கேனரித் தீவு வானியற்பியல் நிறுவனம்


கேனரித் தீவு வானியற்பியல் நிறுவனம் (Institute of Astrophysics of the Canary Islands) என்பது எசுப்பானியாவின் கேனரி தீவுகளில் அமைந்துள்ள ஒரு வானியற்பியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 1975 ஆம் ஆண்டில் லா லகுனா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. [1] இது கேனரி தீவுகளில் இரண்டு வானியல் ஆய்வகங்களை இயக்குகிறது: லா பால்மாவில் உள்ள ரோக் டி லாசு முச்சாச்சோசு ஆய்வகம் மற்றும் டெனெரிஃபேவில் உள்ள டெய்டே ஆய்வகம் என்பன இவ்விரண்டு ஆய்வகங்களாகும். இதன் தலைமையகம் டெனெரிஃபே தீவில் உள்ள லா லகூனா நகரத்தில் அமைந்துள்ளது.
கேனரித் தீவு வானியற்பியல் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் வாலண்டின் மார்டினெசு பில்லெட்டு என்பவராவார்.[2] இவர் 2024 ஆம் ஆண்டு சூலை மாதம் 1 ஆம் தேதியன்று இரஃபேல் ரெபோலோ லோபசைத் தொடர்ந்து பொறுப்பேற்றார். 2016-ஆம் ஆண்டில், ஆங்கிலேய விஞ்ஞானி சிடீபன் ஆக்கிங் கேனரித் தீவு வானியற்பியல் நிறுவனத்தின் கௌரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். நிறுவனம் மேற்கொண்ட இத்தகைய முதல் நியமனம் இதுவாகும்.[3][4]
பிரபஞ்சத்தின் தோற்றம், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள், கோள்கள், சூரியன் மற்றும் அண்டவெளியின் இயற்பியல் போன்ற பல துறைகளில் இந்த நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொள்கிறது. மேலும், புதிய தொலைநோக்கிகள் மற்றும் வானியல் கருவிகளை வடிவமைத்து உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐரோப்பா மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து பன்னாட்டு அளவில் பல்வேறு வானியல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. புதிய விண்மீன்கள், புறக்கோள்கள், சூரிய இயற்பியல் மற்றும் அண்டவெளி தொடர்பான பல முக்கிய கண்டுபிடிப்புகளில் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Home". Instituto de Astrofísica de Canarias. Retrieved 6 September 2015.
- ↑ "Valentin Martínez Pillet takes office as Director of the IAC | Instituto de Astrofísica de Canarias • IAC". www.iac.es. Retrieved 2026-01-11.
- ↑ Stephen Hawking, Profesor Honorario en Canarias
- ↑ Director del IAC recuerda a brillante científico y a un luchador por la vida