கே. பி. பரமேசுவரன்
| கொடுந்திறப்புள்ளி பரமேஸ்வரன் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | 17 சூலை 1969 பாலக்காடு, கேரளம் |
| இசை வடிவங்கள் | கருநாடக இசை, கருநாடக வாத்தியக் கலைஞர் |
| இசைக்கருவி(கள்) | மிருதங்கம், கொன்னக்கோல் |
| இசைத்துறையில் | 1980–தற்போது |
| இணையதளம் | kpparameswaran |
கே. பி. பரமேசுவரன் எனப்படும் கொடுந்திறப்புள்ளி பரமேஸ்வரன் ( K. P. Parameswaran ) என்பவர் ஒரு தொழில்முறை மிருதங்க இசைக் கலைஞர் (அகில இந்திய வானொலியின் 'ஏ' தரக் கலைஞர்). ஆவார். இவர் சங்கீத கலாநிதி டாக்டர் டி. கே. மூர்த்தியின் முதன்மைச் சீடர் ஆவார். கருநாடக இசையின் பல்வேறு மேதைகளுடன் இணைந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவர் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். இவர் தஞ்சாவூர் பாணி மிருதங்க வாசிப்பின் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.
துவக்க கால வாழ்க்கை
[தொகு]கே.பி. பரமேசுவரன், கேரளத்தின் பாலக்காட்டில் உள்ள கொடுந்திறப்புள்ளி கிராமத்தில், 1969 சூலை 17 அன்று காலஞ்சென்ற கே. எஸ். பத்மநாப ஐயர், கே. பி. லோகநாயகி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாத்தா மறைந்த கொடுந்திறப்புள்ளி சுவாமிநாத ஐயர் பரமேசுவரனுக்கு மிருதங்கத்தில் முதலில் பயிற்சி அளித்தார். சுவாமிநாத ஐயரே ஒரு சிறந்த மிருதங்கக் கலைஞராவார். அவர் கே. பொன்னையா பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர், பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் ஆகியோரின் சீடராக இருந்தவர். பரமேசுவரன் தன் தாத்தாவிடம் மிருதங்கத்தில் கடும் பயிற்சி பெற்றார். பின்னர் 1987 ஆம் ஆண்டு மிருதங்கத்தை மேலும் கற்க சங்கீத கலாநிதி டாக்டர் டி. கே. மூர்த்தியிடம் சென்றார். டாக்டர் டி. கே. மூர்த்தியிடம் 15 ஆண்டுகள் (1987-2002) குருகுலவாசம் செய்து பயிற்சி பெற்றார்.
தொழில்
[தொகு]பாலக்காடு இசைக் கல்லூரியில் பரஸ்சல ரவியிடம் காணபூஷணம் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். டாக்டர் டி. கே. மூர்த்தியின் வழிகாட்டுதலின் கீழ் இருந்தபோது, இவர் தன் ஆசிரியருடன் பல இரட்டை மிருதங்கக் கச்சேரிகளையும் மிருதங்க விளக்க நிகழ்ச்சிகளையும் நடத்தினார். மேலும், பாடல்களுக்குப் பக்கவாத்தியம் வாசிப்பதிலும் தனி ஆவர்த்தனங்களிலும் தன் குருவின் பாணியையே பின்பற்றினார். அந்தக் காலகட்டத்தில், மிருதங்கத்தில் இவர் கொண்டிருந்த அபாரமான, சிறப்பான திறமைக்காகவும், டாக்டர் டி. கே. மூர்த்தியிடம் பயிற்சி பெற்றதற்காகவும் ஒன்றிய அரசு உதவித்தொகை வழங்கியது. இவர் தன் குருவான டாக்டர் டி. கே. மூர்த்தி தயாரித்த '35 தாளங்கள்', '72 மேளகர்த்தா தாளங்கள்', '108 தாளங்கள்' என்ற பெயர்களில் வணிக ரீதியாக வெளியிடப்பட்ட குறுந்தகடுகளிலும் வாசித்துள்ளார். தனது புகழ்பெற்ற இசைப் பயணத்தில் இவர் பல மேதைகளுக்குப் பக்கவாத்தியம் வாசித்துள்ளார். இவர் பக்கவாத்தியம் வாசித்த சில இசைக்கலைஞர்களின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- திரு கே. வி. நாராயணசுவாமி
- திரு பி. ராஜம்
- திரு டி.கே கோவிந்த ராவ்
- திரு எம். எஸ். கோபாலகிருஷ்ணன்
- திரு டி. என். சேசகோபாலன்
- திரு தி. வே. சங்கரநாராயணன்
- திரு திருச்சூர் வி. இராமச்சந்திரன்
- திரு ராதா விஸ்வநாதன்
- திருமதி சுகுண புருசோத்தமன்
- திருமதி சுகுணா வரதாச்சாரி
- திருமதி எம். எஸ். ஷீலா
- திருமதி பந்துலா ராமா
- திரு நெய்வேலி சந்தானகோபாலன்
- திரு காரைக்குடி சுப்பிரமணியம்
- திரு விஜய் சிவா
- திரு லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன்
- திரு திருச்சி கணேசன்
- திரு சஞ்சய் சுப்ரமண்யன்
- திரு டி. எம். கிருஷ்ணா
- திரு டி. என். எஸ். கிருஷ்ணா
- திரு அசோக் ரமணி
- திரு கத்ரி கோபால்நாத்
- திரு உ. ஸ்ரீநிவாஸ்
- பண்டிட் ரோனு மஜும்தார்
இவர் அகில இந்திய வானொலியின்'ஏ' தரக் கலைஞர். தஞ்சாவூர் பாணி மிருதங்க வாசிப்பில் இவர் ஒரு முன்னோடி. வாசிப்பது மட்டுமல்லாமல், இவர் ஒரு சிறந்த மிருதங்க ஆசிரியராகவும் உள்ளார். இவருக்கு ஏற்கனவே இத்துறையில் பிரபலமான பல சீடர்கள் உள்ளனர்.
விருதுகளும் பட்டங்களும்
[தொகு]கொடுந்திரப்புள்ளி பரமேசுவரன் பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.
- காஞ்சி காமகோடி பீடத்தால் ஆஸ்தான வித்வான்
- சங்கீத திலகம் திருவம்பாடி தேவஸ்வம், திருச்சூர்
- கேரள பிராமண சபையால் லய வாத்ய நிபுனா
- லயா வித்யாச்சார்யா மணி, நந்திகேஷ்வர் தல வித்யாலயா, குரோம்பேட்டை, சென்னை
