கேஸ்லைட்
| கேஸ்லைட் | |
|---|---|
சுவரொட்டி | |
| இயக்கம் | ஜார்ஜ் கூகார் |
| தயாரிப்பு | ஆர்தர் ஹார்ன்புளோ ஜூனியர் |
| திரைக்கதை |
|
| இசை | புரோனிஸ்லாவ் கேப்பர் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | ஜோசப் ரூட்டன்பெர்க் |
| படத்தொகுப்பு | ரால்ஃப் ஈ. வின்டர்ஸ் |
| கலையகம் | மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் |
| விநியோகம் | லோஸ், இன்க்.[2] |
| வெளியீடு | மே 4, 1944 |
| ஓட்டம் | 114 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $2 மில்லியன்[3] |
| மொத்த வருவாய் | $4.6 மில்லியன்[3] |
கேஸ்லைட் (Gaslight) என்பது 1944 ஆம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். ஜார்ஜ் கூகார் இயக்கிய இப்படத்தில் சார்லஸ் போயர், இங்க்ரிட் பெர்க்மேன், ஜோசப் காட்டன் , ஏஞ்சலா லேன்சுபரி ஆகியோர் நடித்துள்ளனர். இதுவே ஏஞ்சலா லான்ஸ்பரி நடித்த முதல் திரைப்படமாகும். பேட்ரிக் ஹாமில்டன் எழுதியகேஸ் லைட் (1938) என்னும் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு ஜான் வான் ட்ரூட்டன், வால்டர் ரீஷ் , ஜான் எல். பால்டர்ஸ்டன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர். இப்படம் இளம் பெண் ஒருத்தி தன் கணவன் செய்யும் சூழ்ச்சியால் தான் உண்மையாகவே மெல்ல மெல்ல உளப் பிறழ்ச்சிக்கு ஆளாகி வருவதாகவே நம்புவதைப் பற்றியதாகும். [4]
இது 1940 ஆம் ஆண்டு தோரோல்ட் டிக்கின்சன் இயக்கிய பிரித்தானியத் திரைப்படமான கேஸ்லைட்டின் மறு ஆக்கம் ஆகும். அந்த படத்தை விட இது பரந்த வீச்சையும் அதிக பொருட்செலவில் எடுக்கபட்டதுடன், மூலக்கதைக்கு ஒரு வித்தியாசமான சூழலையும் வழங்குகிறது. முந்தைய படத்துடன் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க, குகோரின் பதிப்பு முதலில் இங்கிலாந்தில் தி மர்டர் இன் தோர்ன்டன் ஸ்கொயர் என்று பெயரிடப்பட்டது. இந்த திரைப்படம் அசல் மேடை நாடகத்திலிருந்து பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஒரு கணவன் தனது குற்றச் செயல்களிலிருந்து மனைவியின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவளைப் பைத்தியமாக்க முயற்சிப்பதே இதன் மைய கதையாக உள்ளது.
கேஸ்லைட் திரைப்படம் 1944 மே 4 அன்று மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் நிறுவனத்தால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றது. மேலும் , 17வது அகாடமி விருதுகளில் சிறந்த திரைப்படம் உட்பட ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகை (பெர்க்மேனுக்காக); சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட இரண்டு விருதுகளைப் பெற்றது. 2019 ஆம் ஆண்டில், இப்படம் "பண்பாட்டு ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக குறிப்பிடத்தக்கது" எனக் கருதப்பட்டு, அமெரிக்க தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பிற்காக காங்கிரஸ் நூலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. [5] [6] [7]
கதை
[தொகு]1875- ஆம் ஆண்டு எரிவாயு விளக்குகள் ஏற்றப்படும் நேரத்தில், விக்டோரியன் இலண்டனில் தனது வீட்டில் உலகப் புகழ்பெற்ற ஆப்பெரா பாடகி ஆலிஸ் அல்க்விஸ்ட் மருமமான முறையில் கொல்லப்படுகிறாள். அளது வாரிசான சிறுமி பவுலா, அத்தையின் மரணத்துக்குப் பிறகு இத்தாலிக்கு அனுப்பப்படுகிறாள். அங்கு அவள் ஆலிஸின் இசை வழியைப் பின்பற்றும் நோக்கில் ஆப்பெராவைக் கற்கிறாள். தனது குரலிசைப் பயிற்சியின் போது, பவுலா தன் பக்கவாத்தியக் கலைஞரான கிரிகோரி ஆன்டனால் கவரப்பட்டு, இரண்டு வார கால தீவிர காதலுக்குப் பிறகு அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். கணவனின் தீவிர வற்புறுத்தலால் லண்டனில் அத்தை கொல்லபட்ட அதே வீட்டில் குடியேறுகின்றனர். பவுலா தன் அத்தை கொலை செய்யபட்ட நினைவுகளுடன் போராடுகிறாள்.
செர்ஜிஸ் பாயர் என்றவரிடமிருந்து தன் அத்தைக்கு வந்த ஒரு கடிதம் பவுலாவுக்கு கிடைக்கிறது. அதை பிடிங்கிக் கொள்ளும், கிரிகோரி பின்னர் மன்னிப்பு கேட்கிறான். அவன் எலிசபெத் என்ற வயதான சமையல்காரி, நான்சி என்ற ஒரு வேலைக்காரி ஆகியோரை வேலைக்கு அமர்த்துகிறான். பல நிகழ்வுகள் மூலம் பவுலாவையே தன் மனநிலை குறித்து சந்தேகப்படும் சூழ்நிலையை உருவாக்குகிறான். இஇலண்டன் கோபுரத்திற்குச் செல்லும்போது, அவன் அவளுக்குக் கொடுத்த புரூச் என்னும் குடும்ப உடுப்பூசி காணாமல் போகிறது. சுவரில் இருந்து ஓவியமும் மறைந்து மீண்டும் கிடைப்பதால் பவுலா, தனக்கு மறதிநோய் இருக்கிறதோ என்று குழம்புகிறாள். கிரிகோரி வீட்டில் இல்லாத இரவு நேரங்களில், எரிவாயு விளக்குகள் சம்பந்தமில்லாமல் மங்குகின்றன. பலகைகளால் அடைக்கபட்ட பரணில் யாரோ நடக்கும் சத்தமும், அலமாரிகளைத் தேடும் சத்தமும் கேட்கின்றன. இதனால் பவுலா கலக்கமடைகிறாள்.
கிரிகோரி நான்சியிடம் தைரியமாக சரசமாடுகிறான். அவள் பவுலாவை அவமதிப்பதால் பவுலாவின் பதற்றம் மேலும் அதிகரிக்கிறது. பவுலாவின் இந்த பதற்றமான நடத்தையை ஸ்காட்லாண்ட் யார்டின் காவல் ஆய்வாளர் பிரையன் கேமரூன் கவனிக்கிறார். தீர்க்கப்படாமல் கிடந்த ஆலிசின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கமுயல்கிறார். அப்போது, ஆலிசிடம் விலைமதிப்பற்ற அரச நகைகள் இருந்ததையும், அவளின் கொலைக்குப் பிறகு அவை எங்கே உள்ளன என்பது கண்டறியப்படவில்லை என்பது அவருக்குத் தெரியவருகின்றன.
இதற்கிடையில் தன் மனைவியை புற உலகத்திலிருந்து தனிமைப்படுத்தும் கிரிகோரி, அவள் மனநிலை சரியில்லாதவள் என்றும், பொது இடங்களில் இருக்க முடியாத அளவுக்கு திருட்டுப் பழக்கம் உள்ளவள் என்றும் அவளை நம்ப வைக்கிறான். ஒரு பழைய குடும்ப நண்பர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்குச் செல்ல பவுலா விரும்புகிறாள். கிரிகோரி அந்த நிகழ்ச்சியின் போது தனது கையடக்க கடிகாரத்தை அவள் கைப்பையில் போடுகிறான். பின்னர் தன் கடிகாரத்தை அவள் திருடிவிட்டதாக குற்றம் சாட்டுகிறான். அவளுடைய கைப்பையில் அதை அவன் "கண்டுபிடித்த" போது, கேமரூன் உட்பட விருந்தினர்கள் முன்னிலையில் பவுலா அவமானப்பட்டு அழுகிறாள். அங்கிருந்து வெளியேறும் பவுலா நான் உண்மையிலேயே பைத்தியம் ஆகிவிட்டேனா? என்று நம்பத் தொடங்கி அழுகிறாள்.
இதற்கிடையில் அடிக்கடி அருகில் உள்ள பாழடைந்த வீட்டிற்குச் செல்லும் கிரிகரியைக் கண்காணிக்க ஒரு ரோந்து அதிகாரியை காவல் ஆய்வாளர் கேமரூன் நியமிக்கிறார். நான்சியுடன் சல்லாபம் செய்யும் போது, கிரிகரி பவுலாவை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கத் திட்டமிடுவதை அந்த காவலர் அறிகிறார். கிரிகரி இரவில் வெளியே சென்றிருக்கும்போது, பரணில் கேட்கும் சத்தங்களும், மங்கி மங்கி எரியும் எரிவாயு விளக்குகளும் உண்மையானவை என்பதை உறுதிசெய்கிறார். மேலும் ஆலிசின் நகைகளைத் தேடுவதற்காக, கிரிகரி அருகிலுள்ள காலியான வீட்டின் சன்னல் வழியாக தனது வீட்டு பரணுக்குள் ரகசியமாக நுழைந்து, பழைய உடமைகளை ஆராய்ந்து வருவதை அவர் ஊகிக்கிறார். கிரிகரி பரணின் விளக்குகளை ஏற்றும்போது, எரிவாயு கீழே உள்ள பவுலாவின் அறையில் உள்ள விளக்குகள் மங்குகின்றன. கிரிகேரி திட்டமிட்டு பவுலாவை பைத்தியமாக்குவதாக கேமரூன் கூறுகிறார். மேலும் அவளின் அத்தையைக் கொன்ற சர்ஜிஸ் பாயர்தான் இப்போது "கிரிகரி" என்ற பெயரில் பவுலாவை மணந்திருக்கிறான். அவளின் அத்தையின் வீட்டிற்குள் நுழைவதற்கான ஒரு சூழ்ச்சியாகவும், அதைத் தொடர்ந்து ஆலிசின் சொத்துக்களுக்கு முழு உரிமையைப் பெறுவதற்காக பவுலாவை மனநல மருத்துவமனையில் சேர்க்கவும் திட்டமிட்டு அவளை அவன் திருமணம் செய்துள்ளான் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.
வைரங்களை கண்டுபிடிக்கும் கிரிகேரியை மையும் கலவுமாக கேமரூன் பிடிக்கிறார். அவனைப் பரணுக்குள் துரத்திச் சென்று ஒரு நாற்காலியில் கட்டிப் போடுகிறார். கிரிகேரியுடன் தனியாக இருக்க வேண்டும் என்ற அவனது கோரிக்கைக்கு பவுலா சம்மதிக்கிறாள். அப்போது ஒரு கத்தியைக் காட்டி தன் கட்டுகளை கட்டுகளை அவிழ்க்குமாறு பவுலாவை கெஞ்சுகிறான். ஆனால் பவுலாவோ நான் பைத்தியம் அல்லவா எனக்கு இந்தக் கத்தி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே என்று அவனைக் கேலி செய்கிறாள். காவல்துறையினர் கிரிகேரியை அழைத்துச் செல்லுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Van Druten (Screenplay), John; Reisch (Screenplay), Walter; Balderston (Screenplay), John L.; Hamilton (Original Theater Play), Patrick. "Gaslight screenplay (October 8, 1943)". Scripts on Screen. Retrieved November 19, 2021.
- ↑ வார்ப்புரு:AFI film
- 1 2 The Eddie Mannix Ledger. Los Angeles..
- ↑ Wise, Sarah (May 7, 2013). "Gaslight Stories: Driving 'Ingrid Bergman' Insane". சைக்காலஜி டுடே (in ஆங்கிலம்). Retrieved April 6, 2022.
- ↑ Tartaglione, Nancy (December 11, 2019). "National Film Registry Adds 'Purple Rain', 'Clerks', 'Gaslight' & More; 'Boys Don't Cry' One Of Record 7 Pics From Female Helmers". Deadline Hollywood. Retrieved December 11, 2019.
- ↑ "Complete National Film Registry Listing". Library of Congress. Retrieved October 2, 2020.
- ↑ "Women Rule 2019 National Film Registry". Library of Congress. Retrieved October 2, 2020.