உள்ளடக்கத்துக்குச் செல்

கைபி ஆசுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைபி ஆசுமி
பிறப்புசையித் அதர் உசைன் ரிசுவி
(1919-01-14)14 சனவரி 1919
மிசுவான், ஒன்றிய பிரதேசங்கள், பிரித்தானிய இந்தியா
(தற்போது உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு10 மே 2002(2002-05-10) (அகவை 83)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிகவிஞர், பாடலாசிரியர், கவிதை ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
  • சௌகத் கைபி
பிள்ளைகள்
வலைத்தளம்
Kaifi Azmi Website

கைபி ஆசுமி (Kaifi Azmi) என்று அழைக்கப்படும் சையித் அதர் உசைன் ரிசுவி (1919 ஜனவரி 14   - 2002 மே 10) இவர் ஒரு இந்திய உருது கவிஞராவார். இந்திய இயக்கப் படங்களுக்கு உருது இலக்கியத்தை கொண்டு வந்தவர் என இவர் நினைவு கூறப்படுகிறார். பிர்சாதா காசிம், ஜான் எலியா மற்றும் பிறருடன் சேர்ந்து இவர் இருபதாம் நூற்றாண்டின் மறக்கமுடியாத உருது கவிதைகள் படிக்கப்படும் ஒரு மாலை சமூகக் கூட்டங்களான முசைராக்களில் பங்கேற்றார். [1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள மிஸ்வா (என்) கிராமத்தில் சியா இசுலாம் குடும்பத்தில் ஆசுமி பிறந்தார்.

குடும்பம்

[தொகு]

இவர், சௌகத் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சபனா ஆசுமி (திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நாடகத்தின் இந்திய நடிகை) என்ற ஒரு மகளும் மற்றும் பாபா ஆசுமி (இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்) என்ற ஒரு மகனும் உள்ளனர். ஆசுமியின் மருமகள் தன்வி ஆசுமியும் (பாபா ஆசுமியின் மனைவி) பிரபல தொலைக்காட்சி நடிகராவார்.

தொழில்

[தொகு]

எழுத்துக்களில்

[தொகு]

பதினொரு வயதில், இவர் தனது முதல் [[கசல் (இசை}| கசலான]] இத்னா து சிந்தகி மெய் கிசி கி கலால் பேதேவை எழுதினார். இப்படித்தான் இவர் ஒரு முசைராவுக்குள் நுழைந்தார். அங்கே இவர் ஒரு கசலைப் படித்தார். கசலின் ஒரு இணை முசைராவின் தலைவர் மணி ஜெய்சியால் மிகவும் பாராட்டப்பட்டது. ஆனால் இவரது தந்தை உட்பட பெரும்பாலானவர்கள் இவர் தனது மூத்த சகோதரரின் கசலை ஓதினார் என்று நினைத்தார்கள். இவரது மூத்த சகோதரர் அதை மறுத்தபோது, ​​இவரது தந்தையும் இவரது எழுத்தரும் இவரது கவிதை திறமையை சோதிக்க முடிவு செய்தனர். அவர்கள் இவருக்கு ஒரு இணை வரிகளில் ஒன்றைக் கொடுத்து, ஒரே அளவிலும், முடிவிலும் ஒரு கசலை எழுதச் சொன்னார்கள். ஆசுமி சவாலை ஏற்றுக்கொண்டு ஒரு கசலை முடித்தார். இந்த குறிப்பிட்ட கசல் பிரிக்கப்படாத இந்தியாவில் ஒரு பெரும் அனுபவமாக மாறியது. மேலும் புகழ்பெற்ற கசல் பாடகர் பேகம் அக்தர் இதை பாடியதால் அது அழியாததாகியது.

1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டங்களின் போது ஆசுமி பாரசீக மற்றும் உருது பற்றிய தனது ஆய்வைக் கைவிட்டார். அதன்பிறகு 1943 ஆம் ஆண்டில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக முழுநேர மார்க்சியவாதியானார். [3] இந்த காலகட்டத்தில், இலக்னோவின் முன்னணி முற்போக்கான எழுத்தாளர்கள் இவரைக் கவனித்தனர். இவருடைய தலைமைப் பண்புகளால் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டனர். அவர்கள் இவருக்குள் ஒரு வளர்ந்து வரும் கவிஞரைக் கண்டார்கள். மேலும் இவருக்கு எல்லா ஊக்கத்தையும் அளித்தனர். இதன் விளைவாக, இவர் ஒரு கவிஞராக பெரும் பாராட்டுக்களைப் பெறத் தொடங்கி, இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தில் உறுப்பினரானார்.

தனது இருபத்தி நான்கு வயதில், கான்பூரின் துணி ஆலைப் பகுதிகளில் நடவடிக்கைகளைத் தொடங்கினார். இவர் ஒரு ஜமீந்தாரின் மகன் என்றாலும், தனது வசைதியான வாழ்க்கையை விட்டுவிட்டு, ஒரு முழுநேர ஊழியராக மாறினார். இவர் தனது தளத்தை மும்பைக்கு மாற்றவும், தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றவும், மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கட்சிப் பணிகளைத் தொடங்கவும், அதே நேரத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முசைராக்களில் கலந்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டார். மும்பையில், அலி சர்தார் சாப்ரியுடன் கட்சியின் இதழான கௌமி சங் என்பதற்காக எழுத ஆரம்பித்தார். 1947 இல், இவர் ஒரு முசைராவில் பங்கேற்க ஐதராபாத்துக்கு (இந்தியா) வருகை புரிந்தார். அங்கு இவர் சௌகத் என்பவரைச் சந்திர்த்து, காதலித்து திருமணம் செய்து கொண்டார். சௌகத் பின்னர், நாடகத்திலும் படங்களிலும் புகழ்பெற்ற நடிகையானார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்தியத் திரைப்படத்தின் புகழ்பெற்ற நடிகை சபனா ஆசுமி (பிறப்பு. 1950) மற்றும் பிரபல ஒளிப்பதிவாளர் பாபா ஆசுமி ஆகியோர்.

விருதுகள்

[தொகு]

இவர், இந்தியாவின் மிக உயர்ந்த நான்காவது குடிமகன் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றுள்ளார். மகாராட்டிரா உருது அகாதமியின் சிறப்பு விருது, சோவியத் நாட்டின் நேரு விருது, ஆப்பிரிக்க - ஆசிய எழுத்தாளர்கள் சங்கத்தின் தாமரை விருது, மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்கான குடியரசுத்தலைவர் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், ஆவாரா சச்தே என்ற இவரது படைப்பிற்காக இவருக்கு உத்தரப் பிரதேச உருது அகாதமி விருது மற்றும் உருதுக்கான சாகித்திய அகாதமி விருது ஆகியவையும் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் மகாராட்டிர அரசு இவருக்கு 'ஞானேசுவரா' விருதை வழங்கியது. வாழ்நாள் சாதனையாளர்களுக்காக மதிப்புமிக்க சாகித்திய அகாதமி சக கூட்டாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. [4]

2000 ஆம் ஆண்டில், தில்லி அரசு மற்றும் தில்லி உருது அகாதமியால் இவருக்கு முதல் நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது. இவர் சாந்திநிகேதன் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். [1]

அஞ்சலி

[தொகு]

புது தில்லியில் உள்ள இராமகிருட்டிணாபுரம் மற்றும் ஐதராபாத்தில் ஒரு சாலைக்கு அரசாங்கம் இவரது பெயரை வைத்துள்ளது.

இவரது சொந்த ஊரான அசாம்காரில் இருந்து பழைய தில்லிக்கு செல்லும் "கைபியாத்" என்ற அதிவேக இரயிலையும் அரசாங்கம் திறந்து வைத்துள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. dnaindia. http://www.dnaindia.com/entertainment/report-shabana-azmi-launches-website-to-honour-father-kaifi-azmi-2002666, Retrieved 25 July 2014
  2. indiatoday.intoday. http://indiatoday.intoday.in/story/shabana-azmi-launches-website-to-honour-father-ka[தொடர்பிழந்த இணைப்பு]ifi-azmi/1/372810.html, Retrieved 25 July 2014
  3. movies.ndtv. http://movies.ndtv.com/music/kaifi-azmi-s-10th-death-anniversary-today-208703[தொடர்பிழந்த இணைப்பு], Retrieved 9 July 2014
  4. "List of Fellows And Honorary Fellows Fellows". SNA Official website. Archived from the original on 5 June 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைபி_ஆசுமி&oldid=3762549" இலிருந்து மீள்விக்கப்பட்டது