உள்ளடக்கத்துக்குச் செல்

கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கனாசேரி லட்சுமிபுரம் அரண்மனையில் இருக்கும் கேரள வர்மா வல்லிய கோயி தம்புரானின் உருவப்படம்

கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான் (Kerala Varma Valiya Koyi Thampuran) (1845 பிப்ரவரி 19 - 1914 செப்டம்பர் 22) கேரள வர்மா என்றும் அழைக்கப்பட்ட இவர், மலையாள மொழிக் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் இந்திய மாநிலமான கேரளாவிலிருந்து ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய இரண்டிலும் சமமான புலமையைக் கொண்டிருந்தார். [1] இவர் மலபாரின் முந்தைய பரப்பநாட்டு அரச குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்தார். இவர் கேரளாவின் காளிதாசர் என்றும் அழைக்கப்படுகிறார். [2]

கேரள வர்மா "19ஆம் நூற்றாண்டில் கேரளாவில் ஒரு மகத்தான மறுமலர்ச்சியின் உருவம்" என்றும், "பூர்வீக செல்வாக்கை உணர்வுபூர்வமாகவும் வேண்டுமென்றே உள்வாங்கவும் கொண்டாடவும் தொடங்கிய முக்கிய எழுத்தாளர்களில் முதன்மையானவர்" என்று அழைக்கப்படுகிறார். கவிதை, நாடகம், உரைநடை ஆகியவற்றில் பூர்வீக சமசுகிருதக் கூறுகளுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கத்திய தாக்கங்களை உள்வாங்கி மலையாள இலக்கியத்தை மீண்டும் உயிர்ப்பிக்க இவர் வாதிட்டார். [1]

வாழ்க்கை

[தொகு]

இவர் 1845 பிப்ரவரி 19 இல் (6 கும்பம் 1020) சங்கனாச்சேரி லட்சுமிபுரம் அரண்மனையில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவரது தாயார் பூரம் நாள் தேவி அம்பா தம்புராட்டி, இவரது தந்தை சிறியூர் முல்லப்பள்ளி நாராயணன் நம்பூதிரி, கண்ணூர் மாவட்டத்தில் பெரிஞ்செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவராவார் (தளிப்பறம்பா). 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் திப்பு சுல்தானின் படையெடுப்பின் போது இவரது குடும்பம் மலபாரிலிருந்து தப்பி திருவிதாங்கூரில் தஞ்சம் புகுந்தது. எவ்வாறாயினும், சண்டை முடிந்த பின்னர், பரப்பநாடு அரச குடும்பம் பிரிட்டிசு அரசாங்கத்திடமிருந்தும் திருவிதாங்கூர் அரசாங்கத்திடமிருந்தும் ஓய்வூதியத்தை ஏற்க ஒப்புக்கொண்டு, திருவிதாங்கூர் மாநிலத்தில் தங்கியிருந்தது.

இவர் சங்கனாச்சேரியில் பிறந்தவர் என்றாலும், இவரது குடும்பத்தினர் பின்னர் ஹரிப்பாட்டுக்குச் சென்று அனந்தபுரம் அரண்மனையில் குடியேறினர். 1859 ஆம் ஆண்டில் இவர் திருவிதாங்கூர் மகாராஜாவான உத்திரம் திருநாளின் வளர்ப்பு மகளான பரணி திருநாள் லட்சுமி பாய் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மூத்த ராணியுடனான இவரது திருமணம் இவரை திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புக்கு கொண்டு வந்தது. எவ்வாறாயினும், பின்னர், அரண்மனை சூழ்ச்சிகள், மகாராஜா ஆயில்யம் திருநாளுடனான தனிப்பட்ட அதிருப்தி ஆகியவற்றின் மூலம் இவர் 1875 ஆம் ஆண்டில் ஹரிப்பாட்டில் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டார். 1880 ஆம் ஆண்டில் மகாராஜா விசாகம் திருநாள் என்பவரால் விடுவிக்கப்பட்டு தனது மனைவியுடன் மீண்டும் இணைந்தார். 1885 ஆம் ஆண்டில் பிரிட்டிசு அரசாங்கம் இவருக்கு இந்திய நட்சத்திரத்தின் ஆணை என்ற கௌரவத்தை வழங்கியது. 1901 ஆம் ஆண்டில் இவரது துணைவியார் ராணி லட்சுமி பாயியின் மரணத்திற்குப் பிறகு, மகாராணி சேது லட்சுமி பாய் உட்பட திருவிதாங்கூரின் மூத்த, இளைய ராணிகள், அவரது இரண்டு பேரக்குழந்தைகளின் பாதுகாவலராக இவர் நியமிக்கப்பட்டார். இவர் 1914 செப்டம்பரில் ஒரு வாகன விபத்தில் இறந்தார்.

இவரது மறைவுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சங்கனாச்சேரியில் இவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இலக்கியப் படைப்புகள்

[தொகு]

கேரள வர்மா கேரளாவின் வடக்கு, தெற்கு பகுதிகளிலும், பாசாபோசினி சபை, வித்யா வினோதினி, மலையாள மனோரமா போன்ற பத்திரிகைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். [1]

காளிதாசரின் சாகுந்தலத்தின் மொழிபெயர்ப்பான அபிக்ஞான சகுந்தலம் (1898) என்ற இவரது படைப்பு அந்தக் காலத்திலிருந்து மலையாள மொழியில் மிகவும் பாராட்டப்பட்ட கவிதைப் படைப்புகளில் ஒன்றாகும். இது சமசுகிருத பாரம்பரியத்தின் பல மொழிபெயர்ப்புகளை மலையாளத்திற்குள் கொண்டு சேர்த்தது. மேலும் மேடையிலும் வெற்றி பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மலையாள இலக்கியத்தின் ஒரு முக்கிய அம்சமாக ஆங்கிலம், சமசுகிருதத்திலிருந்து மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. [1]

இவர், காளிதாசரின் மேகதூதத்தின் வரிசையில் மயூரசந்தேசம் என்ற கவிதை நூலை எழுதியுள்ளார். [1] ) இந்த கவிதையில் இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது மனைவி மகாராணிக்கு தனது செய்திகளை அனுப்ப ஹரிப்பாடு கோயிலின் மயில்களைப் பயன்படுத்தியுள்ளார். விசாகவிஜயம் என்ற இவரது புகழ்பெற்ற படைப்பு விசாகம் திருநாள் அவர்களால் இவர் விடுவிக்கப்பட்டப் பிறகு எழுதப்பட்டது.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Paniker, Ayyappa, "Modern Malayalam Literature" chapter in George, K. M., editor, ' 'Modern Indian Literature, an Anthology' ', pp 231, 236 published by Sahitya Akademi, 1992, retrieved 10 January 2009
  2. Sreedhara Menon, A. Cultural Heritage of Kerala. p. 199.
  • Travancore State Manual by Velu Pillai
  • Visakhavijaya- A Study by Poovattoor Ramakrishna Pillai