கே. டி. பிரான்சிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. ரி. பிரான்சிஸ்
பிறப்புகந்தையா திருஞானசம்பந்தபிள்ளை பிரான்சிஸ்
அக்டோபர் 15, 1939(1939-10-15)
கேகாலை, இலங்கை
இறப்புசூன் 9, 2013(2013-06-09) (அகவை 73)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுதுடுப்பாட்ட நடுவர்

கே. ரி. பிரான்சிஸ் (K. T. Francis) என அழைக்கப்படும் கந்தையா திருஞானசம்பந்தபிள்ளை பிரான்சிஸ் (15 அக்டோபர் 1939 – 9 சூன் 2013) இலங்கையின் துடுப்பாட்ட நடுவர் ஆவார்.[1] இவர் 1982-1999 காலப்பகுதியில் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் நடுவராகக் கலந்து கொண்டுள்ளார்.

இவர் நடுவராகப் பணியாற்றிய முதலாவது தேர்வுப் போட்டி இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் 1982 பெப்ரவரியில் இடம்பெற்ற போட்டியாகும். கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் ஹெர்பி ஃபெல்சிங்கர் உடன் இணைந்து நடுவராகப் பணியாற்றினார்[2]. இதுவே இலங்கை பங்குபற்றிய முதலாவது அதிகாரபூர்வமான தேர்வுப் போட்டியுமாகும். இப்போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்சிஸ் தனது நடுவர் பணியை முதற் தடவையாக ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியில் ஆரம்பித்திருந்தார். இவ்வாட்டத்திலேயே பின்நாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன றணதுங்க தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.

பிரான்சிசு பன்னாட்டு துடுப்பாட்டப் பேரவையின் நடுவர்களுக்கான செயற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர். 1996, 1999 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் இவர் நடுவராகப் பணியாற்றியிருந்தார். இறுதியாக இவர் 2009 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசியக் கிண்ணத்துக்கான போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார்.[3]

தொடருந்து நிலைய ஊழியராக தமது தொழிலை ஆரம்பித்த பிரான்சிஸ் இலங்கை இரயில்வே அணிக்காக உதைப்பந்து, மற்றும் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[4]

மறைவு[தொகு]

நீரிழிவு நோயின் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பிரான்சிஸ் 2013 ஜூன் 9 அன்று காலமானார். இவரது முழங்காலிற்கு கீழுள்ள பகுதி அகற்றப்பட்டிருந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka Cricket News: Umpire KT Francis dies at 73". ESPN Cricinfo. பார்த்த நாள் 2013-06-10.
  2. Sri Lanka`s pioneer umpire K T Francis passes away, சீ நியூஸ், யூன் 10, 2013
  3. K.T. FRANCIS: THE DOYEN, Asian Cricket Council
  4. 4.0 4.1 இலங்கையின் டெஸ்ட் நடுவர் கே.ரி பிரான்சிஸ் காலமானார், தினகரன், சூன் 11, 2013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._டி._பிரான்சிஸ்&oldid=2712636" இருந்து மீள்விக்கப்பட்டது