கேசவ சந்திர நாக்
கேசவ சந்திர நாக் | |
|---|---|
குராப்பில் உள்ள கே.சி. நாக் நினைவிடம் | |
| பிறப்பு | 10 ஜூலை 1893 குராப், ஹூக்ளி மாவட்டம், வங்காள மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா (தற்போதைய மேற்கு வங்காளம், இந்தியா)[1] |
| இறப்பு | 6 பெப்ரவரி 1987 (அகவை 93) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
| தொழில் | கணிதவியலாளர், ஆசிரியர், கணிதப் புத்தகங்களின் ஆசிரியர். |
| வகை | கணிதவியலாளர் |
| இலக்கிய இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| துணைவர் | லட்சுமிமணி தேபி |
கேசவ சந்திர நாக் எனும் கே.சி. நாக் (K. C. Nag) (10 சூலை 1893 – 6 பெப்ரவரி 1987) ஓர் இந்திய வங்காளக் கணிதவியலாளரும், கணிதப் பாடப்புத்தகங்களின் ஆசிரியரும், கல்வியாளரும் ஆவார்.[2][3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கே.சி. நாக், பிரித்தானிய இந்தியாவின் வங்காளப் பகுதியில் (தற்போதைய மேற்கு வங்காளம்) உள்ள ஹூக்ளி மாவட்டத்தின் குராப் பகுதியில் உள்ள நாக்பாராவில், 1893-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி, புனிதமான ரத யாத்திரை நாளன்று பிறந்தார். இவரது தந்தை ரகுநாத் நாக், தாய் கிரோதா சுந்தரி தேவி ஆவர். இவர் தனது மூன்றாவது வயதிலேயே தந்தையை இழந்தார்; அதன் பிறகு இவரது தாயார் மட்டுமே இவரைப் பராமரித்து வந்தார்.[2]
கல்வி
[தொகு]கேசப் சந்திர நாக் தனது கல்வியை குராப்பில் உள்ள தனது கிராமத்தில் இருந்த ஒர் வங்காள மொழிப் பள்ளியில் தொடங்கினார். அக்காலத்தில் குராப்பில் இருந்த ஒரே பள்ளி அதுதான். ஏழாம் வகுப்பிலிருந்து, இவர் தனது கிராமத்திலிருந்து 3 மைல் தொலைவில் இருந்த பாஸ்தாரா யோஜ்னேஷ்வர் உயர்நிலைப் பள்ளிக்கு மாறினார். ஒன்பதாம் வகுப்பில் இவர் கிஷன்கஞ்ச் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.[2] 1912-ஆம் ஆண்டில், இவர் நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கொல்கத்தாவில் உள்ள ரிப்பன் கல்லூரியில் (தற்போது சுரேந்திரநாத் கல்லூரி) அறிவியல் பிரிவில் சேர்ந்தார். 1914-ஆம் ஆண்டில், இவர் (இடைநிலை அறிவியல்) தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.[2] அதன் பிறகு, கடுமையான நிதி நெருக்கடி காரணமாக இவரால் கல்வியைத் தொடர முடியாமல் போனது; எனவே, இவர் வருமானம் ஈட்டத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[4]
பணி வாழ்க்கை
[தொகு]இவர் தனது பணி வாழ்க்கையை பாஸ்தாரா யோஜ்னேஷ்வர் உயர்நிலைப் பள்ளியில் 'மூன்றாம் நிலை ஆசிரியர்' ஆகத் தொடங்கினார். அங்கு கற்பிக்கும்போதே இவர் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்குக் கணிதப் பாடங்களைக் கற்பித்தார். இவரது குடும்பம் இவரைச் சார்ந்தே இருந்தது, இருப்பினும் உயர்கல்வியைத் தொடர இவர் பணித்துறப்புச் செய்தார். 1917-ஆம் ஆண்டில் கணிதம் மற்றும் சமஸ்கிருதப் பாடங்களுடன் பி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர், கிஷன்கஞ்ச் உயர்நிலைப் பள்ளியிலிருந்து கணித ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அப்பள்ளியில் சிறிது காலம் கற்பித்த பிறகு, பகரம்பூர் கிருஷ்ணநாத் கல்லூரியுடன் இணைந்த பள்ளியிலிருந்து மற்றொரு வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது; அங்கு இவர் கணித ஆசிரியராகச் சேர்ந்தார்.[2]1919-இல் இவர் மா சாரதா தேவியிடமிருந்து தீட்சை பெற்றார். அக்காலத்தில் காசிம்பஜார் மகாராஜா மனிந்திர சந்திர நந்தி, கேசப் சந்திராவின் தீவிர அபிமானியாகத் திகழ்ந்தார். மகாராஜா தனது பரந்த நூலகத்தைப் பயன்படுத்த கேசப் சந்திராவை அனுமதித்தார். அந்த நூலகத்தில், இவர் இந்திய வரலாறு, குறிப்பாகக் கணித வரலாறு குறித்து விரிவாகப் பயின்றார். ஆரம்பத்தில், இவர் கொல்கத்தாவின் ரோசா சாலையில் உள்ள ஒர் தங்கும் விடுதியில் வசித்து வந்தார். 1964 முதல், இவர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள கோவிந்த கோஷல் லேனில் அமைந்திருந்த தனது சொந்த வீட்டில் வசிக்கத் தொடங்கினார்.
அசுதோஷ் முகோபாத்யாயுடனான சந்திப்பு
[தொகு]தெற்கு கொல்கத்தா மாணவர்களும் பயிலும் வாய்ப்பைப் பெறும் வகையில், 1905-ஆம் ஆண்டில் சர் அசுதோஷ் முகோபாத்யாய் பவானிபூரில் மித்ரா நிறுவனப் (கிளை) பள்ளியை நிறுவினார். 1906-இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற சர் அசுதோஷ், அப்பல்கலைக்கழகத்தை இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்களைக் கொண்டுவர முயன்றார். அதேபோல, மித்ரா நிறுவனப் (கிளை) பள்ளிக்கும் ஆசிரியர்களைக் கொண்டுவர இவர் முயற்சித்தார். கேசப் சந்திராவைப் பற்றிக் கேள்விப்பட்ட சர் அசுதோஷ், இவரை பவானிபூரில் உள்ள மித்ரா இன்ஸ்டிடியூஷனுக்குக் கணித ஆசிரியராக அழைத்துச் சென்றார்.[2] கணிதத்தைக் கற்பித்த விதத்தின் காரணமாக, கேசப் சந்திரா சர் அசுதோஷுக்கு மிகவும் நெருக்கமானார். சர் அசுதோஷின் மகனான டாக்டர் ஷ்யாமாபிரசாத் முகோபாத்யாய், கேசப் சந்திராவின் நல்ல நண்பரானார்; இவர் கேசப் சந்திராவை அரசியலில் சேருமாறு கேட்டுக்கொண்டார், ஆனால் கேசப் சந்திரா அதை மறுத்துவிட்டார்.
கணித நூல்கள்
[தொகு]1909-இல் சர் அசுதோஷ் தனது ஆசிரியரான சியாமாசரண் போசுடன் இணைந்து (பள்ளிகளுக்கான எண்கணிதம்) என்ற நூலை எழுதினார். சர் அசுதோஷின் மறைவுக்குப் பிறகு, இவரது மகன் சியாமாபிரசாத் முகோபாத்யாய் அந்த நூலைத் திருத்தி அமைக்கும் முயற்சியை மேற்கொண்டார், மேலும் தனக்கு உதவுமாறு கேசப் சந்திராவைக் கேட்டுக்கொண்டார். கேசப் சந்திர நாக் மற்றும் சில கணிதவியலாளர்களின் அயராத உழைப்பிற்குப் பிறகு, 1937-இல் "பாடிகணித்" என்ற பெயரில் அந்த நூலின் திருத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது. கவிசேகர் காளிதாஸ் ராய், கேசப் சந்திர நாக்கின் சக ஊழியராக இருந்தார். 'கவிசேகர்' இவர்களின் இல்லத்தில் சரத் சந்திர சட்டோபாத்யாய், பிரேமேந்திர மித்ரா போன்ற கல்வி மற்றும் இலக்கியத் துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகள் வழக்கமாக ஒன்றுகூடுவது வழக்கம்; கேசப் சந்திராவும் அந்தச் சந்திப்புகளில் தவறாமல் கலந்துகொள்பவராக இருந்தார். ஒர் நாள், சரத் சந்திர சட்டோபாத்யாய் ஒர் கணிதப் புத்தகத்தை எழுதுமாறு கேசப் சந்திராவிடம் கேட்டுக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, கவிசேகரும் அதே கோரிக்கையை விடுத்தார். புத்தகத்தை எழுதுவதா வேண்டாமா என்று கேசப் சந்திரா மிகுந்த குழப்பத்தில் இருந்தார்; இறுதியில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதை எழுத முடிவு செய்தார். 'யு.என். தார் அண்ட் சன்ஸ்' நிறுவனத்தின் மூலம் வெளியான 'நவ பாடிகணித்' என்பதே இவரது முதல் புத்தகமாகும். குறுகிய காலத்திலேயே, இந்தப் புத்தகம் ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. 1942-ஆம் ஆண்டில், கே.சி. நாக் எழுதிய புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்றான 'மேட்ரிக் மேத்தமேட்டிக்ஸ்' நூலை 'கல்கத்தா புக் ஹவுஸ்' வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக இவர் மேலும் பல புத்தகங்களை எழுதினார். இந்தப் புத்தகங்கள் பெங்காலி, ஆங்கிலம், இந்தி, உருது மற்றும் நேபாளி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டன. இவரது இளைய மகன் மறைந்த தாராபிரசாத் நாக், "நாக் புக் ஹவுஸ்" என்ற பெயரில் சொந்தமாக ஒர் பதிப்பகத்தைத் தொடங்கினார். இப்பதிப்பகம் தற்போது "நாக் பப்ளிஷிங் ஹவுஸ்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இவரது பேரனான டாக்டர் திரிதிபேஷ் நாக் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திரிதிபேஷ் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பி.இ. மற்றும் எம்.இ. பட்டங்களைப் பெற்றார். அதன் பிறகு, இவர் பதிப்பகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "কে সি নাগের অঙ্ক বই তো জানেন, এবার জেনে নিন কে সি নাগের আসল পরিচয়".
- 1 2 3 4 5 6 Chowdhury, Susnato (14 July 2013). "কে সি নাগ". Anandabazar Patrika இம் மூலத்தில் இருந்து 23 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130723103259/http://www.anandabazar.com/archive/1130714/14rabipro1.html. பார்த்த நாள்: 26 August 2013.
- ↑ "48 textbooks, do the math". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2023-07-17.
- ↑ NANDI, SOUMITRA (2018-07-12). "Famous mathematician KC Nag's 125th birthday to be celebrated in grand way". www.millenniumpost.in (in ஆங்கிலம்). Retrieved 2021-01-13.
- ↑ "About Us". Nag Publishing House. Archived from the original on 21 January 2012. Retrieved 18 December 2013.