கேசவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேசவன் என்ற பெயர்ச் சொற்பொருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கேசவன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு முறை வரும் பெயர். 23-வது பெயராகவும், 648-வது பெயராகவும் வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் முதற் பெயர்.இதற்கு பல விதப் பொருள்கள் சொல்லப்படுகின்றன.

மகாபாரத காவியத்தில், திருதராட்டிரன் கிருஷ்ணரின் வேறு பெயர்களை கூறுமாறு சஞ்சயனிடத்தில் கேட்கும் போது, கிருஷ்ணருக்கு கேசவன் என்ற பெயரும் உள்ளதாக தெரிவித்தான்.[1]

  • 'குழலழகர்' அல்லது 'அழகிய கூந்தலை உடையவர்' என்று ஒரு பொருள். ஆதி சங்கரருடைய உரையில் இதை 'கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் அழகிய கேசங்கள் உள்ளவர்' என்கிறார்.நரசிங்க வடிவில் விஷ்ணுவின் பிடரிமுடி மிக அழகானது.வான்மீகிராமாயணத்தில் இராமரின் கேசங்களின் அழகை மாரீசனும்,[2] விசுவாமித்திரரும்[3] வர்ணிக்கின்றனர். ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகளும் கண்ணனின் கேசங்களை வர்ணிக்கின்றனர் [4].
  • கேசி என்னும் அசுரனைக் கண்ணன் கொன்றதால் கேசவன் என்ற பெயர் என்று விஷ்ணு புராணம் கூறும்.இதை ஆமோதித்து விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே 'கேசிஹா' - கேசியைக் கொன்றவர் என்ற பெயரும் வருகிறது.
  • க: - பிரம்மா, அ: - விஷ்ணு, ஈச: - பரமசிவன் ஆகிய இம்மூன்று வடிவங்களையும் தம் வசத்தில் கொண்டவர், என்றும் இன்னொரு பொருள் கூறுகிறார் ஆதி சங்கரர். இதனால் 'கேசவ' என்ற சொல், பெயரும் உருவமுமில்லாத பரம்பொருளைக் குறிப்பதாகும் என்பது அத்வைத வேதாந்தத்தின் கூற்று.
  • 'சூரியன் முதலானவர்களிடமுள்ள கிரணங்களுக்குரியவர்' என்பது இன்னொரு பொருள். இதுவே வேறுவிதமாகவும் சொல்லப்படுகிறது: சூரியன் முதலிய ஒளி மண்டலங்களில் தன் நுண்ணிய ரோமம் போன்ற ஒளிக் கதிர்களைப் பரவச் செய்தும் அம்மண்டலங்களில் உள்ளுறைபவனாகவும் ஒளி விடுபவர்.[5].
  • பிரம்மா, விஷ்ணு, ருத்திரர் இம்மூவரும் கேசங்கள் எனப்பெறுவர்.அவர்களை சக்தியாகக்கொண்ட பரம்பொருள்.
  • அக்னி, சூரியன், வாயு, என்ற மூன்று சக்திகள் கொண்டவர்.[6].
  • அசுரர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்குவதற்காக தேவர்களால் வேண்டப்பட்ட விஷ்ணு தனது முடியிலிருந்து கரு நிறமும் வெண்ணிறமும் கொண்ட இரு கேசங்களைப்பிடுங்கி இவை கண்ணனாகவும் பலராமனாகவும் தோன்றி உதவுவர் என வரம் தந்தார் என விஷ்ணு புராணம் கூறுகிரது. [7].
  • பராசர பட்டர் ஹரிவம்சத்திலிருந்து மேற்கோள் காட்டி பரமசிவன் விஷ்ணுவிடம் சொல்லியதாகச்சொல்கிறார்: 'க: என்றால் பிரம்மா, நான் ஈசன். நாங்களிருவரும் உன் உடலிலிருந்து பிறந்தோம். அதனால் உன் பெயர் கேசவன்' [8].

திருவாய்மொழியில்[தொகு]

நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10-2-1)கேசவன் என்னும் பெயரைச் சொல்லவே துன்பம் என்று பெயர் பெற்றன எல்லாம் கெடும்; ஞானம் பிறக்குமுன் செய்த பாவங்களும், பிறந்தபின் மறந்து செய்யும் பாவங்களும் தாமே அழியும். நாள்தோறும் கொடிய செயலைச் செய்யும் யமனுடைய தூதர்களும் வந்து கிட்டமாட்டார்கள், என்கிறார்:

கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்.

துணை நூல்கள்[தொகு]

* சி.வெ. ராதாகிருஷ்ண சாஸ்திரி. ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.
  • Shri Vishnu Sahasranama, with the Bhashya of Parasara Bhattar. Trans.Prof. A. Srinivasa Raghavan. Sri Vishishtadvaita Pracharini Sabha, Mylapore, Madras. 1983.
  • Complete Works of Sri Sankaracharya, in the Original Sanskrit. Vol.V: Laghu Bhashyas. Samata Books. Madras. 1982

மேற்கோள்கள்[தொகு]

  1. கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்
  2. 'சிகீ கனக மாலயா' வான்மீகிராமாயனம். 3-38-14
  3. 'காகபக்ஷதரோ தன்வீ' வான்மீகிராமாயணம் 1- 22 - 6
  4. 'குடில குந்தலம் கோமளானனம்'.ஸ்ரீமத் பாகவதம், 10-31-15
  5. மஹாபாரதம், சாந்தி பர்வம்,350-48
  6. ருக்வேத ஸ்ம்ஹிதை. 1-164-41
  7. விஷ்ணு புராணம், 5-1-59-63.
  8. ஹரிவம்சம்.279.47.131-48.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவன்&oldid=2928927" இலிருந்து மீள்விக்கப்பட்டது