உள்ளடக்கத்துக்குச் செல்

கெபாங் கோயில், யோக்யகர்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்மேற்கு மூலையில் இருந்து கெபாங் கோயிலின் தோற்றம்

கெபாங் கோயில் (Gebang) (இந்தோனேசிய மொழி: Candi Gebang) என்பது இந்தோனேஷியாவில் யோக்யாகர்த்தாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள, 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்துக்கோவில் ஆகும். இந்தக் கோயில் மெடாங்க் ராச்சியத்தின் போது ஸ்லேமான், நகம்பிளாக் என்னுமிடத்திலுள்ள வெடோமாரிடானியில் கெபாங் என்னுமிடத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.

இந்தக் கோயில் தொடர்பான வரலாற்று பின்னணிகளோ அல்லது கல்வெட்டு பதிவுகளோ எதுவும் இல்லை. இருப்பினும், கோயில் பகுதிகளின் பாத அல்லது கால் பகுதிகளின் அதிக அளவு விகிதாச்சாரத்தை வைத்து நோக்கும் நிலையில் இந்த கோயில் மேதாங் மாதரம் இராச்சியத்தின் பழைய காலத்தில் (சி. 730 முதல் 800 வரையேயான இடைப்பட்ட காலம்) கட்டப்பட்டதாக அறியமுடிகிறது. என்பதைக் குறிக்கிறது,

கண்டுபிடிப்புகள்

[தொகு]

நவம்பர் 1936 இல், ஒரு கிராமவாசி ஒரு விநாயகர் சிலையை கண்டுபிடித்தார். கலை மற்றும் தொல்பொருள் சேவைகள் ( ஓதீட் டீன்ஸ்ட் ) அமைப்பானது மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் சிலை ஒரு சிறிய கல் கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருந்ததைக் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த ஆண்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின்போது இடிபாட்டு நிலையில் இருந்த ஒரு கோயிலைக் காணமுடிந்தது. அடித்தளம் எவ்விதப் பாதிப்பும் இன்றி இருப்பதைக் காண முடிந்தது. அந்த அகழ்வாராய்ச்சியின்போது கூரையின் சில பகுதிகள் மற்றும் மட்பாண்டங்கள், சிலைகள், கல்லால் ஆன பெட்டி, மற்றும் லிங்கம் போன்றவை உள்ளிட்ட சில கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அகழ்வாராய்ச்சி நடந்த இடமான "கெபாங்" என்ற இடத்தின் பெயரே இந்த கோயிலுக்குச் சூட்டப்பட்டது. அதன் கண்டுபிடிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும்போது, கோயில் சுவர் மற்றும் கூரையின் பகுதிகள் இடிந்து விழுந்தன, இருப்பினும் அடித்தளம் அப்படியே இருந்தது. கோயிலின் இடிபாடுற்ற பொருள்கள் மெராபி எரிமலையின் லஹார் வண்டல்களின் கீழ் புதைக்கப்பட்டது. இந்த கோயில் 1937 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை வான் ரோமண்ட் என்பவரால் புனரமைப்பு செய்யப்பட்டது.

அமைப்பு

[தொகு]

கெபாங் கோயில், இந்து கோயிலுக்கான அம்சங்களைக் கொண்டு அமைந்துள்ளது. அக்கோயிலின் சதுர அடித்தளம் 5.25 x 5.25 மீட்டர் ஆகும். கோயிலின் உயரம் 7.75 மீட்டர் ஆகும். உள்ளே செல்வதற்கு நுழைவு படிக்கட்டுகள் எதுவும் இல்லை, அல்லது ஏற்கனவே அவ்வாறு இருந்து பின்னர் அழிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்தக் கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. போர்ட்டலின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு மாடங்கள் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் வலது புறத்தில் நந்தீஸ்வரரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 1989 இல் நந்தீஸ்வரர் சிலை திருட்டு போனது. நந்தீஸ்வரா சிலைக்கு எதிர் புறத்தில் ஒரு காலா எனப்படுகின்ற பைரவர் சிலை இருந்திருக்க வேண்டும். இருப்பினும் இங்கு இதுவரை எந்த மகாகாலன் சிலையும் கண்டுபிடிக்கப்படவில்லை. உள் அறையில் அறையின் மையத்தில் ஒரு யோனி வைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற சுவரில் கோயிலின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் மூன்று மாடங்கள் போன்ற அமைப்புகள் உள்ளன. அவற்றில் வடக்குப்புறம் மற்றும் தெற்குப்புறம் ஆகியவற்றில் இடங்கள் காலியாக உள்ளன. இருப்பினும் மேற்கு பக்கத்தில் ஒரு விநாயகர் சிலை ஒரு யோனியில், குழாய் போன்ற அமைப்புடன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. யோக்யகர்த்தா மற்றும் அருகிலுள்ள மற்ற இந்து கோயில்களுடன் ஒப்பிடும்போது, கெபாங் கோயில் ஒரு தனித்துவமான கட்டடக்கலை பாணியைக் கொண்டுள்ளதை அறியமுடியும். கூரையில், தெய்வீகத் தன்மை வாய்ந்த சிறிய தலைகள் ஒரு ஜன்னல் சட்டகத்திலிருந்தும், காணும் வகையில் அமைந்துள்ளன. சிறிய அளவிலான தேவதை போன்ற தெய்வ உருவங்கள் அங்குள்ள மாடங்களில் காணப்படுகின்றன. அப்பகுதி கூடு என்று அழைக்கப்படுகிறது. அவ்வகையான கூரையில் அலங்காரங்கள் கொண்ட அமைப்பினை மத்திய ஜாவாவின் டயங் பீடபூமியில் உள்ள டயங் கோயில்களில் உள்ள பீமா கோயிலில் காண முடியும். கோயிலின் மேற்பகுதி ரத்னாவால் முடிசூட்டப்பட்டுள்ளது. கோயிலின் முற்றத்தில் அதன் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்க அமைப்புகள் உள்ளன.

குறிப்புகள்

[தொகு]
  • கோயிலின் இருப்பிடம் பற்றிய யோககர்த்தா மாகாணத்தின் தொல்பொருள் அலுவலக தகவல் வாரியத்திலிருந்து பெறப்பட்டது

வெளி இணைப்புகள்

[தொகு]