரே மகனாவார். தனது 16வது வயதிலேயே காடுகளை வலம் வரவேண்டும் என்ற ஆசையை தனது தந்தையிடம் முறையிட அவரும் ஏற்பாடு செய்தார். அந்தப் பயணத்திற்கு பெயர் பூவலம் என்று குறிப்பிடுவர்.

மலை சார்ந்த காடுகளைச் சுற்றி வந்த இளவரசர், தனது கண்களில் படும் பறவை விலங்கு செடி கொடிகள் அனைத்தையும் தனது வாளினால் வெட்டி வீசி எறிந்து கொண்டே வந்து சேர்ந்த மலைதான் ஊதியூர் மலை.[4]

திருவள்ளுவரின் சீடர்[தொகு]

கொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனேகொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். அஞ்சிய கொங்கணர் வாசுகியைப் பணிந்தார். பின்னர் திருவள்ளுவர் சீடரானார்.[5]

கொங்கணர் நூல்கள்[தொகு]

கொங்கணர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

நூல்கள்[தொகு]

  • தனிக்குணம் 200
  • வாத சூத்திரம் 200
  • வாத காவியம் 3000
  • வைத்தியம் 200
  • சரக்கு வைப்பு 200
  • முக்காண்டங்கள் 1500
  • தண்டகம் 120
  • ஞான வெண்பா 49
  • ஞான முக்காண்ட சூத்திரம் 80
  • கற்ப சூத்திரம் 100
  • உற்பக்தி ஞானம் 21
  • முதற்காண்ட சூத்திரம் 50
  • வாலைக்கும்மி 100
  • ஆதியந்த சூத்திரம் 45
  • நடுக்காண்ட சூத்திரம் 50
  • முப்பு சூத்திரம் 40
  • ஞான சைதண்யம்109
  • கடைக்காண்ட சூத்திரம் 50
  • கொங்கணர் கற்ப உற்பத்தி
  • கொங்கணர் நடு காண்ட சூத்திரம்-50
  • கொங்கணர் சூத்திரம்-15
  • கொங்கணர் சூத்திரம்-50
  • கொங்கணர் 2,3 காண்டம்
  • கொங்கணர் ஆதி சூத்திரம்
  • கொங்கணர் பிரம்மானந்தம்
  • கொங்கணர் ஞான நூல்
  • கொங்கணர் ஞானம்
  • கொங்கணர் கடை காண்டம்
  • கொங்கணர் கடை காண்டம்- 2
  • கொங்கணர் கடை காண்டம்-40
  • கொங்கனார் கடைக் காண்ட சூத்திரம்
  • கொங்கணர் கலைக்கியான சூத்திரம்
  • கொங்கணர் கற்ப கோள்
  • கொங்கணர் கற்ப முறைகள்
  • கொங்கணர் கற்ப சூத்திரம்
  • கொங்கணர் கற்ப உற்பத்தி
  • கொங்கணர் கற்பம்
  • கொங்கணர் மூன்றாம் காண்டம்
  • கொங்கணர் முக்காண்டம்
  • கொங்கணர் முப்பு சுருக்கம்
  • கொங்கணர் முதல் காண்டம்-500
  • கொங்கணர் 1-ஆம் காண்டம்-40
  • கொங்கணர் 1-ஆம் காண்டம்-41
  • கொங்கணர் நடு காண்டம்
  • கொங்கணர் பட்சணி
  • கொங்கணர் பிற காண்டம்
  • கொங்கணர் சரக்கு வைப்பு
  • கொங்கணர் சரக்கு வைப்பு முறை
  • கொங்கணர் செந்தூரம்
  • கொங்கணர் சித்தர் நூல்
  • கொங்கணர் சித்து – 12
  • கொங்கணர் சூத்திரம்
  • கொங்கணர் சூத்திரம் 27-இல் இருந்து
  • கொங்கணர் சூத்திரம்-40
  • கொங்கணர் முதல் காண்டம்-41
  • கொங்கணர் சூத்திரம்-15
  • கொங்கணர் சூத்திரம்-27
  • கொங்கணர் சூத்திரம்-40
  • கொங்கணர் சூத்திரம்-50
  • கொங்கணர் சூத்திரம்-500
  • கொங்கணர் சூத்திரம்-60
  • கொங்கணர் தாண்டகம் சுருக்கம்
  • கொங்கணர் துரிய ஞானம்-15
  • கொங்கணர் உற்பத்தி லயம்-21
  • கொங்கணர் வாக்கியம் முதல் காண்டம்
  • கொங்கணர் -16
  • கொங்கணர் -30
  • கொங்கணர் பாடல்கள்
  • கொங்கணர் வேதாந்த சூத்திரம்
  • கொங்கணர் வைத்திய நூல்

கொங்கணச் சித்தர் வாலைக் கும்மி[6][தொகு]

இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் "வாலைக் கும்மி" என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின் பெயர். கன்னி என்றும் பொருள். கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது.

இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

விநாயகர் துதி[தொகு]

கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற

செல்வியின் மேற் கும்மிதனைச் செப்புதற்கே - நல்விசய

நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச

பாதம் வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.

கும்மி[தொகு]

சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த

உத்தமி மேற் கும்மிப் பாட்டுரைக்க

வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை

சித்தி விநாயகன் காப்பாமே.

சரஸ்வதி துதி[தொகு]

சித்தர்கள் போற்றிய வாலைப் பெண் ணாமந்த

சத்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்

தத்தமி தோமென ஆடுஞ் சரஸ்வதி

பத்தினி பொற்பதங் காப்பாமே.

சிவபெருமான் துதி[தொகு]

எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்

தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்

கங்கை யணிசிவ சம்புவாஞ் சற்குரு

பங்கயப் பொற்பதங் காப்பாமே.

சுப்பிரமணியர் துதி[தொகு]

ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி

வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு

மானைப் பெண் ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்

மால்முரு கேசனுங் காப்பாமே.

விஷ்ணு துதி[தொகு]

ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை

அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்

காண்டீப னாம்பணி பூண்டவன் வைகுந்தம்

ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.

நந்தீசர் துதி[தொகு]

அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த

அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்

சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்

நந்தீசர் பொற்பதங் காப்பாமே.

நூல்[தொகு]

தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய

வல்லவள் வாலைப் பெண் மீதினிலே

சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்

தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே!

மாதா பிதாகூட இல்லாம லேவெளி

மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று

பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று

புகுந்தா ளிந்தப் புவியடக்கம்

வேதமும் பூதமுண் டானது வும்வெளி

விஞ்ஞான சாத்திர மானதுவும்

நாதமுங் கீதமுண் டானது வும்வழி

நான் சொல்லக் கேளடி வாலைப் பெண்ணே!

முந்தச் செகங்களுண் டானது வும்முதல்

தெய்வமுந் தேவருண் டானதுவும்

விந்தையாய் வாலையுண் டானது வும்ஞான

விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!

அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்

அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்

தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி

பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.

ஆதியி லைத்தெழுத் தாயினாள் வாலைப்பெண்

ஐந்தெழுத் துமென்று பேரானாள்

நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல

ஞான வகையிவள் தானானாள்.

ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்

ஓமென் றெழுத்தே யுயிராச்சு

ஆமிந் தெழுத்தை யறிந்துகொண் டுவிளை

யாடிக் கும்மி யடியுங்கடி.

செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்

சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்

உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும்

உற்பன மானது மஞ்செழுத்தாம்.

சாத்திரம் பார்த்தாலுந் தானுமென்ன வேதந்

தானுமே பார்த்திருந் தாலுமென்ன?

சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு

சொல்லை யறிந்தல்லோ காணவேணும்

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்

காரிய மில்லையென் றேநினைத்தால்

காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்

காரிய முண்டு தியானஞ் செய்தால்.

ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி

வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே

வாயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயிந்த

வாலையு மைந்தா மெழுத்துக்குள்ளே.

அஞ்செழுத் தானதும் எட்டெழுத் தாம்பின்னும்

ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு

நெஞ்செழுத் தாலே நினையா மலந்த

நிசந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே

ஏய்க்கு தேய்க்கு தஞ்செழுத் துவகை

எட்டிப் பிடித்துக் கொளிரண்டெழுத்தை

நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி

நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே!

சிதம்பர சக்கரந் தானறி வாரிந்தச்

சீமையி லுள்ள பெரியோர்கள்

சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே

தெய்வத்தை யல்லோ அறியவேணும்.

மனமு மதியு மில்லாவி டில்வழி

மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்

மனமு றுதியும் வைக்கவே ணும் பின்னும்

வாலை கிருபையுண் டாகவேணும்.

இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்

தீமட்டு திந்த வரி விழிக்கே

கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்

கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.

ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை

உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே;

பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்

பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்

வைத்த விளக்கும் எரியுதடி;

அச்சுள்ள விளக்கு வாலையடிஅவி

யாம லெரியுது வாலைப் பெண்ணே!

எரியு தேஅறு வீட்டினி லேயதில்

எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை;

தெரியுது போக வழியுமில் லைபாதை

சிக்குது சிக்குது வாலைப் பெண்ணே!

சிலம்பொ லியென்னக் கேட்டுமடிமெத்த

சிக்குள்ள பாதை துடுக்கமடி;

வலம்புரி யச்சங்க மூது மடிமேலே

வாசியைப் பாரடி வாலைப் பெண்ணே!

வாசிப் பழக்க மறியவே ணுமற்று

மண்டல வீடுகள் கட்டவேணும்;

நாசி வழிக்கொண்டு யோகமம் வாசியும்

நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே!

முச்சுட ரான விளக்கினுள் ளேமூல

மண்டல வாசி வழக்கத்திலே

எச்சுடராகி யந்தச் சுடர்வாலை

இவள் விட வேறில்லை வாலைப் பெண்ணே!

சூடாமல் வாலை யிருக்கிற தும்பரி

சித்த சிவனுக்குள் ளானதால்

வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்

மேல்வீடு காணலாம் வாலைப் பெண்ணே!

மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்

விளக்கில் நின்றவன் வாணியடி

தாய்வீடு கண்டவன் ஞானியடிபரி

தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.

அத்தியி லேகரம் பத்தியி லேமனம்

புத்தியி லேநடு மத்தியிலே

நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்

நிலைமையைப் பாரடி வாலைப் பெண்ணே!

அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்

வழுத்தி னேன்ஞானப் பழத்திலே

கழுத்தி லேமயேஸ் வரனு முண்டுகண்

கண்டு பாரடி வாலைப் பெண்ணே!

அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம்

கொஞ்சி விளையாடும் வஞ்சியரே!

நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்

நேருட னாமடி வாலைப் பெண்ணே!

தொந்தியி லேநடுப் பந்தியி லேதிடச்

சிந்தையிலே முந்தி யுன்றனுடன்

உந்தியில் விண்ணுவுந் தாமிருப் பாரிதை

உண்மையாய்ப் பாரடி வாலைப் பெண்ணே!

ஆலத்தி லேயிந்த ஞாலத்தி லேவருங்

காலத்தி லேயனு கூலத்திலே

மூலத்தி லேப்ரமன் தானிருந் துவாசி

முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.

தேருமுண்டு ஐந்நூறும் ஆணியுண் டேஅதில்

தேவரு முண்டுசங் கீதமுண்டே

ஆருண்டு பாரடி வாலைத் தெய் வம்மதில்

அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!

ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்

உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்;

அன்புட னேபரி காரர்க ளாறுபேர்

அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!

இந்த விதத்திலே தேகத்தி லேதெய்வம்

இருக்கையில் புத்திக்க றிக்கையினால்

சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்

சாகிறதேதடி வாலைப் பெண்ணே!

நகார திட்டிப்பே ஆன தினால் வீடு

வான வகார நயமாச்சு;

உகார முச்சி சிரசாச் சேஇதை

உற்றுப் பாரடி வாலைப் பெண்ணே!

வகார மானதே ஓசையாச் சேஅந்த

மகார மானது கர்ப்பமாச்சே;

சிகார மானது மாய்கையாச் சேஇதைத்

தெளிந்து பாரடி வாலைப் பெண்ணே!

ஓமென்ற அட்சரந் தானுமுண் டதற்குள்

ஊமை யெழுத்து மிருக்குதடி;

நாமிந்தெ ழுத்தை யறிந்து கொண் டோம்வினை

நாடிப் பாரடி வாலைப் பெண்ணே!

கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை

வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்

எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய

மென்றைக்கி ருக்குமோ வாலைப் பெண்ணே!

இருந்த மார்க்கமாய்த் தானிருந்து வாசி

ஏற்காம லேதான டக்கவேணும்;

திரிந்தே ஓடி யலைந்துவெந் துதேகம்

இறந்து போச்சுதே வாலைப் பெண்ணே!

பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்

பூவில்லாப் பிஞ்சும் அனேகமுண்டு

மூத்த மகனாலே வாழ்வுமுண் டுமற்ற

மூன்றுபே ராலே அழிவுமுண்டு!

கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற

கற்பை யளித்தவ ரேவாழ்க!

சிற்பர னைப்போற்றிக் கும்மிய டிகுரு

தற்பர னைப்போற்றிக் கும்மியடி.

அஞ்சி னிலேரண்டழிந்ததில் லையஞ்

சாறிலே யுநாலொ ழிந்ததில்லை;

பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது

பேணிப் போடலாம் வாலைப் பெண்ணே!

கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட் டானிரு

காலில்லா நெட்டையன் முட்டிக் கிட்டான்;

ஈயில்லாத் தேனெடுத் துண்டுவிட் டானது

இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!

மேலூரு கோட்டைக்கே ஆதர வாய்நன்றாய்

விளங்கு கன்னனூர்ப் பாதையிலே

காலூரு வம்பலம் விட்டத னாலது

கடுந டையடி வாலைப் பெண்ணே!

தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில்

தொத்திக் கொடிமரம் நாட்டையிலே

சண்டைசெய் துவந்தே ஓடிப்போ னாள்கோட்டை

வெந்து தணலாச்சு வாலைப் பெண்ணே!

ஆசை வலைக்குள் அகப்பட்ட தும்வீட

அப்போதே வெந்தே அழிந்திட்டதும்

பாச வலைவந்து மூடிய தும்வாலை

பாதத்தைப் போற்றடி வாலைப் பெண்ணே!

அன்ன மிருக்குது மண்டபத் தில்விளை

யாடித் திரிந்ததே ஆண்புலியும்

இன்ன மிருக்குமே யஞ்சுகி ளியவை

எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி;

தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது

மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்

ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தை

இருந்து விழிப்பது பாருங்கடி.

மீனு மிருக்குது தூரணி யிலிதை

மேய்ந்து திரியுங் கலசா வல்;

தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்

தெவிட்டு தில்லையே வாலைப் பெண்ணே!

காகமிருக்குது கொம்பிலே தான்கத

சாவ லிருக்குது தெம்பிலேதான்;

பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்

பார்த்ததால் தெரியுமே வாலைப் பெண்ணே!

கும்பிக் குளத்திலே யம்பல மாமந்தக்

குளக்க ருவூரில் சேறு மெத்த;

தெம்பி லிடைக்காட்டுப் பாதைக ளாய் வந்து

சேர்ந் தாராய்ந்துபார் வாலைப் பெண்ணே!

பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரண்டு

கெண்டை யிருந்து பகட்டுதடி;

கண்டிருந் துமந்தக் காக்கையு மேயஞ்சி

கழுகு கொன்றது பாருங்கடி!

ஆற்றிலே யஞ்சு முதலைய டியரும்

புற்றிலே ரண்டு கரடியடி;

கூற்றனு மூன்று குருடன டிபாசங்

கொண்டு பிடிக்கிறான் வாலைப் பெண்ணே!

முட்டை யிடுகு தொருபற வைமுட்டை

மோசம் பண்ணு தொருபறவை;

வட்டமிட் டாரூர் கண் ணியிலி ரண்டு

மானுந் தவிக்குது வாலைப் பெண்ணே!

அட்டமா வின்வட்டம் பொட்டலி லேரண்டு

அம்புலி நிற்குது தேர்மேலே;

திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்

செந்தண லானதே வாலைப் பெண்ணே!

முக்கோண வட்டக் கிணற்றுக்குள் ளேமூல

மண்டல வாசிப் பழக்கத்திலே

அக்கோண வட்டச் சக்கரத் தில்வாலை

அமர்ந்தி ருக்கிறாள் வாலைப் பெண்ணே!

இரண்டு காலாலொரு கோபுர மாம்நெடு

நாளா யிருந்தே அமிழ்ந்து போகும்;

கண்டபோ துகோபு ரமிருக் கும்வாலை

காணவு மெட்டாள் நிலைக்கவொட்டாள்.

அஞ்சு பூதத்தை யுண்டுபண் ணிக் கூட்டில்

ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக்

கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை

கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.

காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை

ஆலகா லவிட முண்டவளாம்;

மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த

மானுடன் கோட்டை இடித்தவளாம்.

மாதாவாய் வந்தே அமுதந்தந் தாள்மனை

யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்

ஆதர வாகிய தங்கையா னாள்நமக்

காசைக் கொழுந்தியு மாமியானாள்.

சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை

செங்காட்டுச் செட்டியைத்தா னுதைத்தாள்;

ஒருத்தியாகவே சூரர்த மைவென்றாள்

ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.

இப்படி யல்லோ இவள் தொழி லாமிந்த

ஈனா மலடி கொடுஞ்சூலி;

மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த

வயசு வாலை திரிசூலி.

கத்தி பெரியதோ யுறைபெரி தோவிவள்

கண்ணு பெரிதோ முகம் பெரிதோ?

சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்

சற்றே சொல்லடி வாலைப் பெண்ணே!

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல

அப்படி வாலை பெரிதானால்

பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல

பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி

மாமிச மானா லெலும்புமுண் டுசதை

வாங்கி ஓடு கழன்றுவிடும்;

ஆமிச மிப்படிச் சத்தியென் றேவிளை

யாடிக் கும்மி அடியுங்கடி.

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்

விண்டுமி போனால் விளையாதென்று

கண்டுகொண் டுமுன்னே அவ்வைசொன் னாளது

வுண்டோ வில்லையோ வாலைப் பெண்ணே!

மண்ணுமில் லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்

வாசமில் லாமலே பூவுமில்லை;

பெண்ணுமில்லாமலே யாணுமில் லையிது

பேணிப்பாரடி வாலைப் பெண்ணே!

நந்தவனத்திலே சோதியுண் டுநிலம்

நித்திய பேருக்கு நெல்லுமுண்டு;

விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்

விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே!

வாலையைப் பூசிக்கச் சித்தரா னார்வாலைக்

கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்;

வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத் தாரிந்த

விதந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே!

வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங்

காப்பது சேலைக்கு மேலுமில்லை;

பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக்

கும்மிக்கு மேலான பாடலில்லை.

நாட்டத்தை கண்டா லறியலா குமந்த

நாலாறு வாசல் கடக்கலாகும்;

பூட்டைக் கதவைத் திறக்கலா கும்இது

பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!

ஆணும்பெண் ணும்கூடி யானதனாற் பிள்ளை

ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்;

ஆணும்பெண் ணுங்கூடி யானதல் லோபேதம்

அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே!

இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே

என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே;

அன்றைக் கெழுத்தின் படிமுடி யும்வாலை

ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே!

வீணாசை கொண்டு திரியா தேயிது

மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு

காணாத வாலையைக் கண்டுகொண் டாற்காட்சி

காணலா மாகாய மாளலாமே.

பெண்டாட்டி யாவதும் பொய்யல்ல வோபெற்ற

பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?

கொண்டாட்ட மான தகப்பன்பொய் யேமுலை

கொடுத்த தாயும் நிசமாமோ?

தாயும் பெண் டாட்டியுந் தான்சரி யேதன்யம்

தாமே யிருவருந் தாங்கொடுத்தார்;

காயும் பழமுஞ் சரியா மோஉன்றன்

கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே!

பெண்டாட்டி மந்தைமட்டும்வரு வாள்பெற்ற

பிள்ளை மசானக் கரையின் மட்டும்;

தெண்டாட்டுத் தர்மம் நடுவினி லேவந்து

சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்.

பாக்கிய மும்மகள் போக்கிய மும்ராச

போக்கிய மும்வந்த தானாக்கால்

சீக்கிரந் தருமஞ் செய்யவேண் டுங்கொஞ்சத்

திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.

திருப்பணி களைமு டித்தோ ருஞ்செத்துஞ்

சாகாத பேரி லொருவரென்றும்

அருட்பொ லிந்திடும் வேதத்தி லேயவை

அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே!

மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்

மெல்லிய ரோடு சிரிக்கும்போது

யுத்தகா லன்வந்து தான்பிடித் தால்நாமும்

செத்த சவமடி வாலைப் பெண்ணே!

ஏழை பனாதிக ளில்லையென் றாலவர்க்

கிருந்தா லன்னங கொடுக்க வேண்டும்;

நாளையென் றுசொல்ல லாகா தேயென்று

நான்மறை வேத முழங்குதடி.

பஞ்சை பனாதி யடியாதே யந்தப்

பாவந் தொலைய முடியாதே;

தஞ்சமென் றோரைக் கெடுக்கா தேயார்க்கும்

வஞ்சனை செய்ய நினையாதே.

கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்

காணாத வுத்தரம் விள்ளாதே;

பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற

பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.

சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில

சீர்புல ஞானப் பெரியோரை

மவுன மாகவும் வையா தேயவர்

மனத்தை நோகவும் செய்யாதே.

வழக்க ழிவுகள் சொல்லா தேகற்பு

மங்கையர் மேல்மனம் வையாதே;

பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை

பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!

கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்

கொலைக ளவுகள் செய்யாதே

ஆடிய பாம்பை யடியா தேயிது

அறிவு தானடி வாலைப் பெண்ணே!

காரிய னாகினும் வீரியம் பேசவும்

காணா தென்றவ்வை சொன்னாளே;

பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப்

பழம்போ லுதிர்ந்து விழுந்தானே.

காசார் கள்பகை செய்யா தேநடுக்

காட்டுப் புலிமுன்னே நில்லாதே;

தேசாந்த ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்

தேவடி யாள்தனம் பண்ணாதே.

தன்வீ டிருக்க அசல்வீடு போகாதே

தாயார் தகப்பனை வையாதே;

உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்

ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே!

சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்

தானென் றொருவுடல் பேதமுண்டோ?

ஓதிய பாலதி லொன்றாகி யதிலே

உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.

பாலோடு முண்டிடு பூனையு முண்டது

மேலாக காணவுங் காண்பதில்லை;

மேலந்த வாசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்

வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.

கோழிக் கறுகாலுண் டென்றுசொன் னேன்கிழக்

கூனிக்கு மூன்றுகா லென்று சொன்னேன்;

கூனிக்கி ரண்டெழுத் தென்றுசொன் னேன்முழுப்

பானைக்கு வாயில்லை யென்று சொன்னேன்.

ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேனம்

மானைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்

மாட்டுக்குக் காலில்லை யென்றுசொன் னேன் கதை

வகையைச் சொல்லடி வாலைப் பெண்ணே!

கோயிலு மாடும் பறித்தவ னுங்கன்றிக்

கூற்று மேகற் றிருந்தவனும்

வாயில்லாக் குதிரை கண்டவ னுமாட்டு

வகைதெ ரியுமோ வாலைப் பெண்ணே!

இத்தனை சாத்திரந் தாம்படித் தோர்செத்தார்

என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்;

செத்துப்போய்க் கூடக் கலக்கவேண்டு மவன்

தேவர்க ளுடனே சேரவேண்டும்.

உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்

உண்டோ உலகத்தி லவ்வைசொன்னாள்;

அற்றது பொருந்து முற்றது சொன்னவன்

அவனே குருவடி வாலைப் பெண்ணே!

பூரண நிற்கும் நிலையறி யான்வெகு

பொய்சொல்வான் கோடிமந் திரஞ்சொல்வான்

காரண குருஅ வனுமல் லவிவன்

காரிய குருபொ ருள்பறிப்பான்.

எல்லா மறிந்தவ ரென்றுசொல் லயிந்தப்

பூமியி லேமுழு ஞானியென்று

உல்லாச மாக வயிறு பிழைக்கவே

ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே!

ஆதிவா லைபெரிதானா லும்அவள்

அக்காள் பெரிதோ சிவன்பெரிதோ!

நாதிவா லைபெரி தானா லும்அவள்

நாயக னல்ல சிவம்பெரிது.

ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்

அண்டாது மற்ற வியாதியெல்லாம்

பேயும் பறந்திடும் பில்லிவினாடியில்

பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்.

நித்திரை தன்னிலும் வீற்றிருப் பாளெந்த

நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்;

சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை

உற்றகா லனையுந் தானுதைப்பாள்.

பல்லாயி ரங்கோடி யண்டமு தல்பதி

னான்கு புவனமும் மூர்த்திமுதல்

எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை

எள்ளுக்கு ளெண்ணெய்போல் நின்றவளாம்.

தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் மித்தமிழ்

செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்

நேசவான் வீரப் பெருமாள் குருசாமி

நீள் பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.

ஆறு படைப்புகள் வீடு கடைசூத்ர

அஞ்செழுத் துக்கும் வகையறிந்து

கூறு முயர்வல வேந்த்ரன் துரைவள்ளல்

கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி!

ஆடுங்கள் பெண்டுக ளெல்லோ ருமந்த

அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்

பாடுங்கள் சித்தர்க ளெல்லோ ரும்வாலை

பரத்தைப் போற்றிக்கொண் டாடுங்கடி

சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி

தேவர்கள் வாழி ரிஷிவாழி

பத்தர்கள் வாழி பதம்வா ழிகுரு

பாரதி வாலைப்பெண் வாழியவே!

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • வையப்பமலை
  • அளவாய் மலை

மேற்கோள்கள்[தொகு]

  1. pksak_admin. "கொங்கணவர்". Pallikaranai Adhi Parasakthi. பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
  2. "திருமலை பெருமாளின் பாதத்தின் கீழ் ஜீவசமாதி பெற்ற கொங்கண சித்தர் – Kongana Siddhar – Divine World" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  3. Team, shakthionline. "கொங்கணருக்கு பெயர் சூட்டிய சித்தர் பிரான்". shakthionline. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  4. "கொங்கண சித்தர் | கொங்கணர் Konganar Siddhar Thirupathi - Neerodai". நீரோடை (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-09-25. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  5. Staranandram (2020-09-11). "கொங்கணர் சித்தரின் சூட்சுமங்கள்". Dr.Star Anand Ram (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  6. "கொங்கணச் சித்தர் | சித்தர் பாடல்கள் | kongana Couplet Siddhar Couplet Tamil::https://www.ytamizh.com/". www.ytamizh.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கணர்&oldid=3789495" இலிருந்து மீள்விக்கப்பட்டது