கேப் மூவலந்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்னம்பிக்கை முனை; கேப் முனையின் மேலிருந்து கடலோர செங்குத்துப் பாறைகளிலிருந்து மேற்கு நோக்கி.
கேப் மூவலந்தீவின் நிலப்படம்; கேப் டவுன், மேசை மலை, மூவலந்தீவின் முதன்மை மலைகளும் சிகரங்களும், நன்னம்பிக்கை முனையும் காட்டப்பட்டுள்ளன.

கேப் மூவலந்தீவு (Cape Peninsula, ஆபிரிக்கான மொழி: காப்செ இசுகீரீலாந்து) ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகவும் தென்மேற்கு முனையில் அத்திலாந்திக்குப் பெருங்கடலுள் நீண்டுள்ள, பொதுவாக பாறைகளாலான மூவலந்தீவு ஆகும். இந்த மூவலந்தீவின் தென்முனையில் கேப் முனையும் நன்னம்பிக்கை முனையும் உள்ளன. வடக்குப் பகுதியில் மேசை மலை, கேப் டவுனை நோக்கியவாறுள்ளது. இந்த மூவலந்தீவு தெற்கில் கேப் முனையிலிருந்து வடக்கில் மூய்யெ முனைவரை 52 கிமீ நீளம் உள்ளது.[1]

தென்னாப்பிரிக்காவின் கிழக்குக் கடலோரமாக வெப்பமான அகுல்யாசு நீரோட்டமும் (சிவப்பு), மேற்கு கடலோரமாக குளிர்ந்த பெங்குயெலா நீரோட்டமும் (நீலம்) காட்டப்பட்டுள்ளன. பெங்குயெலா நீரோட்டம் தெற்கு அத்தலாந்திக்கு பெருங்கடலில் அந்தார்த்திக்கா நீரிலிருந்து உருவாகவில்லை என்பதைக் கவனிக்கவும்; மாறாக அத்திலாந்திக்கின் குளிர்ந்த ஆழ்கடல் நீர் கண்டப் பெருநிலத்தின் மேற்கு கடலோரத்தில் மேலெழுந்து உருவாகின்றது. ஆப்பிரிக்காவின் தெற்கு கடலோரத்தில் எங்குமே இந்த இரு நீரோட்டங்களும் "சந்திப்பதில்லை" என்பதையும் கவனிக்கவும்.

கடந்த 5 மில்லியன் ஆண்டுகளில் இந்த மூவலந்தீவு தீவாக இருந்தும் இல்லாமலும் இருந்து வந்துள்ளது; பனிக்காலத்தில் உலகளாவிய வெப்பசு சுழற்சிக் காலங்களில் கடல்மட்டம் உயரும் போதும் தாழும் போதும் தீவாகவும் மூவலந்தீவாகவும் இருந்துள்ளது.[2] கடைசியாக சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பாக இது தீவாக இருந்தது.[3] பின்னர் இது பெருநிலப்பகுதியுடன் கடலில் இருந்து உருவான மணற்பாங்கான பகுதி இதனை இணைத்தது; இந்த மணற்பாங்கான பகுதி கேப் சமவெளி எனப்படுகின்றது. கேப் மூவலந்தீவு, கேப் சமவெளியின் ஊர்களும் சிற்றூர்களும் தற்போது கேப் டவுன் பெருநகர நகராட்சியின் அங்கமாக உள்ளன.

நன்னம்பிக்கை முனை சிலநேரங்களில் அத்திலாந்திக்கும் இந்தியப் பெருங்கடலும் சந்திக்கும் இடமாகக் கருதப்படுகின்றது. எனவே மூவலந்தீவின் மேற்கு கடலோரம் "அத்திலாந்திக்கு கடற்கரை" எனவும்[4] கிழக்கு புறம் "பால்சு விரிகுடா கடற்கரை" எனவும் குறிப்பிடப்படுகின்றது. கேப் முனையில்தான் (அல்லது நன்னம்பிக்கை முனையில்) தெற்கிலுள்ள கடல் மேற்கில் அத்திலாந்திக்காகவும் கிழக்கில் இந்தியப் பெருங்கடலாகவும் பிரிகின்றது. இருப்பினும், பன்னாட்டு நீரப்பரப்பிற்குரிய அமைப்பு வரையறுத்துள்ள பெருங்கடல் எல்லைகளின்படி தென் கிழக்கில் ஏறத்தாழ 200 கிமீ (120 மை) தொலைவிலுள்ள கேப் அகுல்யாசில் இவ்விரு பெருங்கடல்களும் சந்திக்கின்றன.[5][6]

இதேபோல, கேப் முனை ஆப்பிரிகாவின் மேற்கு கடலோரமாக செல்லும் குளிர்ந்த பெங்குயெலா நீரோட்டமும் நிலநடுக்கோட்டிலிருந்து கிழக்கு கடலோரமாகச் செல்லும் வெப்பமான அகுல்யாசு நீரோட்டமும் "சந்திக்கும் புள்ளி" நிலையான இடத்தில் இல்லை. தெற்குநோக்கிச் செல்லும் அகுல்யாசு நீரோட்டம் கிழக்கு கடலோரத்திலிருந்து கிழக்கு இலண்டன் மற்றும் எலிசபெத் துறைமுகம் இடையே வெளியே திரும்பி கண்டத் திட்டு விளிம்பையொட்டி கேப் அகுல்யாசிற்கு தெற்கே 250 கிமீ (155 மைல்கள்) தொலைவிலுள்ள அகுல்யாசு கரையின் தெற்கு முனைவரை செல்கிறது.[7] அங்கிருந்து மேற்கு காற்று நீரோட்டம் எனப்படும் தெற்கு அத்திலாந்திக்கு, தெற்கு இந்திய, தென்முனைப் பெருங்கடல் நீரோட்டங்களால், கிழக்குப் புறமாக உடனே திருப்பப்படுகின்றது. பெங்குயெலா நீரோட்டம், தெற்கு ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரமாக அத்திலாந்திக்குப் பெருங்கடலின் ஆழ்பகுதியிலிருந்து கனிமவளம் மிக்க குளிர்ந்தநீரை மேலெழுப்புகின்றது. கடல்மட்டத்தை எட்டியபின்னர் வடக்குமுகமாக ஓடுவதால் கோரியோலிசு விளைவும் காற்றும் உண்டாகின்றது. எனவே பெங்குயெலா நீரோட்டம் கேப் முனையிலிருந்து கிளம்பி வடக்குமுகமாக பாய்கின்றது.[7][8] எனவே பெங்குயெலா, அகுல்யாசு நீரோட்டங்கள் எங்கும் சந்திப்பதில்லை.[7][8]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1:250,000 Geological Series map 3318:Cape Town, Government Printer, Pretoria, 1990.
  2. Compton, John S. (2004) The Rocks & Mountains of Cape Town. Cape Town: Double Story. ISBN 978-1-919930-70-1
  3. Parkington John (2006). Shorelines, Strandlopers and Shell Middens. p. 69. DTP & Production: Neil Rusch Southern Cross Ventures, Kenilworth, Cape Town.
  4. http://www.discoverthecape.com/atlantic-coast.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2006-11-08. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  6. http://www.southafrica.info/about/geography/oceansmeet.htm
  7. 7.0 7.1 7.2 Branch, M & Branch G. (1981). The Living Shores of Southern Africa. pp. 14-18. Struik Publishers, Cape Town.
  8. 8.0 8.1 Tyson, P.D., Preston-Whyte, R.A. (2000) The Weather and Climate of Southern Africa. pp. 221-223. Oxford University Press, Cape Town
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்_மூவலந்தீவு&oldid=3551398" இலிருந்து மீள்விக்கப்பட்டது