உள்ளடக்கத்துக்குச் செல்

கைவல்ய உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைவல்ய உபநிடதம் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகா உபநிடதத்தில் இராமன் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிடங்களில் இது 12வதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டே அத்தியாயங்களில் மொத்தம் 27 சுலோகங்களைக் கொண்டது. சைவ உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. ஆச்வலாயனருக்கு நான்முக பிரம்மாவால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. ஆதி சங்கரர் தன்னுடைய பாஷ்யங்களில் இதனிலிருந்து மேற்கோள்களை அடிக்கடி கையாள்கிறார்.[1][2]

உபநிடதக் கருத்துரை

[தொகு]

பரம்பொருளை முக்கண்ணனாக தியானிக்கவேண்டும். அப்பரம்பொருள் அழுக்கற்றது, இருதயத்தாமரையில் இருப்பது. துன்பமற்றது. சிந்தனைக்கெட்டாதது. வெளிப்படையாய்த் தோன்றாதது. ஆதியும் நடுவும் முடிவுமில்லாதது. ஒன்றேயானது. அறிவும் ஆனந்தமுமே வடிவாகியது. எல்லா உலகின் உற்பத்தி ஸ்தானம். உண்டானதும், உண்டாகப்போவதும் என்றுமுள்ளதும் எல்லாமும் அவனே.

மாயையால் மதியிழந்தவன், பெண், உணவு, பானம் முதலியவற்றில் இன்பம் தேடித்தேடி, அதைப்பற்றியே கனவு கண்டுகொண்டு காலம் கழிக்கிறான். மீண்டும் முற்பிறவிகளில் செய்த வினைகளின் கூட்டுறவால் திரும்பத்திரும்ப அதே ஜீவன் தூங்கியும் விழித்தும் (தூலம், நுட்பம், காரணம் என்ற) மூன்று வித உடல்களால் விளையாடுகிறான். அவனிடமிருந்தே விந்தையான இவ்வனைத்தும் தோன்றியுள்ளன. எவனிடத்தில் முப்புரமும் ஒடுங்குகின்றனவோ அவன்தான் ஆதாரமாகவும் ஆனந்தக் கடலாகாவும் பிளவுபடாத அறிவின் விழிப்பாகவும் உள்ள ஆன்மா.

எது பரப்பிரம்மமோ, அனைத்திற்கும் ஆன்மாவோ, உலகிற்குப் பெரிய இருப்பிடமோ, நுட்பத்திற்கும் அதிக நுட்பமானதோ, என்றுமுளதோ அந்தப்பிரம்மம் நானே என்று அறிந்து ஒருவன் எல்லாத்தளைகளினின்றும் விடுபடுகின்றான்.

தான் தானாய் நிற்கும் இன்பம் தான் கைவல்ய முக்தி.

உபநிஷத்துப் பொன்மொழிகள்

[தொகு]

தன்னைக் கீழ் அரணிக் கட்டையாகவும் ஓங்காரத்தை மேல் அரணிக் கட்டையாகவும் செய்து ஞானத்தால் திரும்பத் திரும்பக் கடைந்து அறிவாளி பாவத்தைச் சுட்டெரிக்கிறான். (1.11)

மூன்று நிலைகளிலும் எது அனுபவிக்கப்படுவதாகவும், எது அனுபவிப்பவனாகவும் அனுபவமாகவும் ஆகின்றதோ அவற்றினின்று வேறாகவும் சாட்சியாகவும் கேவல அறிவு வடிவினனாகவும் என்றும் மங்கள வடிவினன் (சதாசிவன் ) ஆகவும் உள்ளவன் நான்.(1.18)

வேதத்தில் ருத்ரம்

[தொகு]

"எவன் சதருத்ரீயத்தை அத்தியயனம் செய்கிறானோ அவன் தீயினால், காற்றால், ஆன்மாவால் தூயப்படுத்தப்பட்டவன் போல் ஆகின்றான்... அதனால் 'அவிமுக்தம்' எனும் பதவியை அடைகின்றான். துறவி அதை ஒவ்வொரு நாளும் ஒருதடவையாவது ஜபிக்கவேண்டும்."(2.6) இது கைவல்ய உபநிஷத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது.

'சதருத்ரீயம்' என்பது கிருஷ்ண யஜுர்வேதத்தில் நான்காவது காண்டத்தில் உள்ள ஒரு அத்தியாயம். ' ருத்ரம்' என்ற பெயரால் பிரசித்தி பெற்றது. 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. நாராயண தீர்த்தர் என்பவர் இவ்வுபநிஷத்துக்கு உரை எழுதும்போது, இந்த ருத்ரத்தை ‘சகுணப்பிரம்ம உபாசனை’ என்றும், இவ்வுபநிஷத்தை ‘நிர்க்குணப்பிரம்ம உபாசனை’ என்றும் கூறுகிறார்.

'அவிமுக்தம்' என்ற வடமொழிச்சொல்லுக்கு 'விடப்படாதது' என்று பொருள். பிரளயத்திலும் உமையோடுகூடிய மகேசன் காசியை விட்டு நீங்காததால் காசி க்ஷேத்திரத்திற்கு 'அவிமுக்த க்ஷேத்திரம்' என்றொரு பெயர் உண்டு.

நம் உடலில் புருவமத்திக்கும் அவிமுக்தம் என்று பெயர். ஆறு ஆதார சக்ரங்களில் புருவமத்தியில் உள்ளது ஆஞ்ஞாசக்ரம். இங்கு மனது நிலைக்கும்போது ஞானம் பளிச்சிடுகிறது என்பது யோகநூல்களின் சித்தாந்தம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://ia600704.us.archive.org/14/items/UpanishadsTamil/05_Kaivalya_Upanishad.pdf
  2. https://archive.org/details/EssenceOfKaivalyaUpanishad

துணை நூல்கள்

[தொகு]
  • S. Radhakrishnan.The Principal Upanishads.1969. George Allen & Unwin Ltd. London. SBN 04 294047 8
  • "அண்ணா". உபநிஷத்ஸாரம். 1989, ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைவல்ய_உபநிடதம்&oldid=3747085" இலிருந்து மீள்விக்கப்பட்டது