கேசெக்ரெய்ன் எதிரொளிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேசெக்ரெய்ன் எதிரொளிப்பான் என்பது பொதுவாக தொடக்கநிலையில் குழிந்த எதிரொளிப்பானையும் பின்னிலையில் குவிந்த எதிரொளிப்பானையும் ஒருங்கே கொண்ட ஓரமைப்பு. பொதுவாக ஒளியியல் தொலைநோக்கியிலும், அலைக்கம்பத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

கேசெக்ரெய்ன் தொலைநோக்கியில் ஒளித்தடம்

சமச்சீர் கேசெக்ரெய்ன் அமைப்பில் இவ்விரு ஆடிகளும் ஒளியியல் அச்சில் நேர்படுத்தப்பட்டிருக்கும். தொடக்கநிலைக்குழியாடியின் நடுவே துளையொன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தொலைநோக்கியில், ஒளிக்கற்றையானது கண்ணருகுப்பகுதியை அடைய இத்துளை பயன்படுகிறது. அலைக்கம்பங்களில் மின்காந்தலைகள் ஏற்பானையடைய இத்துளை பயன்படுகிறது. சமச்சீரற்ற கேசெக்ரெய்ன் அமைப்பில் சமதள ஆடிகள்/எதிரொளிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு அமைப்பிற்கு வெளியே ஒளிக்கற்றை/அலைக்கற்றையானது குவிக்கப்படலாம்.

செம்மையான கேசெக்ரெய்ன் அமைப்பில் தொடக்கநிலை எதிரொளிப்பானாக குழிந்த பரவளைய எதிரொளிப்பானும் பின்னிலை எதிரொளிப்பானாக குவிந்த அதிபரவளைய எதிரொளிப்பானும் பயன்படுகின்றன[1]. செயல்திறனை ஏற்றம் செய்யும்பொருட்டு புதுவித கேசெக்ரயின் அமைப்பில் முன்னிலை எதிரொளிப்பானாக குழிந்த அதிபரவளைய எதிரொளிப்பானானது பயன்படுத்தப்படுகிறது. அல்லது உருவாக்கச் சிக்கலை குறைக்கும் பொருட்டு சில அமைப்புகளில் கோளகமுகப்பு அல்லது நீள்கோளமுகப்பு எதிரொளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

லாரென்ற் கேசெக்ரெய்ன் என்பவரின் இத் தொலைநோக்கி வடிவமைப்பானது 1672 எப்ரல் 25 அன்று "des sçavans" என்ற ஆய்விதழில் வெளிவந்தது[2] . இதன் காரணமாகத்தான் இவ்வமைப்பு கேசக்ரெய்ன் வடிவமைப்பு என்றழைக்கப்படுகிறது. குவிந்தபரப்பை பின்னிலையில் பயன்படுத்தும் இதையொத்த வடிவமைப்புகள் எரியாடிகளைப்பற்றி சொல்லும் பொனவெஞ்சுரா கவலியரி இன் 1632 ஆம்-ஆண்டு எழுத்துகளிலும்[3][4] மரின் மெர்சென்னெ இன் 1636 ஆம்-ஆண்டு எழுத்துகளிலும் உள்ளன[5]. 1662 ஆம் ஆண்டு ஜேம்ஸ் க்ரெகோரி எதிரொளிப்பு தொலைநோக்கியை உருவாக்க முயன்றார், அச்சோதனைகளில் பின்னிலையில் குவியாடியைப் பயன்படுத்தும் கேசெக்ரயின் அமைப்புமிருந்தது[6].

மேற்கோள்கள்[தொகு]