கேப்டன் பிலிப்சு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன் பிலிப்சு
இயக்கம்பால் கிரீன்கிராசு
தயாரிப்பு
  • இசுகாட் ருடின்
  • டானா புரூனெட்டி
  • மைக்கேல் டி லூகா
மூலக்கதைஎ கேப்டன்'ஸ் டூட்டி
படைத்தவர் ரிச்சார்ட் பிலிப்சு
இசுடீபன் டால்டி
திரைக்கதைபில்லி ரே
இசைஹென்றி ஜாக்மன்
நடிப்பு
ஒளிப்பதிவுபேரி அக்ரோய்டு
படத்தொகுப்புகிரிஸ்டோபர் ரூசு
கலையகம்
  • கொலம்பியா பிக்சர்ஸ்
  • இசுகாட் ருடின் புரோடக்சன்ஸ்
  • மைக்கேல் டி லூகா புரோடக்சன்ஸ்
  • டிரிக்கர் ட்ரீட் புரோடக்சன்ஸ்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் ரிலீசிங்
வெளியீடுசெப்டம்பர் 27, 2013 (2013-09-27)(நியூயார்க் திரைப்பட விழா)
அக்டோபர் 11, 2013 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்2:14 மணி நேரம்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழி
ஆக்கச்செலவுஐஅ$55 மில்லியன் (393.3 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$218.8 மில்லியன் (1,564.8 கோடி)[2]

கேப்டன் பிலிப்சு (Captain Phillips) என்பது 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அமெரிக்க சுயசரிதை நாடகத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பால் கிரீன்கிராசு இயக்க டொம் ஹாங்க்ஸ் மற்றும் பர்கத் அப்தி ஆகியோர் நடித்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு மாயர்ஸ்கு அலபாமா கப்பல் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[3] இக்கடத்தலின் போது வணிக மாலுமி கேப்டன் ரிச்சர்டு பிலிப்சு, குவர்தாபுயி கால்வாயில் அப்துவாலி மூசு தலைமையிலான சோமாலியக் கடற்கொள்ளையர்களால் பணயக்கைதியாகப் பிடிக்கப்பட்டார்.

இப்படத்திற்கான திரைக்கதையை பில்லி ரே எழுதினார். இத்திரைக்கதையானது 2010 ஆம் ஆண்டு ரிச்சர்டு பிலிப்சு மற்றும் இசுடீபன் டால்டி இணைந்து எழுதிய எ கேப்டன்'ஸ் டியூட்டி: சோமாலி பைரேட்ஸ், நேவி சீல்ஸ், அண்ட் டேஞ்சரஸ் டேஸ் அட் சீ என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டதாகும். இசுகாட் ருடின், டானா புரூனெட்டி மற்றும் மைக்கேல் டி லூகா ஆகியோர் இப்படத்திற்குத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். இந்தத் திரைப்படம் 2013 ஆம் ஆண்டு நியூயார்க் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது,[4] திரையரங்குகளில் அக்டோபர் 11, 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஐஅ$55 மில்லியன் (393.3 கோடி) செலவில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஐஅ$218.8 மில்லியன் (1,564.8 கோடி) வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றது. 2014ல், சிறந்த திரைப்படம், சிறந்த தழுவிய திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட ஆறு அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்காக பர்கத் அப்தி பரிந்துரைக்கப்பட்டார்.[5][6]

கதைச்சுருக்கம்[தொகு]

எம் வி மாயர்ஸ்கு அலபாமா என்ற ஆயுதமற்ற கொள்கலக் கப்பலின் தலைமையை ரிச்சர்ட் பிலிப்சு ஏற்றுக்கொள்கிறார். ஓமானின் சலாலா துறைமுகத்திலிருந்து கென்யாவின் மொம்பாசாவிற்கு குவர்தாபுயி கால்வாய் வழியாகச் செல்ல வேண்டுமென அவருக்கு ஆணையிடப்படுகிறது. ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியை ஒட்டிய கடல் பகுதிகளில், கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் பற்றி அறிந்த அவரும் அவரது முதல் அதிகாரி சேன் முர்பியும் கப்பலில் கடுமையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு ஒத்திகைகளையும் நடத்துகின்றனர். ஒரு ஒத்திகையின் போது கப்பலானது இரு வெவ்வேறு வடிவமுடைய படகுகளில் உள்ள சோமாலியக் கடற்கொள்ளையர்களால் துரத்தப்படுகிறது. பிலிப்சு உதவிக்காக அழைக்கிறார். வானொலிச் செய்திகளைக் கடற்கொள்ளையர்கள் ஒட்டுக் கேட்பதை அறிந்த அவர் ஒரு போர்க்கப்பலை அழைப்பது போலப் பாசாங்கு செய்கிறார். உடனடியாக வான்வழிப் பாதுகாப்பையும் கேட்கிறார். இதற்குப் பலனாக ஒரு படகு திரும்பிச் செல்கிறது. அப்துவாலி மூசு தலைமையில், கனரக ஆயுதங்களையுடைய 4 கடல் கொள்ளையர்களை கொண்ட படகு திரும்பிச் செல்லும்போது படகின் எந்திரம் பழுதாகிறது.

அடுத்த நாள், இரண்டு வெளிப்புற எந்திரங்கள் பொருத்தப்பட்ட மூசுவின் படகு, அதே நான்கு கடற்கொள்ளையர்களுடன் திரும்ப வருகிறது. பிலிப்சு மற்றும் அவரது குழுவினர் சிறந்த முயற்சிகளை எடுத்தும் கடற்கொள்ளையர்கள் மாயர்ஸ்கு அலபாமா மீது தங்களது ஏணியை இடுகின்றனர். கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறும் போது பிலிப்சு தனது குழுவினரிடம் இயந்திர அறைக்குள் ஒளிந்து கொள்ளுமாறு கூறுகிறார். கடற்கொள்ளையர்களிடம் தானே பிடிபடுகிறார். கப்பலின் பெட்டகத்தில் இருந்த ஐஅ$30,000 (21,45,480) பணத்தை மூசுக்குக் கொடுக்கிறார். ஆனால் மூசுக்கு இடப்பட்ட கட்டளையானது, கப்பல் மற்றும் அதன் குழுவினரைப் பிடித்துக் கொண்டு, அதற்குப் பதிலாக கப்பல் நிறுவனத்திடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்கள் காப்பீட்டு பணத்தை பெற வேண்டும் என்பதே ஆகும். கடற்கொள்ளையர்கள் கப்பலைச் சோதனையிடும் போது முர்பி, இருப்பதிலேயே இளம்வயது கடற்கொள்ளையன் பிலாலின் காலில் செருப்புகள் இல்லை என்பதை கவனிக்கிறார். இயந்திர அறையின் நடைபாதையில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளை இடுமாறு தனது குழுவினருக்குக் கூறுகிறார். தலைமைப் பொறியாளர் மைக் பெர்ரி கப்பலின் மின்சாரத்தைத் துண்டிக்கிறார். இதன் காரணமாக கப்பலின் கீழ் அடுக்குகள் இருளில் மூழ்குகின்றன. இயந்திர அறையை அடையும்போது பிலாலின் காலில் கண்ணாடித் துண்டுகள் குத்துகின்றன. இதன்காரணமாக மூசு தனியாளாகக் கப்பலைச் சோதனையிடுகிறான். ஒளிந்திருந்த கப்பல் குழுவினர் மூசைத் தாக்குகின்றனர். கத்திமுனையில் பிடிக்கின்றனர். ஒரு உயிர்காப்புப் படகில் செல்ல மூசு மற்றும் அவனது கடற்கொள்ளையர்களுக்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் மூசின் வலது கரமான நோவுர் நஜீ, பிலிப்சு தங்களுடன் வராவிட்டால் உயிர்காப்புப் படகில் செல்லமாட்டோம் என மறுக்கிறான். அனைவரும் உயிர்காப்புப் படகில் ஏறிய பிறகு நஜீ பிலிப்சைத் தாக்குகிறான். பிலிப்சை அப்படகிற்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளுகிறான். பிறகு படகு ஐந்து பேருடன் தண்ணீரில் விடப்படுகிறது.

உயிர்காப்புப் படகானது சோமாலியாவிற்குப் பயணத்தைத் தொடரும்போது, போதை தரக்கூடிய காட் தாவரப் பற்றாக்குறை காரணமாக கடற்கொள்ளையர்களுக்கு இடையில் சச்சரவுகள் ஏற்படுகின்றன. கடற்கொள்ளையர்கள் தங்களது முதன்மைக் கப்பலுடன் தொடர்பை இழக்கின்றனர். குழம்பிய நஜீ, பிலிப்சைக் கொல்லத் தனது குழுவினரின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறான். பிறகு அவர்கள் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் தாக்குதல் கப்பலான யுஎஸ்எஸ் பெயின்பிரிட்ஜால் இடைமறிக்கப்படுகின்றனர். கடற்கொள்ளையர்கள் சோமாலியக் கடற்கரையை அடையும் முன்னர், அவர்களை எப்படியாவது தடுக்க பெயின்பிரிட்ஜின் கேப்டன் பிராங்க் கேஸ்டெல்லானோவிற்கு ஆணையிடப்படுகிறது. மேலும் சில கப்பல்கள் வந்த பிறகும், தான் நீண்ட தூரம் வந்து விட்டதாகவும் தன்னால் சரணடைய முடியாது எனவும் மூசு உறுதியாகக் கூறுகிறான். அவனது மனதை மாற்றப் பேச்சுவார்த்தை நடத்துபவர்களால் முடியவில்லை. இதனிடையில் ஒரு டேவ்க்ரு சீல் அணியானது பாராசூட் மூலம் இடைமறிப்பதற்காகக் குதிக்கிறது. பிலிப்சு உயிர்காப்புப் படகிலிருந்து தப்புவதற்கு முயற்சிக்கிறார். ஆனால் தனது முயற்சியில் தோல்வி அடைகிறார். அவர் பிடிக்கப்பட்டு நஜீயால் தாக்கப்படுகிறார்.

சீல் குறிவல்லவர்கள் தங்களது குறிகளை வைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், கேஸ்டெல்லானோ மற்றும் சீல்கள் ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இறுதியாக உயிர்காப்புப் படகைத் தங்களது தாக்குதல் கப்பலுடன் கயிறு மூலம் இணைக்கின்றனர். பெயின்பிரிட்ஜ் கப்பலுக்கு வர மூசு ஒத்துக் கொள்கிறான். அவனது இன மூத்தவர்கள் பிலிப்சின் பணயத்தொகையைப் பேசுவதற்காக வந்துள்ளதாக அவனிடம் கூறுகின்றனர். உயிர்காப்புப் படகில் தான் ஒருவேளை கொல்லப்பட்டால் தனது மனைவிக்காக ஒரு இறுதிக் கடிதத்தைப் பிலிப்சு எழுதிக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் உயிர்காப்புப் படகின் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுத்துக் கொள்ள நஜீ முடிவெடுக்கிறான். பிலிப்சு கடிதத்தை எழுதுவதை நஜீ காண்கிறான். அவரை மேலும் தாக்குகிறான். பிலிப்சு பதிலுக்கு நஜீயுடன் மல்யுத்தம் செய்கிறார். ஆனால் அவரது முதுகில் ஏகே-47 மூலம் பிலால் தாக்குகிறான். பிலிப்சுக்குக் காயம் ஏற்படுகிறது. பிலிப்சு கட்டாயம் கொல்லப்பட வேண்டும் என பிலால் மற்றும் எல்மியின் சம்மதத்தைப் பெற நஜீ முயற்சிக்கிறான். கடற்கொள்ளையர்கள் பிலிப்சின் கண்களை மூடுகின்றனர். கடைசியாக பேச அவருக்கு நேரம் ஒதுக்குகின்றனர். கடற்கொள்ளையர்கள் பிலிப்சைச் சுடத் தயாராகும்போது பெயின்பிரிட்ஜின் குழு கயிறை நிறுத்துகிறது. இதன்காரணமாக பிலால் மற்றும் நஜீ நிலைகுலைகின்றனர். குறிவல்லவவர்களுக்கு ஒரே நேரத்தில் மூன்று தெளிவான இலக்குகள் கிடைக்கின்றன. கடற்கொள்ளையர்களை ஒரேநேரத்தில் சுடுகின்றனர். மூசு கைது செய்யப்படுகிறான். கடற்கொள்ளையில் ஈடுபட்ட காரணத்திற்காகச் சிறைக் காவலில் வைக்கப்படுகிறான். பிலிப்சு உயிர்காப்புப் படகிலிருந்து மீட்கப்பட்டு, அவருக்கு மருத்துவ உதவிகள் கொடுக்கப்படுகின்றன. அதிர்ச்சியடைந்து மற்றும் நிலைகுலைந்து இருந்தபோதிலும் பிலிப்சு தனது உயிரைக் காப்பாற்றியதற்காகக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கிறார்.

உசாத்துணை[தொகு]