உள்ளடக்கத்துக்குச் செல்

கைவல்ய நவநீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைவல்ய நவநீதம் [1] என்பது ஒரு வேதாந்த மெய்யியல் தமிழ் நூல் ஆகும். தமிழ் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்ய நவநீதம் எனப்படுகிறது. இந்த நூல் 1500 களில் எழுதப்பட்டது.[2] இந்த நூலை நன்னிலம் நாராயண தேசிகரின் மாணவர் அருள் திரு தாண்டவராயர் இயற்றினார். இந்நூலில் சில நல்லாசியருக்கும், நன்மாணவனுக்கும் இடையே நிகழும் உரையாடலாகவும், ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவது போலவும் எழுதப்பட்டுள்ளது. தத்துவ விளக்கப்படலம், சந்தேகம் தெளிதற் படலம் என்று இரு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[3]

நூலின் சிறப்பு

[தொகு]

இந்நூல் பாயிரம் 7, தத்துவ விளக்கப்படலம் 101, சந்தேகம் தெளிதற் படலம் 185 ஆக மொத்தம் 293 பாடல்கள் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் எழுசீர் ஆசிரியவிருத்தம் பத்து பாடல்கள் (231-240), எண்சீர் ஆசிரியவிருத்தம் பதினொன்று பாடல்கள் (123-133), அறுசீர் ஆசிரியவிருத்தம் 172 பாடல்கள் உள்ளன.[4]

கைவல்ய நவநீதத்திற்கு தமிழில் பலர் விரிவுரை எழுதி இருந்தாலும், பிறையாறு ஸ்ரீ அருணாசல சுவாமிகள், ஈசூர் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் சிதம்பரம் ஸ்ரீ பொன்னம்பல ஞானதேசிகர் (தத்துவார்த்த தீபம்) ஆகியோரது உரைகளே மிக பழமையானது, காலத்தால் முற்பட்டது, கருத்தாழத்தால் மேம்பட்டது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மஹாவித்வான் வடிவேலு செட்டியார், வினா விடை அமைப்பில், கைவல்ய நவநீதத்திற்கு விளக்க உரை எழுதிப் பதிப்பித்தார். 1933ல், ப்ருஹ்மஸ்ரீ திருமாநிலையூர் கோவிந்தய்யர் 'தாத்பர்ய தீபிகை' என்னும் உரையை எழுதி, தமிழ் மூலத்துடன், சங்கு கவிகளின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பையும், தன் உரையையும் ஒருங்கே பதிப்பித்தார். இந்த நூல் தமிழிலிருந்து திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1855 இல் டாக்டர் கார்ல்க்ரோல் என்ற ஜெர்மானியரால் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.[5]

கைவல்யனவனீதத்திர்க்கு ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு் வந்துள்ளது. அதன் பெயரும்ʼ கைவல்யனவனீதம் என்றே ஆகும். ஶங்குகவி இதை இயற்றியிருக்கிறார். இம்மொழிப்பெயர்ப்பு , கிருஷ்ணப்ரியா[6] என்ற விளக்கவுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.https://www.academia.edu/45223632/Introduction_to_Kaivalyanavan%C4%ABtam_of_%C5%9Aa%C5%84kukavi_Edited_with_%E0%A4%95%E0%A5%83%E0%A4%B7_%E0%A4%A3%E0%A4%AA_%E0%A4%B0%E0%A4%BF%E0%A4%AF%E0%A4%BE_commentary_

கைவல்ய நவநீதத்திற்கான ஆங்கில உரைகளில், சுவாமி ஸ்ரீ ரமணானந்த சரஸ்வதிகளின் ஆங்கில உரை மேலானதாகக் கருதப்படுகின்றது. கைவல்ய நவநீதம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியால் சாதகர்க்குப் பரிந்துரைக்கப் பெற்றது. பாராயணத்துக்கான கைவல்ய நவநீதம் மூலமும், சிவ. தீனநாதனால் செய்யப்பட்ட உரைச்சுருக்கமும், ஸ்ரீ ரமணாச்ரமம் வெளியீடாகப் பதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ முனகல வெங்கடராமையாவின் ஆங்கில மொழிபெயர்ப்பும், அதிலிருந்து செய்யப்பட்ட தெலுங்கு மொழிபெயர்ப்பும் பதிப்பிடப்பட்டுள்ளன.

நூல் தரும் சில செய்திகள்

[தொகு]
  • பாயிரப் பகுதியிலுள்ள 7 பாடல்களில் இந்த நூலாசிரியர் இறைவனை ஏகநாயகன், பூன்ற [7] முத்தன், இன்பப் புணரியாதவன்,[8] விமல போத சொரூபம்,[9] என்றெல்லாம் குறிப்பிடுகிறார். அவர் அருளால் தான் பிரம சுபாவம் ஆனதாகக் குறிப்பிடுகிறார்.[10] என் மனம், புத்தி, புலன் ஆகியவற்றை என் அறிவினால் இயக்கும்போது ஈசன் என் குருவாய்த் தோன்றுகிறான். பற்று, வீடு இரண்டையும் காட்டும் வேள் அவன். வேதாந்தப் பாற்கடலைக் குரவர்கள்( ஆசிரியர்கள்) குடத்தில் மொண்டு குடத்தில் நிறைத்து வைத்ததைக் கடைந்து வெண்ணெய் ஆக்கித் தருகிறேன். பசித்தோர் உண்ணுக என தாண்டவராய சுவாமிகள் கூறியுள்ளார்.
  • கைவல்ய நவநீதத்தை படிக்கும் யாவரும் எளிதில் புரிந்து கொள்வதற்காக, வித்வான் எம். நாராயண வேலுப்பிள்ளை தத்துவக்கோட்பாடு என்ற விளக்கக் கட்டுரையை எழுதியுள்ளார்.
  • "புதுமையாம் கதை கேள்" (தத்துவ விளக்கப் படலம் பாடல்-61) என்று பத்து நபர்கள் ஒரு ஆற்றைக் கடந்து அக்கரை சேர்ந்து அனைவரும் ஆற்றைக் கடந்ததை உறுதி செய்து கொள்ள ஒவ்வொருவராக எண்ணி தன்னைச் சேர்க்காமல் ஒன்பது பேர் தான் உள்ளதாக துன்பமுற்று தன்னை அறியாத மயக்கமே அஞ்ஞானம்என்றும், அந்த வழியே வந்த வழிப்போக்கன் பத்து நபர் இந்த இடத்தில் உள்ளனர் என ஒவ்வொருவராக எண்ணி பத்து என அறிந்து கொள்வது பரோட்சஞானம் என ஞான விளக்கம் அளித்துள்ளார் தாண்டவராய சுவாமிகள்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. வேதம் என்னும் பசுவில் கை வலிமையால் கறந்து முன்னோர் தந்த பாலைக் கடைந்து எடுத்த வெண்ணெய்
  2. வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 8.
  3. வித்வான் M. நாராயண வேலுப்பிள்ளை எழுதிய தெளிவுரையுடன் சென்னை 17, முல்லை நிலையம் 2002-ன் மறுபதிப்பாக 2009-ல் இந்த நூல் வெளியிட்டுள்ளது.
  4. வித்வான் M. நாராயண வேலுப்பிள்ளை எழுதிய கைவல்ய நவநீதம் முல்லை நிலையம் 2002-பதிப்பு.
  5. ரெங்கையா முருகன் (21 அக்டோபர் 2017). "கைவல்ய நவநீதச் சேவையாளர் தியாகராஜன்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2017.
  6. N K, Sundareswaran (2021). Kaivalyanavanītam of Śaṅkukavi (Edited with the Kṛṣṇapriyā commentary) (in Sanskrit English). Calicut, Kerala: Publication Division, University of calicut. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-947380-3-9.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  7. பூத்த
  8. இன்பக்கடல்
  9. களங்கமற்ற வாலறிவு
  10. எவருடை அருளால் யானே
    எங்குமாம் பிரமம் என்பதால் ...
    சொரூப சுபாவம் ஆனேன் (பாடல் 3)

கருவிநூல்

[தொகு]
  • கைவல்ய நவநீதம், வேலுப்பிள்ளை விளக்கவுரையுடன், முல்லை நிலையம், சென்னை 17, முதல் பதிப்பு 2002, இரண்டாம் பதிப்பு 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைவல்ய_நவநீதம்&oldid=4121128" இலிருந்து மீள்விக்கப்பட்டது